Home ஆய்வுகள் ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்று நிலைகளும் தேர்தல் களத்தில் தீவிரமாகத் முட்டி மோதி முடிவுகளை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றன.

அந்த முடிவுகளும் அதன் பின்னரான விளைவுகளும் இலங்கையின் அடுத்த கட்ட அரசியல் நிலைமைகளில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப் போகின்றன. அதற்கான அறிகுறிகளை தேர்தலுக்கு முன்னரான நிலைமைகள் வெளிப்படுத்தி உள்ளன. இந்தத் தாக்கங்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகளைப் பிரகாசமாக்கும் என்று கூற முடியாதுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள மூன்று முக்கிய வேட்பாளர்களின் போக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடும் ஓர் அம்சமாகும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் போட்டி சார்ந்த அணுகுமுறைகள் கொள்கை நிலைப்பாடுகள் என்பன இந்த முதலாவது அம்சத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

தேர்தலில் வெற்றிபெற்றால் தாங்கள் என்னென்னவற்றைச் செய்வோம் என்பது குறித்து பிரதான வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் நாட்டின் எதிர்கால நிலைமைகள் குறித்து கோடி காட்டுவனவாக அமைந்திருக்கின்றன.

நல்லிணக்கத்துடன் கூடிய நாட்டு மக்களின் ஐக்கியம், முன்னேற்றம் தொடர்பிலான உத்தேசத் திட்டங்கள் நாட்டின் எதிர்காலத்திற்கு எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது சந்தேகத்திற்கும் கேள்விக்கும் உரியவையாகவே இருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் என்பது நாட்டின் அதியுயர் அரசியல் தலைவரை நாட்டு மக்கள் அனைவரும் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதாகும். நாடு முழுவதும் ஒரேயொரு தேர்தல் தொகுதி என்ற அடிப்படையில் இந்த வாக்களிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வகையில் நாட்டு மக்கள் அனைவராலும் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் தலைவராகவே ஜனாதிபதி திகழ வேண்டும். செயற்படவும் வேண்டும்.

ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெரிவு செய்கின்ற ஒருவராகிய போதிலும், இதுகால வரையிலும் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்கள் பெரும்பான்மை இன மக்களின் நலன்களையும் சிங்கள பௌத்த தேசியத்துக்கு உரமூட்டுபவர்களாகவுமே செயற்பட்டுள்ளார்கள்.

gota ஜனாதிபதி தேர்தலும் கட்சிகளின் ஒன்றிணைவும் பி.மாணிக்கவாசகம்

தாங்கள் பெரும்பான்மை இன மக்களைப் போலவே, சிறுபான்மை இனமக்களினதும் ஜனாதிபதி என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட்டதாகத் தெரியவில்லை. பெரும்பான்மை இன மக்களுக்கு விசுவாசமாகவும், அவர்களின் நலன்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டிருந்தது போல சிறுபான்மை இன மக்களின் நலன்கள் அவர்களது முன்னேற்றத்திலும் சமமான அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் செயற்படவில்லை.

நாட்டு ஜனாதிபதிகளின் இந்தப் போக்கு ஓர் அரசியல் மரபுவழிப் போக்காகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பது முயற்கொம்பாகி உள்ளது. இனங்களுக்கிடையில் அரசியல் ரீதியான நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் உருவாக்குகின்ற கைங்கரியம் தோல்வி கண்டுள்ளது.

அனைத்து மக்களினதும் தலைவராகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி தேசிய அரசியல் வெளியில் ஓர் உன்னத நிலையில் தேசியத் தலைமகனாக உருவாக முடியாமல் போயுள்ளமைக்கும் இந்த மரபுவழியிலான அரசியல் போக்கே காரணமாகியுள்ளது.

எனவே, இத்தகைய முன்னுதாரணத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறப்போகின்றவரும் புதிய வழியில் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வாரா என்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது.

பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் வெட்டிக்குறைக்கப்பட்டுள்ள முதலாவது ஜனாதிபதிக்கான இந்தத் தேர்தலில் வெற்றி பெறுகின்றவர் தான் விரும்பியவற்றைச் செயற்படுத்த முடியாத ஒருவராகவே இருக்கப் போகின்றார். அத்தகைய அரசியல் தலைவர் ஒருவர் நாட்டின் ஐக்கியத்தையும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியுமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதே.

ஆனால் இந்தப் பதவிக்கே வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் 35 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடத் துணிந்துள்ளார்கள். இந்த அரசியல் அணுகுமுறை எத்தகையது என்பது புரியாத புதிராக உள்ளது.

பிரதான வேட்பாளர்கள் எவரும் இந்த நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்குக் குந்தகமாக உள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இல்லை.

அந்நியரிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்றது முதல் சம அரசியல் உரிமைக்கான தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் போராடி வருகின்ற சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் மன நிலையைச் சரிவர புரிந்து கொள்பவர்களாகவும் இல்லை. வேட்பாளர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் தமது கொள்கை நிலைப்பாட்டில் இத்தகைய போக்கையே கொண்டிருக்கின்றார்கள். இது சோகமானது. கவலைக்குரியது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் கழிந்துவிட்டது. இருப்பினும் அந்த யுத்தம் மூள்வதற்கு மூலகாரணமாக உள்ள இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டிய அதிமுக்கிய அரசியல் தேவையை அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.

உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை என்பதிலும் பார்க்கஇ தேசிய மட்டத்திலான அந்த அரசியல் தேவையை உணர்ந்தம் உணராதவர்களாகக் காட்டிக்கொண்டு சுய கட்சி அரசியல் இலாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவதிலேயே அவர்கள் குறியாக இருக்கின்றார்கள்.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதிலும் பார்க்க, அவர்களை பெரும்பான்மை இன மக்களுக்கு எதிரான அரசியல் போக்கிற்கு எதிரானவர்கள் என அடையாளப்படுத்துவதிலேயே அவர்கள் கவனமாக இருக்கின்றார்கள். இந்த இனவாதப் போக்கையே தமது தேர்தல் கால முதலீடாகச் செயற்படுத்தி பெரும்பான்மை இன மக்களின் வாக்குகளைக் கவர்வதிலேயே அவர்களுடைய கவனம் குவிந்துள்ளது.

அதேநேரம் தேசிய மட்டத்திலான இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெளிப்பகட்டான அரசியல் தேவையையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக கபடத்தனமான அரசியல் போக்கில் பச்சோந்திர ரக வாக்குறுதிகளை அள்ளிவீசிஇ சிறுபான்மை இன மக்களின் மனங்களில் அரசியல் ரீதியாக இடம்பிடிப்பதற்கான முயற்சிகளிலும் அவர்கள் தயக்கமின்றி ஈடுபட்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கின்ற விவகாரத்திலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்கின்ற விடயத்திலும் பேரின அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் அரசியல் தீர்வுஇ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வதில் கல்லில் நார் உரிக்கின்ற நிலைமைக்கே தமிழ் அரசியல் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடுமையான பேரின அரசியல் நிலைப்பாட்டை எதிர்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஓர் அரசியல் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்திருக்க வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாகத் தொடர்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் வேர்பாய்த்துள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் தீர்வு அரசியல் அபிலாசை என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் ஓர் அணியில் செயற்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன.

இந்த அரசியல் யதார்த்தத்தைத் தமிழ் மக்கள் உணர்ந்துள்ளபோதிலும், உளப்பூர்வமாக தமிழ் அரசியல் கட்சிகள் உணரவில்லை என்றே கூற வேண்டும். தமிழர் தரப்பின் அரசியல் ரீதியான ஒற்றுமையும் ஓரணியில் திரண்ட செயற்பாடுமே பேரினவாதப் போக்கையும் சிங்கள பௌத்த தேசிய அணுமுறை அரசியலையும் எதிர்கொள்வதற்கு அவசியம் என்ற உண்மையை தொடர்ச்சியான பல சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன.

ஆனாலும் அந்த உண்மையை உணர்ந்து அரசியல் யதார்த்த நிலைமைக்கு ஏற்றவாறு செயற்படுவதற்குத் தமிழ் அரசியல் கட்சிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை. அவ்வாறு செயற்படுவதற்கு அனைத்துத் தரப்பினரும் முழு அளவில் முயற்சிக்கவுமில்லை.

Exit mobile version