Home செய்திகள் ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 90 குடும்பங்கள் -அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 90 குடும்பங்கள் -அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில்

ஊற்றுப்புலம் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 90 குடும்பங்களை மீட்குமாறு  மக்கள் கோரிக்கை விடுத்துள்ள இடத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர்  பார்வையிட்டனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்று புலம் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன. வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவையின் நிமித்தம் செல்பவர்கள், தொழிலிற்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நோயாளர்களை அழைத்து செல்வதிலும், மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய சவால் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்பட்டு 90 குடும்பங்களும் தனியாக நீர் சூழ்ந்த பிரதேசத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த வீதியானது புதுமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியை ஊடறுத்து செய்வதால், தொடர்ந்தும் இந்த நிலை காணப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது 19 அடி கொள்ளவு கொண்ட புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 1 அங்குலமாக காணப்படுகின்றது. தொடர்ந்தும் நீர் வருகை காணப்படுவதால் நீர்மட்டம் அதிகரித்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில், உடனடியாக மாற்று நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு மக்கள் கோருகின்றனர்.

Exit mobile version