Home நேர்காணல்கள் இனப்படுகொலையில் சிக்கிய எமது மக்களின் கதறல் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது….-போராளி மருத்துவர் வாமன்

இனப்படுகொலையில் சிக்கிய எமது மக்களின் கதறல் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது….-போராளி மருத்துவர் வாமன்

193 Views

இறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர்.

மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்;ததிலே அங்கு பணியாற்றிய ஒவ்வொரு மருத்துவர்களையும் இறைவ னுக்கு நிகராகவே எமது மக்கள் நேசித்தார்கள் எநத்வொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவை அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையுமஇ; மக்களின் வலிகளையும்இ கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டவர்கள்.

இவர்களில் தர்மரத்தினம் வாமனும் ஒருவர் இவர் தாயக விடுதலை என்ற இலட்சியதற்காக தனது காலை இழந்த நிலையிலும் ஒரு மருத்துவ போராளியாக முள்ளிவாக்கால் மண்ணில் கடைசி நிமிடம்வரை தனது பணியினை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்;

ஐக்கிய நாடுகள் சபையும்இ அனைத்துலக சமூகமும் எமது இனத்தை கைவிட்ட நிலையில் சாட்சிகள் அற்ற இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் வான்படையும்இ கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாகைளை தேடித்தேடி தாக்கியழித்த போதும்இ தமது உயிர்களை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிய மருத்துவர்களில் வாமனும் ஒருவர். இவர் தமிழீழ சுகாதார சேவைகளின் துணைப் பொறுப்பாளராக இருந்தவர் தற்போது பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச சனநாயக பொறிமுறைகளிற்கு உட்பட்டு தன்னால் முடிந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் முள்ளிவாக்கால்; 10வது நினைவேந்தல் தினத்தை உலக் தமிழர்கள் நினைவு கூரவுள்ள நிலையில் இலக்கு மின்னிதழுக்காக அவர் வழங்கிய நேர்காணல்.

கேள்வி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்து தமிழினம் தற்போது நிற்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையானது அனைத்துலக சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் நீங்கள் என்ன கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றீர்கள்?

தமிழரின் பேரரசை அழித்தொழிக்கும் வரலாற்று அத்தியாயத்தின் முடிவுகாலத்தில் நாடற்றவர்களாக தமிழர்கள் உலகெங்கும் பரவித் தப்பி வாழ்கிறோம். அதன் ஓட்டத்தில் தோற்றம்பெற்ற தன் இனத்தின் தலைமையையே தமிழினம் இழுந்திருக்கிறது.

தென்னாசியப் பிராந்தியத்தின் உலகப் பொருளாதாரப் போட்டியாளர்களின் நலன்களுக்கு போதுமான அளவுவரை மட்டுமே இலங்கையின் இனப்படுகொலை விவகாரம் எனும் பந்து மனிதவுரிமைகள் மைதானத்தில் விளையாடப்படுகிறது. இந்த நலன்கள் சார்ந்து பணிந்து விட்டுக் கொடுக்க முடியாத அரசியல் தேவையாகவே தமிழின இறைமை அடிப்படையிலான உரிமை அமைந்து கிடக்கிறது.

இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு தமிழர் தாயகத்தை வலுப்படுத்துவது ஒன்று மட்டுமே தீர்வாகுமானால் மாத்திரமே இலங்கையின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை ஒரு முதலீடாக இந்தியா எடுத்தாழும்.

உலக ஒழுங்கில் இந்தியாவுடன் சாரும் நாடுகள் இந்த அடிப்படையிலேயே இலங்கையின் இனப்படுகொலையைக் கையாளும்.

இந்த வல்லாண்மைப் போட்டிகள் தெளிவாகத் தெரியும் வகையிலேயே இலங்கைப் பாராளுமன்ற இழுபறியில் ஈழத் தமிழரின் ஜனநாயக சக்தியை உலகம் பாவித்துக் கொண்டுள்ளது.

இந்த உலகத்துக்கு மனிதவுரிமைகளை நிறுவுவது மட்டுமே தேவையாக மாறும் நாள் சில நூற்றாண்டுகள் தொலைவிலேயே உள்ளது.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை வன்னியில் இருந்து வெளியேற்றிய சிறீலங்கா அரசு ஒரு சhட்சியமற்ற இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது. எனவே சிறீலங்கா அரசு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையின் சhட்சியமாக அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.

அதிஸ்ட வசமாக அனேகமான வைத்தியர்கள் போரில் தப்பிப் பிழைத்துத் தமது சாட்சியங்களை முடிந்தளவுக்கு அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும் அவர்களது சாட்சியங்கள் உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பப் போதுமானதாக இல்லை. தமது கண் முன்னே நடைபெற்ற பல உண்மைகளைக் கண்ட சில நடுநிலைச் சாட்சியாளர்களாக அமையக் கூடிய வைத்தியர்கள் விளைவுகளைக் கருதி அமைதி காத்து வருவதை மறுப்பதற்கில்லை. சர்வதேச நீதி விசாரணை சாத்தியமாகும் தருணத்தில் அனைவரும் மௌனம் கலைப்பார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் அழுத்தத்துக்கு மத்தியிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைத்தியர்கள் ஊடகத்தில் பொய்யாகச் சாட்சியமளிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் தஞ்சமடைந்த பின்னர்; வைத்தியர் வரதராஜா அழுத்தத்திற்குப் பணிந்தே கூறியதாகப் பின்னாளில்; பகிரங்கப்படுத்தியுள்ளார். வாகரையில் மற்றும் வன்னியில் போர் நடந்தபோது ஊடகங்களுக்கு உண்மைகளைக் கூறியதனால் போர் முடிந்த வேளையில் மூச்சுத் திணறும் நெஞ்சுக் காயத்துடன் கைது செய்யப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் அதே வைத்தியர் வரதராஜா. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைவரை சென்று தனது சாட்சியத்தை அவர் பதிவு செய்திருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தனது சாட்சியங்களை ஒரு திரைப்படமாக்கும் படப்பிடிப்பு முயற்சியிலே அவர் தற்போது உள்ளார். அதற்காக நிதி உதவிகளை தேசப்பற்றாளர்களிடம் அவர் பெரிதும் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி: வன்னிப் போரின் போது சிறீலங்கா அரசு மருந்தையும் உணவையும் போர் ஆயுதாமாகப் பயன்படுத்தியிருந்ததா?

ஆம். அரச மருத்துவ நிர்வாகம் கோரிய மருந்துகளில் போர்க்காயங்களை பராமரிக்கத் தேவையான குருதி மாற்றீட்டு பைகள் மயக்க மருந்துகள் அன்ரிபாயோடிக் மருந்துகளை அனுமதிக்காமல் தடை செய்தது இலங்கை அரசு. அனுமதிக்கப்பட்ட மருந்துகளை எடுத்து வரும் போது வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கொண்டுவர முடியாதபடி இராணுவம் தடுத்ததாக முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி வரதராஜா வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆபத்துக்களை எதிர்கொண்டு அத்தியாவசியமான மயக்க மருந்துகள் எப்படியோ வன்னிக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதால் இன்று பலர் உயிர் பிழைத்து வாழ்கிறார்கள் என்பதை இங்கு கூறியாகவேண்டும்.

வன்னிக்குள் தொண்டு நிறுவனங்களால் எடுத்துவரப்பட்ட உணவு வாகனத் தொடரணியை எறிகணைத் தாக்குதலால் தடை செய்ய முற்பட்டது இலங்கை அரசு. விசுவமடு கூட்டுறவுச் சங்கத்தின் கையிருப்பில் இருந்த உணவுச் சேமிப்பை இலக்கு வைத்து செல் தாக்குதல் நடாத்தியது. பெருமளவு அரிசிச் சேமிப்பு எரிந்து அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மேய்ச்சல் நிலங்களில் நின்ற கால் நடைகள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கியழிக்கப்பட்டதை நேரில் காண முடிந்தது. இதனால் பட்டினிச் சாவு இனவழிப்பின் உபாயமாக்கப்பட்டது.

கேள்வி: முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை மீது சிறீலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு பல தடவைகள் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பின் வடிவமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா?

அரச சுகாதார சேவைகளின் நோயாளர் காவு வண்டிகள்இ தியாகி திலீபன் மருத்துவசேவை வாகனங்கள், தமிழீழ சுகாதார சேவைகளின் தெற்று நோய்த் தடுப்புப் பிரிவு நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் போன்றவற்றின் மீது இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதலை நடாத்தியது இலங்கை அரசு. இதில் பல திறன்மிக்க மருத்துவ ஆளணிகள் கொன்றழிக்கப்பட்டனர். இது காயப்படுத்தப்படும் நோய்வாய்ப்படும் மக்களை காப்பாற்றிவிடாமல் தடுப்பதாகும்.அத்துடன் இது தொற்று நோய்கள் பரவ வைத்து நோயால் மக்களைச் சாகடிக்கும் இனவழிப்பு யுக்தியாகும். முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த மலேரியா நோய்க் கிருமிகள் ஊடுருவிய இராணுவ அணிகளால் ஏதோ ஒரு வழியில் மீண்டும் வன்னிக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் மலேரியா நோய் மீண்டும் ஊடுருவும் இராணுவ வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இனங்காணப்பட்டது. இதனை எமது தமிழீழ சுகாதார சேவை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவே கண்டுபிடித்துத் தடுத்தது.

இந்த இனவழிப்பு யுக்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாதபடி தமிழரின் சுகாதார அணிகள் ஓரணியாகி முறியடித்துக்கொண்டிருந்தன.
இதன் காரணமாக பொறுமையிழந்த இலங்கை அரசு மருத்துவ மனைகளை நேரடியாகத் தாக்கத் தொடங்கியது.

செயற்பாட்டில் இருந்த அனைத்து மருத்துவ மனைகளும் தாக்குதலுக்குள்ளாகின. செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ மனைகளைக் காப்பாற்றுவதற்கென ஆழ்கூறுகளை எடுத்துச் சென்று பாதுகாப்பு அமைச்சிடம் கொடுத்ததும் சில மணி நேர இடைவெளியில் அதே மருத்துவ மனைகள் தாக்கியழிக்கப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில், முகட்டில் தெளிவான சிலுவைக் குறியிடப்பட்ட நான் பணியில் நின்ற, உடையார்கட்டு பாடசாலை இடம்பெயர் மருத்துவமனை மீதும் அரசால் அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் போர் தவிர்ப்பு வலையத்தில் கூடிய மக்கள் மீதும் வீதிகளில் நெரிசலாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள்மீதும் ஒரே நேரத்தில் செறிவாக்கப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள்; நடாத்தப்பட்டன. இதில் தலத்திலேயே பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட நூற்றுக்கணக்கானோர் எங்கள் மருத்துவமனைக்கு பாரிய காயங்களோடு கொண்டுவரப்பட்டார்கள். அந்த வேளையில் எங்கள் மருத்துவ மனை தாக்கப்படுவதை தடுப்பதற்காக அரச சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தொலை பேசியில் அரசின் சுகாதார உயர் பீடத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமை பற்றிப் பேசினார்.

மருத்துவமனை தொடர்ந்தும் இயங்குவதைத் தெரிந்துகொண்ட அரசு மீண்டும் அடுத்த அரைமணி இடைவெளிக்குள் மருத்துவ மனைக்குள் துல்லியமாகத் தாக்கியதில் மின்னியந்திரங்கள் நின்றுவிட கடமையில் நின்ற பெண் தாதி செத்து வீழ்ந்தார். காயமடைந்து வந்தவர்கள் மீண்டும் காயமடைந்தார்கள். காயங்களைக் கொண்டு வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் மருத்துவ மனைமீது தாக்குதல் நடத்தப்படுவதையும் மக்கள் சிதறி ஓடியதையும் வேவு விமானத்தின் துல்லியமான காணொளிக் கருவி மூலம் ஜனாதிபதி உட்பட படையதிகாரிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். இதை நான் பூசாவில் அடைக்கப்பட்டு இருந்தபோது மனம் திறந்த விசாரணை அதிகாரி ஒருவர் என்னிடமே கூறினார். இது அரசின் உயர்பீடம் திட்டமிட்டே நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக உறுதிபடக் கூறுவேன்.

கேள்வி: கடந்து சென்ற பத்து வருடங்களில் உங்களால் அங்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடபட முடிந்துள்ளதா?

இலங்கைக் குடிமகன் ஒருவரின் உயிரைக் காப்பதற்காக (அரச இராணுவச் சிப்பாய் உட்பட) பயங்கரவாதியாக உலகால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவக் குழாமில் ஒருவனாக தற்காப்பின்றி காயப்பட்டபோதும் உயிர் காக்கும் பணியில் நான் இருக்க ஒரு நூறு பேரைக் கணப்பொழுதில் கொன்று வீழ்த்தியது இலங்கைக் குடிமக்களின் அரசு. அதனை வேடிக்கை பார்த்தபடி மனிதவுரிமை பேசி முண்டு கொடுக்கிறது உலகு. இதற்காக நீதி கேட்டுப் போராடுவதிலே தசாப்தம் கடந்து முரண்பட்டுக் கிடக்கிறது தமிழரின் அமைப்பு. இந்தப் புறநிலையில் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடி அதன் தோல்வியின் நீட்சிகளைக் கண்டுணரும் கணங்கள் மேலும் கொடுமையானவை. இந்த வகையில் சொல்லப்போனால் போரில் உயிர்தப்பியதே என்போன்றவர்களுக்கு மிகவும் துரஸ்டமானது என்றே நினைக்கின்றேன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version