தமிழ் மக்கள் சிந்திக்க வேணடிய நேரம் இது- மன்னார் ஆயர்

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயரால் கத்தோலிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை தான்.

முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழம்பிப்போய் உள்ளது. இந்நிலையில் மிகுந்த ஞானத்தோடும் நிதானத்தோடும் நாம் தேர்தலைச் சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

சமய அடிப்படையில் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர்காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாகச் சிதைத்து சின்னாபின்னமாகி விடும்.

இன்றைய சூழ்நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திக்காமல் அறிவுபூர்வமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கத்தோலிக்க மக்களாகிய நாம் நாட்டு நலனையும் நமது இனத்தின் நலனையும் முன்னிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.