Home செய்திகள் தந்தையின் தவிப்பும், தலைவனின் சந்திப்பும்!

தந்தையின் தவிப்பும், தலைவனின் சந்திப்பும்!

இன்று தியாகி திலீபனின் அவர்களின் உண்ணாநோண்பின் 3ம் நாள், 33 ஆண்டுகளின் முன், தியாக தீபம் திலீபன் அவர்களின் உண்ணா விரத ஒழுங்குகளை உடனிருந்து கவனித்த ராஜன்,  இன்றைய நாளை எம்முடன் நினைவு கூர்ந்தார்.

திலீபன் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இளைஞன். எமது இனத்தின் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் புரட்சி மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்ற இளம் தலைமுறையின் கருத்தால் ஈர்க்கப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொள்கிறான்.

தீலிபனை விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் சுகந்தன் அண்ணா, அதன் பின்னர் கந்தையா அண்ணரின் வழிநடத்தலில் அரசியல் பணி செய்து அந்த காலத்தில் வடக்கில் இருந்த சிறு எண்ணிக்கையான போராளிகள் எல்லாம் தங்கள் சொந்த சைக்கிளில் ஓடி இயக்கத்தை வளர்த்தார்கள்.

இந்த வேளையில் தீலிபன் தன் தகப்பனாரின் சயிக்கிளையும்.. அவரின் ஸ்கூட்டரை யும் பாவித்து இந்த விடுதலைப்போராட்டத்தை யாழ் மாவட்டம் எங்கும் சென்று அமைப்பை வளர்தெடுத்தார். பின்னர் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பினை ஏற்று பணியாற்றினார்.

உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து மறுநாள் முதல் அவர் தந்தை ஒவ்வொரு நாளும் மேடையின் ஓரமாக நாலு மூலைகளிலும் மாறி மாறி நின்று கண்ணீருடன் நின்ற தவிப்பை வார்த்தையால் எழுத முடியாது. மற்றவர்கள் அணு அணுவாக உயிர் போவதை பார்ப்பதற்கும் பெற்ற தகப்பன் பார்ப்பது என்பதும் துயரின் இனுமொரு அத்தியாயம்.

செப் 19,1987 – தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதம் ஐந்தாம் நாள் – தமிழ் வலை

மூன்றாம் நாள் உடல் சோர்ந்து சிறுநீர் கழிக்க முடியாத வேதனையிலும், உடல் வலி, தலைவலியுடன் திலீபன் உழன்ற வேளைகளில் நாம் அவர் தலையையும் கால்களையும் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இந்த வேளையில். தீலிபன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை முழு மக்களையும் ஆட் கொண்டிருந்தது. பக்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து கவிதைகளும், விடுதலை வேண்டிய கருத்துக்களும் பகிர்ந்து கொண்டவர்களும் இந்த உபாதையிலிருந்தும் திலீபன் விடுபட வேண்டும் என்றும் மக்கள் ஒருங்கிணைந்த தொடர் உண்ணா விரதமாக தொடர்வோம் என்றும் ஒரு சிலர் திலீபன் நீராவது அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

பலரும் இதனை தான் வலியுறுத்தினார்கள். எனினும் இதில் இருவர் மாத்திரம் எடுக்கப்பட்ட முடிவுக்கானத் தீர்வு கிட்டும் வரை நீராகாரம் கூட உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தைத் தொடர்வது என்ற முடிவில் மாறாமல், இருந்ததை என்னால் உறுதியாக கூற முடியும். ஒன்று திலீபன் மற்றது தேசியத்தலைவர்.

இரண்டாம் நாள் இரவு தலைவர் திலீபனை பார்க்க வந்த போது இடம்பெற்ற இருவரின் மேடை கலந்துரையாடலாக இருந்தாலும் சரி தனிப்பட்ட கலந்துரையாடலாக இருந்தாலும் சரி, திலீபனுடன் கூட இருந்து பங்கு பற்றியவன் என்ற வகையில் என்னால் இதனை உறுதியாக கூறமுடியும்.

பின்னர் மேடையிலிருந்து தீலிபன் தலைவரிற்கு எழுதிய கடிதத்தை கொண்டு போய் தலைவரின் கையில் கொடுத்தவன் என்றவகையிலும் மக்களிற்கு எழுதிய கடிதத்தை இறுதி வணக்க கூட்டத்தில் வாசித்தவன் என்ற வகையிலும் இவர்களின் உறுதிப்பாடு இறுதி வரை எடுத்துக் கொண்ட கொள்கையிலும், முடிவிலும் உறுதியாகவே இருந்தனர் என்பதற்கான சான்றாகும்.

தீலிபனிற்கும் தலைவரிற்கும் மேடையில் நடந்த கலந்துரையாடல் என்பது இந்திய அரசு அதிகாரிகளுடன் பலாலி தளத்தில் நடந்தது என்னவென்பது தொடர்பாகவே அமைந்தது. தலைவருடைய வரலாற்றில் கொள்கையில் சமரசம் செய்த சம்பவம் ஒரே ஒரு முறை நடந்தது.

( தொடரும்)

Exit mobile version