Home செய்திகள் மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்

மாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்

222 Views

எங்களிடம் பல்வேறு முதலீட்டு திட்டங்கள்   உள்ளன  அவற்றை  அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்  என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  எம்முடனான சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம்,அதன் எல்லைகள்,மக்கள் பரம்பல் பற்றி பற்றி சற்று விளக்கமுடியுமா?

மட்டக்களப்பு மாநகரசபையின் தெற்கு எல்லையாக மஞ்சந்தொடுவாயும் வடக்கு எல்லையாக தன்னாமுனையும் கிழக்கு எல்லையாக வங்களா விரிகுடாவும் மேற்கு எல்லையாக களப்பும் உள்ளது.சுமார் 93ஆயிரம் பொதுமக்கள் வாழ்கின்றனர்.சுமார் 63ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.மாநகரசபைக்குள் 94வீதமான தமிழர்கள் வாழும் நிலையில் 06வீதமான  முஸ்லிம் மக்கள் வாழுகின்றனர்.

நடுத்தரமான மக்கள் அதிகளவில் வாழும் பகுதியாக மட்டக்களப்பு மாநகரசபை காணப்படுகின்றது.அதேபோன்று அதிகளவான அரசாங்க உத்தியோகத்தர்களையும் கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளம். அது தனது வரலாற்றையும்,மொழியையும், பண்பாட்டையும் முன்னிறுத்தும் நகராக  அமைந்திருக்க வேண்டும்.இந்த வகையில் மாநகர சபை எடுத்துள்ள முன்முயற்சிகளை கூறமுடியுமா?

மட்டக்களப்பு மாநகரத்தின் அடையாளத்தினை பேணிக்காக்கவேண்டும் என்பதில் நாங்கள் மிகவம் தெளிவாகவுள்ளோம்.நாங்கள் மாநகரசபையில் பதிவியேற்ற காலத்திலேயே இதனை செய்வதற்காக விசேட நிலையியற் குழுவினை உருவாக்கினோம்.எமது வரலாறு,  கலை,கலாசார பண்பாட்டு விடயங்களை அடுத்த சந்ததிக்கு வழங்கவேண்டும்,அழிந்தவற்றினை புத்துயிரளித்து வழங்க வேண்டும்,இருக்கின்றதை மேம்படுத்தவேண்டும் என்பதற்காகவே இந்த நிலையியற் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

அதன் ஊடாக மாதாந்தம் பௌர்ணமி விழாக்களை நடாத்திவருகின்றோம்.அந்த விழா ஊடாக எமது அழிந்துபோன கலைகளை தேடி கண்டுபிடித்து அரங்கேற்றி வருகின்றோம்.கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றோம்.எமது மாவட்ட பண்பாடுகளில் முன்னைய காலத்தில் வரவேற்பு நிகழ்வுகளில் கூத்துகள் இருந்துவந்தது.பின்னர் அது இல்லாமல்போயிருந்தது.ஆனால் அந்த செயற்பாட்டிற்கு மீண்டும் புத்துயிரளித்துள்ளோம்.

இதேபோன்றுதான் எமது சுற்றுலா அபிவிருத்தி திட்டங்கள் கூட எமது கலைகலாசார பண்பாடுகளை பாதிக்காத வகையிலேயே செயற்றிட்டங்களை உருவாக்கி யுள்ளோம்.அதேபோன்று பாரம்பரிய உணவுவகைகளை புத்தியிரளிக்கவென செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.ஆனால் கடந்த வருடமும் இந்த வருடமும் சித்திரை மாதத்தில் எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டது.சில தடங்கள் ஏற்பட்டுள்ளது எனினும் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வோம்.

மேற்குறித்த விடயங்களை உள்ளடக்கியதாக  அங்கு ஒரு அருங்காட்சியக வளாகத்தை அமைக்க முடியாதா?

நான் அரசியலுக்கு வரும் முன்பே இது தொடர்பான செயற்றிட்டம் ஒன்றியை இந்திய தூதரகத்திற்கு சமர்ப்பித்திருந்தேன்.மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாறினை பின்னணியை சொல்லக்கூடிய வகையில் மட்டக்களப்பு வரலாற்று கலாசார பூங்கா ஒன்றை அமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுத்திருந்தேன். மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக்கல்லூரிக்கு பின்புறமாக இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்கு காணியை தெரிவுசெய்து நடவடிக்கையெடுத்தேன்.

அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு கல்வெட்டுகளை ஆய்வுசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற காரணத்தினாலேயே அந்த இடம்தெரிவுசெய்யப்பட்டது.கலாசார அருங்காட்சியம் ஒரு பகுதியாகவும் கலாசார பூங்கா,கலாசார மேடை என்பன இணைந்து அதுவொரு வரலாற்று கலைகலாசார பூங்காவாக மாறும்.சிதறிக்கிடக்கும் கல்வெட்டுகள்,வரலாற்று பொக்கிஸங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றினை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அதனை அமைப்பதற்கான செயற்றிட்டத்தினை வழங்கினேன்.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தினை ஆட்சிசெய்த மன்னர்களின் சரித்திரங்களை வெளிப்படுத்தும் வகையிலான குறும்படங்களை தயாரிப்பதற்கான திட்டமும் என்னால் தயாரிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பல குடிகள்ääபல மன்னர்களின் ஆட்சியாக நடைபெற்றுள்ளது.

இவற்றையெல்லாம் நாங்கள் இழந்திருக்கின்றோம்.கோடாரிக்காம்புகளாக இருந்து எமது வரலாற்றினை நாமே அழித்துவிட்டோம்.ஆகவே அவற்றினை புத்தியரளித்து எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டும்.இதற்குரிய நிதி வளங்கள்,தொழில்நுட்ப உதவிகள் கிடைக்கும்பட்சத்தில் 3D வடிவங்களில் குறும்படங்களை உருவாக்கி காந்திபூங்காவில் மேடையொன்றினை உருவாக்கிஅங்கு சிறுவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்போது எதிர்கால சந்ததிக்கு மட்டக்களப்பின் வரலாற்றினை கொண்டுசெல்லமுடியும்.அனைவரும் எங்களுடன் இணைந்தால் இவற்றினை எமது அடுத்த சந்ததிக்கு கொண்டுசெல்லமுடியும்.

படுவான்கரை பகுதியின் பல பகுதிகளில் பல இராசதாணிகள் இருந்திருக்கின்றது.அதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. அவை அழிந்துகொண்டிருக்கின்றது.அவற்றினையும் நாங்கள் அனைவரும் இணைந்தே பாதுகாக்கவேண்டும்.இதுவொரு கூட்டு முயற்சியாக முன்னெடுப்பதன் மூலமே சாத்தியமாகும்.செயல்வடிவமாக மாறுவதற்கு அனைவரும் ஆதரவினை வழங்கவேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குள் உள்ள வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்ற தீர்மானம் கடந்த காலத்தில் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.ஆனால் அந்த தீர்மானம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.அதனை நிறைவேற்றுவதில் உள்ள தடங்கல் என்ன?

தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆனால் அதனை அமுல்படுத்தும் நேரங்களில் தடங்கல்கள் ஏற்பட்டுவருகின்றன.கடந்த வருடம் நாங்கள் அதனை அமுல்படுத்தமுனையும்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.ஒரு சுமுகமான அபிவிருத்தி சூழலில்தான் நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை கட்டாயப்படுத்தி முன்னெடுக்கமுடியும்.ஆனால் தளம்பல் நிலையில் சூழ்நிலையிருக்கும்போது கட்டாயப்படுத்தி அதனை செய்வதற்கு காலதாமதங்கள் செல்லும்.ஆனால் எங்களது தீர்மானங்கள் சரியானதாக இருக்கும்.காலதாமதமானாலும் அமுல்படுத்தப்படும்.

 மட்டக்களப்பு இயற்கையோடிணைந்த ஒரு  நகரம்.அதன் இயற்கை வனப்பு பொலிவிழந்து வருவதாக தெரிகிறது. இயற்கைவளங்களை  அழியாமல் பேண,அதனை வலுப்படுத்த நீங்கள் ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறீர்களா?

மட்டக்களப்பின் வளம் இயற்கை என்பது எமது களப்பாகவுள்ளது.ஆனால் அந்த களப்பினை நாங்கள் முறையாக  பயன்படுத்துகின்றோமா என்றால் அதுகேள்வியாகவே உள்ளது.ஒவ்வொரு பொதுமகனும் சுயநலமாக சிந்திப்பதுவும் ஒரு காரணம்.அதில் இருந்த பல மீன் இனங்கள் அழிந்துவிட்டன,தாவரங்கள் அழிந்துவிட்டன.மட்டக்களப்பு மாநகரசபையினால் ஒரு இலட்சம் மரங்களை நடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக பலர் மரநடுகைக்கு ஊக்கப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் இயற்கையினை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மாநகரசபை முன்னெடுத்துவருகின்றது.மட்டக்களப்பு வாவியினை தூய்மைப்படுத்தி ஆளப்படுத்துற்கு தேவையான இயந்திர வசதிகள் இல்லாத காரணத்தினால் அந்த பணிகளை முன்னெடுக்கவில்லை.

கடந்த அரசாங்கத்தில் அந்த கோரிக்கைகள் முன்வைத்தபோதும் கிடைக்கவில்லை.ஒரு இயந்திரத்தினை புலம்பெயர் மக்கள் பெற்றுக்கொடுக்குமிடத்து மட்டக்களப்பு வாவியினையும் எங்களால் பாதுகாக்கமுடியும்.அதேபோன்று வரலாற்றுசிறப்புமிக்க இடங்களையும் பராமரிக்கவேண்டிய தேவையிருக்கின்றது.மட்டக்களக்களப்பு கச்சேரி,கோரியடியில் இருக்கும் பழைமையான வெளிச்சவீடு போன்றவற்றினையும் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றோம்.

மாநகரசபை எதிநோக்கும்  குறிப்பிடத்தக்க சவால்களாக அல்லது பிரச்சனைகளாக  நீங்கள் எவற்றை கருதுகிறீர்கள் ?

மட்டக்களப்பு மாநகரசபையினை வினைத்திறன்மிக்க சபையாக கொண்டுசெல்வது என்பது ஒரு சவாலான விடயமாகவே இருக்கின்றது.பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் உள்ளதனாலும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாலும் பல சவால்களை வெற்றிக்கொள்ளும் நிலையிருக்கின்றது.

நிதியீட்டங்கள் பெரும் சவாலகாவுள்ளது.மாநகரசபை நிதியில் பெரியளவிலான அபிவிருத்திகளை செய்யமுடியாதுள்ளது.பொதுமக்கள் மாநகரசபைக்கு செலுத்தவேண்டிய வரியை சரியான முறையில் சரியான நேரத்தில்செலுத்ததாதும் ஒரு சவாலகவுள்ளது.

இருந்தபோதிலும் சில அமைச்சுகள் ஊடாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் நிதிகளைப்பெற்று எமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

கடந்த ஆட்சியில் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.ஆனால் இந்த ஆட்சியில் அவை நடைபெறுமா என்ற சந்தேகம் இருக்கின்றது.கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட திட்டங்கள் இன்று சிலவற்றின் உட்கட்டுமான திட்டங்களுக்கே அனுமதி கிடைக்கும் நிலையுருவாகியுள்ளது.எமது மாநகரசபையில் எந்தவிதமான ஊழலுக்கும் இடமளிப்பதில்லை.

அரசாங்கத்தின் மதீப்பீடுகளுக்கு அதிகமான வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாநகரசபை ஊடாகமுன்னெடுத்துவருகின்றோம்.இதன்காரணமாக வெளியில் உள்ள ஒப்பந்தகாரர்கள் எங்களை விமர்சிக்கும் நிலையேற்படுகின்றது.ஆனால் நன்மையடைவது எங்கள் பொதுமக்கள்.அத்துடன் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மிகவும் குறைந்த அளவிலான வாக்குகளில் உறுப்பினர்களாக வந்தவர்கள் மக்களினால் வாக்களிக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்டவர்களை விட அதிகளவில் இருப்பதனால் சில நேரங்கள் சில திட்டங்களை நடைமுறைப்படுத்தமுடியாத நிலையையும் ஏற்படுத்துகின்றது.

மாநகர வளர்ச்சியில்,அதன் இருப்பில்  எந்தவகையில்  உள்ளூர் மற்றும் புலம்பெயர் தேச மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டுமென நினைக்கிறீர்கள்?

புலம்பெயர் மக்கள் எங்களுடன் இணைந்து செயற்படமுன்வரவேண்டும்.அரசாங்கம் நிரந்தர உத்தியோகத்தர்களுக்குரிய சம்பளத்தினை மட்டுமே வழங்கும்.அதற்கு அப்பால் உள்ள அனைத்து செயற்பாடுகளும் மாநகரசபையின் நிதியின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டும்.

எங்களிடம் பல்வேறு திட்டங்கள் உள்ளது.அதனை அமுல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தேவை.குறிப்பாக உல்லாசப்பயண அபிவிருத்தி தொடர்பில் 18க்கும் மேற்பட்ட திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது.அதனை முதலீடாகவே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.புலம்பெயர் மக்கள் எங்களுக்கு நன்கொடை தரதேவையில்லை. முதலீட்டாளர்களை தேடி தரவேண்டும் அல்லது அவர்கள் முதலீடுகளை செய்யவேண்டும்.

எங்களது மக்கள் மத்தியில் உள்ள வேலையில்லா பிரச்சினைகளை தீர்க்கவேண்டுமானால் இங்கு தொழில்பேட்டைகள்,தொழிற்சாலைகள் உருவாகவேண்டும்.இலங்கையில் உள்ள 99.6வீதமான தொழில்பேட்டைகள் வடகிழக்கு மாகாணத்திற்கு வெளியில்தான் உள்ளது.

வடகிழக்குக்கு வெளியில் சென்று எமது இளைஞர் யுவதிகள் தொழில்செய்யவேண்டிய நிலையுள்ளது.அதனை தவிர்க்கவேண்டும்,பொருளாதார நிலையில் உயரவேண்டுமானால் வடகிழக்குக்குள் தொழில்பேட்டைகள்,தொழிற்சாலைகள் உருவாக்கப்படவேண்டும்.அதன் மூலமும் வேலையற்ற பிரச்சினையை தீர்க்கமுடியும் என்பதுடன் பொருளாதார ரீதியான பிரச்சினைகளும் ஓரளவு தீர்க்கப்படும்.

எமது திட்டங்கள் அனைத்தும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.புலம்பெயர் சமூகம் எங்களுக்கு முதலீட்டாளர்களாக வந்துசேரும்போது மாநகர அபிவிருத்தி மேலும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும்.நாங்கள் பல விடயங்களிலும் கவனமாக இருக்கின்றோம்.கல்வியாக இருக்கலாம்,பொருளாதாரமாக இருக்கலாம் அனைத்து விடயங்களிலும் கவனமாக செயற்பட்டுவருகின்றது.

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version