Home ஆய்வுகள் இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்.இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் தப்பாது.

கோத்தாபய தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையில்  நிற்கும் ஒருவர் -தனது சகோதாரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார்.2015 இல் முடிவிற்கு வந்த மகிந்தராஜபக்சவின் நீண்ட கால ஆட்சியின் குணாதியசங்களாக குடும்ப  ஆட்சி காணப்பட்டது.நான்கு சகோதரர்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன்,பொது நிதியில் 80 வீதத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை மெல்லமெல்ல அதிகரித்ததன் மூலம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளையும் யுத்த குற்றச்சாட்டுகளையும் சந்தித்த அரை சர்வாதிகார ஆட்சியை மகிந்த உருவாக்கினார்.20190928 mahinda basil gota இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

மேலும் மகிந்தவின் சீனா ஆதரவு கொள்கை இலங்கையில் சீனா தனது செல்வாக்கை மிகவேகமாக பரப்புவதற்கு உதவியது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட கடன்கள் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிசேன சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார்.

இது ஹொங்கொங் விட்டுக்கொடுக்கப்பட்ட விதத்தில் அமைந்திருந்தது.

கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரின் கறைபடிந்த பாரம்பரியத்திற்கு மீண்டும் புத்துயுர் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இலங்கையின் ஜனாதிபதியாவதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தவேளை இழைத்த யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவில் காணப்படும் வழக்குகளில் இருந்து அவர் விடுபாட்டுரிமையை பெற்றுக்கொள்வார்.

இலங்கையின் 25 வருடகால யுத்தம் 2009 இல் முடிவிற்கு வருவதை மகிந்தராஜபக்ச மேற்பார்வை செய்தார். ஆனால் அவர் சமாதானத்தின் முகவர் இல்லை.

யுத்தத்தின் இறுதி வருடங்களில் அப்பாவி பொதுமக்கள் -மனிதாபிமான பணியாளர்கள் -ராஜபக்ச  குடும்பத்தின்  அரசியல் எதிரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயினர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டனர்.

மேலும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி இராணுவதாக்குதல் என்பது சர்வதேச சட்டங்களின் மீது  மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என ஐநா தெரிவித்துள்ளது.இதன்போது 40,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கள் சரணடைந்தவேளை அவர்களை சுட்டுக்கொல்லுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என யுத்த கால இராணுவதளபதி  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிகளவிற்கு இந்துக்களான தமிழர்கள் மீது பாரிய கொடுமைகளை இழைத்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் கதாநாயகர்களாக மாறினார்கள்.

இது பல்லின தேசமென்ற என்ற இலங்கையின் அடையாளத்திற்கு பதில் ஒரு இனத்திற்கான தேசமென்ற அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான துணிச்சலை மகிந்தராஜபக்சவிற்கு வழங்கியது.

இந்த அணுகுமுறையை கோத்தாபய ராஜபக்ச நிச்சயமாக புதுப்பிக்கப்போகின்றார், எனினும் இந்த அணுகுமுறை இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு காரணமாக அமைந்த இனங்களிற்கு இடையிலான பதட்டத்தை குறைப்பதற்கு உதவப்போவதில்லை.

சமீபத்தில் இலங்கையில் சிங்களவர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் இடையில் பதட்டம் உருவாகியிருந்தது,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இந்த பதட்டநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் மாத்திரமல்ல,முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சனத்தொகையில் சிறிய அளவினராக காணப்படும் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியதாக்குதலாகும்.

ஆனால் இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்த எதிhவுகூறல்கள் வெளியாகமலிருக்கவில்லை.

இலங்கையில் உடனடி தாக்குதல் இடம்பெறலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்திருந்ததுடன் தாக்குதலில் ஈடுபடக்கூடியவர்கள் குறித்த விபரங்களையும் பாதுகாப்பு மற்றும் பொலிஸாரிற்கு வழங்கியிருந்தனர் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் தனக்கு அந்த எச்சரிக்கை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.கடந்த வருடம் சிறிசேனவின் சதிப்புரட்சி முயற்சியின் இலக்காக காணப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் இந்த எச்சரிக்கைகள் குறித்து அறியவில்லை என தெரிவித்திருந்தார்.

ராஜபக்சாக்கள் இஸ்லாமிய குண்டுதாக்குதல்களை ஏற்கனவே சிங்களபௌத்த தேசியவாத உணர்வுகளை தீவிரப்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய தீவிரவாதத்தை நசுக்குவதற்காக இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பினை பலப்படுத்துவேன் பொதுமக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீற அறிமுகப்படுத்துவேன் என கோத்தாபய ராஜபக்ச தனது ஆதரவாளர்களிற்கு ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் இன்னமும் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள யுத்த குற்றவாளியொருவர் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவவது சிறுபான்மை குழுவினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் உரிமை ஆர்வலர்களிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இன்னமும் கவலையளிக்ககூடிய செய்திகளும் உள்ளன.கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் சீனாவுடனான உறவுகளை அவர் புதுப்பிப்பார் என அவரது முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மும்முரமான கடல்பாதைக்கு அருகே இலங்கை உள்ளதால் அவரின் இந்த உறுதிமொழிகளின் தாக்கம் இலங்கைக்கு அப்பாலும் எதிரொலிக்ககூடியதாக காணப்படுகின்றது.

சீனாவிற்கும் இந்தோ பசுபிக்கின் ஜனநாயக வல்லரசுகளிற்கும் இடையிலான கடல்சார் மோதலில் இலங்கை ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.இந்து சமுத்திரத்தின் முக்கிய கடற்பாதைகளில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் வர்த்தக கட்டுமானங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவை சுற்றிவளைக்கும் தந்திரோபாயத்தை சீனா பின்பற்றுகின்றது.

சீனா ஜனாதிபதி தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின்  மையம் என வர்ணித்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் பெறுமதியான முத்து ஆகும்.

 சீனா ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டம் குறித்து சர்வதேச அளவில் அவநம்பிக்கை உண்டாகியுள்ள இந்த தருணத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் இலங்கையில் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றமை சீனாவிற்கு மிகவும் இனிப்பான செய்தியாகும்.சீனா இலங்கையை தனது இராணுவ தளமாக மாற்ற எண்ணியுள்ளது.

ஆனால் ஏனைய அனைவருக்கும் இது மோசமான செய்தியாகும்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாவது அவரது சகோதரரின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்கனவே தாமதமாகியுள்ள நீதி கிடைக்காமல் தடுக்கப்படுகின்ற நிலையை உருவாக்கும்.

இன மற்றும் மத அடிப்படையிலான பதட்டங்களை அதிகரிக்கும்,அத்துடன் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா மேலாதிக்கத்தை பெறும் நிலையை உருவாக்கும்.

இலங்கையின் ஜனநாயகம் முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகம் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுகின்றன.

பிரஹ்மா  செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்)தமிழில் ரஜீபன்

நன்றி – வீரகேசரி 

Exit mobile version