Home செய்திகள் நாமும் காணாமலாக்கப்படுவோமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது! ஐ.நாவிற்கு அனுப்பப்பட்டுள்ள மகஜர்

நாமும் காணாமலாக்கப்படுவோமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது! ஐ.நாவிற்கு அனுப்பப்பட்டுள்ள மகஜர்

அண்மையகாலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் நாமும், எமக்கு உறுதுணையாக இருப்பவர்களும் காணாமலாக்கப்படுவோமோ என்கின்ற அச்ச நிலையினை தோற்றுவித்துள்ளதாக வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், நாங்கள் 1000 நாட்களையும் தாண்டி எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் அப்பாவி வயோதிப பெற்றோரும், மனைவி மற்றும் பிள்ளைகளுமாவோம்.

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். எமது பிள்ளைகளின் வாழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலும், நாம் பிள்ளைகள் மற்றும் உறவுகளுடன் வாழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையிலும் 1024 நாட்களாக வீதியில் நிற்கின்றோம்.

எமது உறவுகளில் பலரை இறுதி யுத்தத்தின் முடிவின்போது இராணுவத்திடம் கையளித்தோம். பலர் எம்முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

சிலர் சோதனைச் சாவடிகளிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டனர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருக்கும்போதே இவை நடைபெற்றன.

ஒரு நாளேனும் புலிகள் அமைப்பில் இருந்திருந்தாலோ அல்லது அவர்களிடம் பணிபுரிந்தாலோ சரணடையுமாறும் அவர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதாகவும் இராணுவத்தினரும் அரசாங்கமும் அளித்த வாக்குறுதியை நம்பியே எமது உறவுகளை கையளித்தோம்.

அவர்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் கையளிக்கப்பட்டதனால் எங்காவது இரகசிய முகாங்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்புகின்றோம்.

நாம் எமது பிள்ளைகளை கையளித்த இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்தவர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார்.

அவருக்கு எமது பிள்ளைகளின் இன்றைய நிலை நன்கு தெரியும். எனவே புதிய ஜனாதிபதி எமது உறவுகளை விடுதலை செய்வதற்கு சர்வதேசம் உதவி புரியவேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் ஒப்படைக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் தவிர வெள்ளைவானிலும் சிவில் உடையில் வந்தவர்களாலும் கடத்திச் செல்லப்பட்டவர்களும் உள்ளனர்.

கடத்தப்படும் போது சாட்சியாக உடனிருந்தவர்கள் இன்னமும் உள்ளனர். அண்மையகாலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடும் நாமும் எமக்கு உறுதுணையாக இருப்பவர்களும் காணாமலாக்கப்படுவோமோ என்கின்ற அச்ச நிலையினை தோற்றுவித்துள்ளது.

அதனை உறுதிசெய்யும் விதமாக புலனாய்வாளார்களின் கண்காணிப்பு, பின் தொடர்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

எம்மை பின் தொடர்வதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் எம்மை அச்சமடையவைத்துள்ளன.

வீடுகளுக்குள் வந்து விசாரணை செய்வது மட்டுமல்லாது வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்திவிட்டு தப்பிச் செல்கின்றனர்.

இதற்கு பொலிஸில் முறைப்பாடு செய்தும் பயனேதும் இல்லை மாறாக அச்சுறுத்தல் அதிகரிக்கின்றன.

எம்முடன் இணைந்து உறவுகளை தேடி போராடிய 56 பேரை போராட்டம் தொடங்கியதில் இருந்து இழந்துவிட்டோம்.

இந்த நிலையில் எமது போராட்டத்தை தொடர்வதற்கே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட 30/1 இற்கு எமது வேண்டுகோளையும் மீறி 304 மற்றும் 34/1 ஆகிய பிரேரணைகள் மூலம் இரு தடைவைகள் காலநீடிப்பு வழங்கப்பட்டது.

2018 மார்ச்சில் வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசம் ஒருவருடம் ஒன்பது மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்கபூர்வமாக எதுவுமே நடைபெறவில்லை.

மாறாக ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகளால் OMP அலுவலகத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதிகள் எவையும் மக்களை சென்றடையவில்லை.

மாறாக OMP அலுவலகத்தையும் அதைசார்ந்தவர்களையும் பலப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுகின்றது.

OMPஅலுவலகமானது பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளாது உருவாக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களினால் புறக்கணிக்கப்பட்டு தோல்வியடைந்த அலுவலகமாகும்.

மேலும் ஜெனிவா தீர்மானத்தினை மாற்றியமைப்போம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பகிரங்கமாக அறிவிக்கின்றார். இந்த நிலையில் சர்வதேசம் எவ்வாறு எமக்கு நீதியை பெற்றுத்தரப் போகின்றது?

மேலும் காலநீடிப்பு வழங்காது சர்வதேசத்தின் நேரடி தலையீட்டுடனான நீதியை எமக்கு பெற்றுத்தருவதற்கு சர்வதேசம் முயற்சிக்கவேண்டும்.

இரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளை விரைவில் மீட்டுத்தர ஐ.நா முயற்சிக்க வேண்டுமென வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் மன்றாட்டத்துடன் கேட்டு நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

mu1 நாமும் காணாமலாக்கப்படுவோமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது! ஐ.நாவிற்கு அனுப்பப்பட்டுள்ள மகஜர்

Exit mobile version