Tamil News
Home செய்திகள் அவசரகால சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை வேண்டும்-மேற்பார்வைக் குழு

அவசரகால சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை வேண்டும்-மேற்பார்வைக் குழு

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு தயாரித்த அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்திருப்பதாக அதன் தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை அமைச்சரவைக்கும் அனுப்பப்பட்டது.​

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த நிறுவனத்துக்கு நிதி கிடைக்கப்பெற்றமை, சட்டபூர்வமற்ற நிர்மாணிப்புக்கள் மற்றும் பலவந்தமாக அரச காணியை சுவீகரித்துக்கொள்ளுதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோதமான அடிப்படையில் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்படுள்ளதால் அவசரகால சட்டத்தின் கீழ் சுவீகரித்துக்கொள்வதற்கும், தவறிழைத்த அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை மேற்கொள்தவற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.

துறைசார் மேற்பார்வைக்குழு விசாரணை நடத்தியிருந்தபோது, 1993ஆம் ஆண்டு முதல் ஹிரா பவுன்டேஷன் நிறுவனத்தின் பெயரில் இலங்கை வங்கியில் வங்கிக் கணக்கு பேணப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி இந் நிறுவனங்களுக்கு நன்கொடையாக 3.6 பில்லியன் ரூபா வெளிநாட்டு நிதி கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பிலும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிறுவனம் தொடர்பாக ஆவணங்களை பரிசீலனை செய்யும்போது இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கும் அந் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களில் Bachelor of Arts in Sharia and Islamic Studies எனக் குறிப்பிடப்பட்டிருப்பதன் ஊடாக ஷரீஆ சட்டம் அல்லது இஸ்லாம் மதம் சார்ந்த உலாமாக்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளதாக சந்தேகம் எழுகிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உப குழுக்களின் கள ஆய்வின்போது கட்டடங்களின் கட்டடக்கலை அமைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள் யாவும் இஸ்லாமிய மதத்திற்கும் அரேபிய கட்டடக்கலைகளையும் சேர்ந்த அம்சங்களைக் கொண்டதாகவும் நில வடிவமைப்பின் போது அப் பிரதேசத்தை சேராத அரேபிய சூழல் உருவாக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிறுவனங்கள் கல்வி பாடநெறிகளை நடத்துவதாக காட்டிக்கொண்டு மறைமுகமாக சரியா சட்டத்தை, அடிப்படைவாதிகளை உருவாக்கும் நிறுவனமாக செயற்படுத்தும் நோக்கத்துடன் இது அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவ்வாறான நிறுவனங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version