Tamil News
Home செய்திகள் நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்!

நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்!

கொரோனாவினால் இலங்கையில் நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளது. மரணம் எமது வீடு வாசல்வரை வந்துவிட்டது.

கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு தடுமாறுகிறது.

தம்மிடம் இருக்கும் பணத்தை கொரோனாவுக்கு செலவு செய்ய முடியுமா? முடியாதா? என நம் பிரதேச சபைகள் பட்டிமன்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் என்றவுடன் ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்த எம் தலைவர்கள் பலர் கொரோனா என்றவுடன் ஓடி ஒளிந்துவிட்டார்கள்.

கொரோனாவினால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்தான். ஆனால் அன்றாடம் உழைத்து சாப்பிடுகிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக புதுக்குடியிருப்பில் ஒரு தாய் தன் தோட்டத்தில் விளைந்த வத்தக பழங்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்திருக்கிறார்.

இவ் ஏழைத்தாய் தன் மகனை முள்ளிவாய்க்காலில் பறி கொடுத்தவர். பழங்களை விற்பனை செய்யாவிடில் பழுதடைந்தவிடும்.

இதையறிந்த ஒரு இளைஞர் இத் தாயின் நிலையை தன் முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

இதை முகநூலில் பார்த்த பெண் ஒருவர் உடனே 100 கிலோ வத்தக பழங்களை வாங்கி முள்ளியவளை பாரதி இல்ல சிறுவர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.

இவ்வாறு அந்த ஏழைத் தாயின் அனைத்து வத்க பழங்களும் விற்று தீர்ந்துள்ளன.

இந்த இளைஞர் தன் முகநூலில் போட்ட ஒரு பதிவானது சாதாரணமானதுதான். ஆனால் அது,

•ஏழைத் தாயின் பழங்கள் யாவும் விற்று அவருக்கு வருமானம் கிடைக்க வழி செய்தள்ளது.

•ஒரு பெண் உட்பட சிலர் இந்த பழங்களை வாங்கி வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்கும் மனோபாவத்தை கொடுத்துள்ளது.

•சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு மகிழ்வுடன் வத்தக பழம் உண்பதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

ஆம். இவ்வாறான இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். கொரோனாவை மட்டுமல்ல அதைவிடக் கொடிய எது வந்தாலும் எம்மால் எதிர் கொள்வதற்கு.

குறிப்பு – இவ் இளைஞர்போல் பலர் செய்து வருகின்றனர். இதனை ஊக்குவிப்பதற்காகவே இதை ஒரு உதாரணமாவே பதிவு செய்துள்ளேன்.

Tholar balan

Exit mobile version