நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தேசிய பெண்கள் தினம் முதன் முதலில், அமெரிக்கா நியூயோர்க்கில் 1909ஆம் ஆண்டு பெப்ரவரி 28 இல் கொண்டாடப்பட்டது. அதற்கடுத்த வருடம் மற்றைய நாடுகளுக்கும் அது பரவ,  1911 மார்ச் 19அன்று, முதல் தடவையாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, தமது வாக்கு மற்றும் சம உரிமைக்காக போராடினார்கள். 1914 மார்ச் 8 அன்று ஜேர்மனியில் முதன் முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டதையடுத்து, தொடர்ந்தும் இதே நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல சாதனைகளை புரிவதுடன், பல துறைகளிலும் சாதனைப் பெண்களாக பரிணமித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. தமிழீழ பெண்களின் சாதனைகள் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது. ஆனாலும் பல பெண்கள் இன்றும் பல இன்னல்களுக்கு முகம் கொடுப்பதையும், அடிமைத்தனங்களில் இன்னலுறுவதையும் பார்க்கலாம்.Nőnap Petrográd 1917.03.08 நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

பெண்ணிய விடுதலை என்பது பெண்கள் தெரிந்தெடுத்து பயணிக்க வேண்டிய ஒரு பாதையாகும். அதே நேரம் ஆண்கள் பெண்களின் உரிமையை மதித்து அவர்களை பாதுகாத்து, ஊக்குவித்து வழிநடத்தும் போது அழகான ஒரு சமத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால், எப்படி பெண்ணின் பங்களிப்பு உள்ளதோ, அதேபோல் பெண்களின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் பங்களிப்பு தேவை என்பது நிதர்சனமாகும்.

அதே போன்று, சக பெண்களும் உறுதுணையாகி, பெண்களின் சமத்துவத்தை மதித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க பாடுபட வேண்டும். குறிப்பாக, வீரத்திற்கும், சாதனைக்கும் சொந்தக்காரரான தமிழீழப் பெண்கள் மீண்டும் தங்கள் நிலையை சிந்தித்து, கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தி, பல புரட்சிகர மாற்றத்தை உருவாக்க முன்வர வேண்டும். எமது சமூகத்தில் தலை விரித்தாடும் அடிமைத் தனங்களில் இருந்து விடுதலையை கொண்டு வருவதுடன்,எமது சமூகத்தை ஆரோக்கியம் மிகுந்ததாக மாற்றவும் முன்வர வேண்டும்.law college convoc நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தமிழர் வரலாற்றில் ஒப்பீட்டளவில் பெண்களுக்கான முன்னுரிமையும், மதிப்பும் காலங்காலமாக வழங்கப்பட்டு வந்தாலும், காலப்போக்கில் பிற சமூகங்களின் கலாச்சார தலையீடுகளும், சமூக வல்லாதிக்கமும், இவற்றை மாற்றியமைக்க காரணமாகின.

குறிப்பாக சொத்துக்கள் பெண்களினூடாகவே பகிர்ந்தளிக்கப்படும்.  தாய்வழி பாரம்பரிய சொத்து பேணும் முறை மிகவும் முற்போக்கான ஒரு நடைமுறையாக இருந்தது. இதன் மூலம் ஓர் சமூகத்தின் சொத்துக்கள் அச்சமூகத்தின் உழைப்பால் பெறப்பட்டவை எனும் வகையிலும், அவை தம் வழித்தோன்றல்களிடமே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனும் நியாயமான சிந்தனையின் அடிப்படையிலும் விரும்பி வழங்கப்படும் ‘சீர்தானம்’   ஆக சிதறி வாழ்ந்த தமிழ் சமூக பரம்பரைகளிடையே வழக்கிலிருந்து வந்தது.

ஆனால் காலப்போக்கில் மக்கள் தொகை அதிகரிப்பு, நகர வாழ்க்கை முறை என்பவற்றினூடான சனத்தொகை அடர்த்தி அதிகரிப்பு, சமூகங்களுக்கிடையேயான நெருக்கம் என்பன கலப்பு திருமண சூழ்நிலைகளை உண்டு பண்ணியது. பல்வேறு சமூகத்தை சார்ந்த இளையோர் கூடிப்பழகும் வாய்ப்பும், திருமண பிணைப்புகளும் தாமாக எழுந்தன. இப்போது சொத்துக்கள் ஒரு சமூகத்திடமிருந்து இன்னொரு சமூகத்திற்கு கைமாறும் நிலை வந்தது. இதற்கான பேரம் பேசல்கள் விரும்பி வழங்கும் தானத்திலிருந்து வலிந்து பெறும் ‘சீதனம்’ ஆகி தமிழ் பெண்களின் வாழ்வையும் எம் சமுதாயத்தின் மேம்பாட்டை சீரழிக்கும் காரணியாகவும் மாறியது.manakkodaichchattam நாம் அனைவரும் உறுதி பூணும் சர்வதேச மகளிர் தினம்!-கனடாவில் இருந்து இராஜினி பற்றர்சன்

தொழில் நுட்பம், மற்றும் நாகரீகம் வளர்ச்சியடைந்த இந்த காலகட்டத்திலும் எமது சமூகத்தில் வேரூன்றி இருக்கும் சீதனக் கொடுமையை முறியடிக்க எமது சமூகத்தின் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் முன்வந்தால், வெகுவிரைவில் எம்முள் வேரூன்றி கிடக்கும் இச்சமூக குறைபாட்டை நீக்க முடியும் என்பதில் ஐயமில்லை. “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்னும் அறிவுரைக்கிணங்க, எம் சமூகத்தில் அனைவரும் சீதனக் கொடுமையை எதிர்த்து நின்றால், இந்த நடைமுறையை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அகற்ற முடியும்.

அடிமைத்தனம் என்றால் என்ன, மனித குலத்தின், ஒரு சமூகத்தின், ஒரு குடும்பத்திற்குரிய கட்டுக்கோப்பு என்ன என்பதற்குரிய தெளிவான அறிவைப் பெறுதல் மிகவும் அவசியமானதாகும். கணவனுக்கு கீழ்ப்படிதல். தகப்பனுக்கு கீழ்ப்படிதல் அடிமைத்தனம் என்று நினைக்கும் பெண்கள் எம் மத்தியில் உள்ளனர். தவறான தெளிவூட்டல் குடும்பக் கட்டுக்கோப்பை சிதைத்து விடும். நேர்கொண்ட சிந்தனையும், தெளிவான பாதையும் சரியான இலக்கினை அடைய வழிவகுக்கும்.

ஆண், பெண் என்பது விருத்தியடைந்த உயிரினங்களின் இலிங்க முறை இனப்பெருக்கத்திற்கான கூர்ப்பியல் பரிமாண விருத்தியாகும். இது தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களினதும் இன விருத்திக்கான இயற்கையின் ஏற்பாடாக அமைகிறது. அவ்வகை இன விருத்திக்கான தேவைகளின் அடிப்படையிலேயே பெண்களும் ஆண்களும் சிலவகை உடலியல் மற்றும் உளவியல் வேறுபாடுகளை கொண்டு விளங்குகின்றனர்.

ஆனால் செயல் திறனில் இருபாலாரும் ஒருவரை விட ஒருவர் குறைந்தவர் அல்ல. இந்த தெளிவு எம்முள் இருக்குமானால், மனித வாழ்வின் தேவைகளுக்கான செயற்பாடுகளை உரிய வகையில் பகிர்ந்து சரிநிகர் சமானமாக நாம் வாழ முடியும். இவ்விழிப்புணர்வு இல்லாமையே கடந்த காலங்களில் பெண் அடிமை செயல்களாக பரிணமிக்கவும் பெண் விடுதலைக்கான போராட்டமாகவும் வடிவெடுத்தது.

அனைத்துலக மகளிர் தினம் என்பது இவ்விழிப்புணர்வை கொண்டு வரும் ஒரு தினமாகவே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், பின்தங்கிய சமூகங்களிடையே பெண்களுக்கான சம உரிமையை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஓர் நாளாகவும் அமைகிறது. மனித குலத்தின் மேம்பாட்டுக்கு, பெண் அடிமைத்தன சிந்தனைகளை விடுத்து ஒவ்வொரு பெண்ணும் ஆணும், பங்களிப்போம் என இந்த சர்வதேச மகளிர் தினத்தில் மீண்டும் உறுதி பூண்டு உழைப்போம்.