Home செய்திகள் திலீபனின் புன்னகை இழந்த முகம்!

திலீபனின் புன்னகை இழந்த முகம்!

382 Views

தியாக தீபம் திலீபனின் 4ஆம் நாள் நினைவு பதிவுகளில் தவறவிடப்பட்ட ஓர் குறிப்புடன், ராஜன் தன் 5ஆம் நாள் நினைவுகளை எம்முடன் மீட்கிறார்.

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமாரன் அண்ணன் ஈரோஸ் யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த பரா அண்ணர் ஆகியோர் 4ஆம் நாள் வந்து திலீபனை பார்த்து கலந்துரையாடினார்கள். எங்கள் போராட்ட வரலாற்றில் 1986இல் கொள்கை முரண்பாடுகள் பகைமுரண்பாடாகி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புகள் மீதான தடை என தொடர்ந்த போதும், திலீபன் அன்றைய காலகட்டத்தில் விடுதலை இலக்கிலிருந்து பிறழாத ஈரோஸ் அமைப்புடன் நல்லுறவை பேணிய காலகட்டம் அது, அதன் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு எடுத்துக் காட்டாக அமைந்தது. இந்த வேளையில் ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். எண்பத்தாறாம் ஆண்டின் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் யாழ். மாவட்ட தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா உட்பட பிற அமைப்புகளின் உறுப்பினர்கள் திலீபனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தான். போராட்டம் திசைமாறி விடக்கூடாதென்ற முனைப்பினால் உருவான அமைப்புகளிடையேயான முரண்பாடுகள், இந்திய இராணுவ தலையீடு என்பன இப்போது விடுதலைப்புலிகளின் தலைமையில் மக்கள் ஓரணியில் திரண்டு போராடும் நிலையை தோற்றுவித்திருந்தது.

திலீபனின் ஐந்தாம் நாள் அதிகாலை: உதடுகள் வெடித்த இடத்திலிருந்து உப்பு பூத்த மாதிரி வெள்ளையாக வாயிருந்தது. மெதுவாக துணியால் துடைத்த வண்ணம் இருந்தோம். சின்ன சிரிப்புடன் விழித்து பார்க்கும் திலீபன் இன்று கண் விழித்துக்கூட பார்க்கவில்லை. நான் நவீனன்களை பார்க்கிறேன். அவர்கள் என்னை சோகமாக பார்க்கிறார்கள். ஒரு குழந்தை குடங்கி படுப்பது போல் திலீபன் படுத்திருந்தார். வழமையாக நல்லூர் வீதியை சுற்றிவரும் நான் மேடையால் இறங்காமலே திலீபன் பக்கத்திலேயே இருந்தேன். திலீபன் பக்கத்திலேயே 24 மணிநேரம் இருக்க வேண்டும் என்பது அவர் எனக்கு இட்ட அன்புக்கட்டளை.

ஆரம்ப காலங்களில் கிட்டண்ணா தங்குமிடம் தான், இராணுவ அரசியல் மக்கள் சந்திப்பு அனைத்து வேலைகளும் நடக்கும் செயலகமாக இயங்கும். யாழ். குடா முழுமையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த பின் அரசியல் பிரிவிற்கு என்றொரு செயலகம் யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் முன் இயங்கத் தொடங்கியது. இந்த செயலகத்தின் நிர்வாகத்தை கப்டன் ரமேஷ் மாஸ்டர் பார்த்தார். நான் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளராக இருந்தேன். இரு நவீனன்கள் திலீபனிற்கு உதவியாக இருந்தார்கள். மாறன் துஸ்யந்தன் ஆகிய போராளிகளும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருமே மேடையை சுற்றிய நிர்வாகத்தை செய்ய, செயலக நிர்வாகத்தை ரமேஷ் மாஸ்டர் பார்த்ததை இங்கு, இன்று நினைவு கூரவேண்டும். ஒலிபெருக்கியில் பாட்டு போட்டால் திலீபன் நித்திரை குழம்பி விடும் என கருதி, கண் விழிக்கும் மட்டும் பாட்டு போடவேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் விழி திறந்து உதிர்க்கும் ஓர் சிறிய சிரிப்புக்காக எல்லோரும் காத்திருந்தோம். மக்கள் மேடை முன் மயான அமைதியாக குந்தியிருந்தார்கள். அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்கள் திலீபன் மேடையை எட்டிப்பாரத்த வண்ணம் இருந்தார்கள்.

இந்நிலையில் திலீபனின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முல்லைத்தீவில் திருச்செல்வம் என்ற போராளியும், மட்டக்களப்பில் மதன் என்ற போராளியும் தொடர் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம் இருந்தமையும் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் பலரும் தாமாகவே நல்லூரிலும், பிற இடங்களிலும் உணாவிரத போராட்டங்களை தொடங்கினர். இப்படி எல்லோரும் திலீபனின் உண்ணாவிரதத்தை முடிவிற்கு கொண்டுவர உரிய தீர்வை வழங்க வேண்டும் என்று இந்திய அரசிற்கு  அழுத்தம் கொடுத்தார்கள்.

மத்தியானம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை, திலீபன் கண்களை திறந்து பார்த்தார். ஆனால் அவரின் வழமையான அந்த புன்சிரிப்பு அந்த முகத்தில் இல்லை. அவ்வேளை மக்கள் ஆரவாரப்பட்டார்கள். ஏன் என்று மேடையை சுற்றியப் பார்த்த போது, இந்திய இராணுவத்தின் யாழ். கோட்டை பொறுப்பதிகாரி கேணல் பரா குழு மேடையை நோக்கி அமைதியாக வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். எல்லோர் மனதிலும் ஏதோ இன்று ஓர் நல்ல செய்தி கிடைக்கப் போகின்றது என்று ஆவலுடன் நின்றோம். அவர் வந்தார், திலீபனை பார்த்தார், கும்பிட்டார் திலீபனுடன் நின்றவர்களுள் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அவருடன் உரையாடினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் சென்று விட்டார்கள். கதைத்தவர்களிடம் கேட்டேன். அவர் மேலிடத்திற்கு தான் பார்த்ததையும், உங்கள் வேண்டுகோள்களையும் கூறி, நல்ல செய்தியுடன் வருவதாக சொன்னார். பின்பு அவர் வரவே இல்லை. நல்ல செய்தியும் வரவில்லை. அன்று களத்தில் நின்ற இராணுவ அதிகாரிகள் உண்ணமையை உணர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இன்று அவர்கள் எழுதும் புத்தகங்கள் சான்றாக உள்ளது. என்ன செய்வது அரசியலில் முடிவு எடுப்பவர்கள் அரசியல்வாதிகள், கருவிகளாக செயற்படுகிறவர்கள் படையினர்.

இன்றுடன் என் மனதில் இருந்த நம்பிக்கையும் இல்லாது போய்விட்டது. நானும் திலீபனும் திருமாஸ்ரிடம் சென்று, மாஸ்டர் உண்ணாவிரதம் இருக்க போறேன். என்ன நடக்கும் என்று திலீபன் கேட்ட போது அவர் கூறிய விளக்கங்கள் அதனை ஒரு வகுப்பாகத்தான் பார்க்கலாம். அவர் கூறிய கருத்தில் ஒன்று “திலீபன் டிக்சிற் உன்னை சாகவிடுவார்” என்பது. அந்த தீர்கதரிசனமான கருத்து மெய்யாக போகிறதோ என என் மனதில் தோன்றியது.

இன்றைய நவீன உலகத்தில் மன்னர் ஆட்சிக்கொப்பான ஆட்சியை நிறுவுவதற்கான முனைப்பிலுள்ள ராஜபக்ச அரசு, தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முனைகிறது. அவ்வேளையில், தமிழர் பிரதிநிதிகளென விடுதலைப்புலிகள் அமைப்பினர் இந்திய, இலங்கை அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆயுத கையளிப்பு, உத்தியோகபூர்வ அலுவலகங்கள், பேச்சுவார்த்தைகள் எனத் தொடர்ந்தன. அங்கு இந்திய அமைதிக்காப்புப் படையின் கட்டுப்பாட்டிலான ஓர் நிர்வாகம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. திலீபன் உண்ணா நோன்பிருந்தபோது, ஓர் உத்தியோகபூர்வ போர்நிறுத்தம் இருந்தததால் அகிம்சை வழி அரசியல் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரை பயங்கரவாதியென முத்திரை குத்துவதும், அவர் நினைவேந்தலை பயங்கரவாத முன்னெடுப்பு என்று முத்திரை குத்த விளைவதும் சிங்கள அரசுகளின் மக்கள் எழுச்சியின் மீதான பயத்தினையே காட்டி நிற்கிறது.

ஓர் சமாதான காலத்தில் அகிம்சை வழியில் நீதிகேட்டவர் இன்றும் பயங்கரவாதி என்றால், அதன் பின்பும் ஆயுதம் தாங்கி இன்று உங்களுக்கு சேவகம் செய்யும் கருணா, பிள்ளையான், டக்ளஸ் சமாதான தூதுவர்களா? மொத்தத்தில் ஜனநாயகம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு அரச பயங்கரவாத நடவடிக்கைகளையும், அடக்குமுறைகளையும் இன்றைய சிங்கள அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை இன்றைய அரசியல் தலைமைகளாக தம்மை காட்டிக் கொள்பவர்களும், ஏனைய நாடுகளும் பிராந்திய நலன்களிற்காக தொடர்ந்து தமிழர் பலிக்கடாவாக்கப்படுகிறதை கண்மூடி, வாய்பொத்தி மௌனமாக பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையை எப்படி மாற்றலாம் என்ற பொறிமுறைமை பற்றி தாயகத்திலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள அறிவார்ந்தோர் உட்பட அனைத்து மக்களும் வயது வேறுபாடின்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை செயல் வடிவம் பெறும்போது திலீபன் கனவு நிறைவேறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version