8 ஆண்டுகளின் பின் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தெரிவு

ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா நேற்று தேர்வானது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.

இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்பட்டன. கனடா இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தது.

2021 – 2022 ஆகிய ஆண்டு காலத்திற்கான பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற இடத்திற்கு இந்தியாவை தேர்ந்தெடுப்பதற்காக 192 வாக்குகளில் 184 வாக்குகள் கிடைத்ததாக ஐ.நா. அறிவித்துள்ளது.

நிரந்தர உறுப்பினர்களாக  சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளுடனும், நிரந்தரமற்ற உறுப்பினர்களாக  எஸ்டோனியா, நைஜீரியா, செயின்ட் வின்சென்ட், துனிசியா, வியட்நாம் மற்றும் கிரெடைன்சும் வரும் ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா மிகவும் சக்திவாய்ந்த அங்கத்துவத்தை பெற்றுக் கொள்ளும்.

இந்தியாவின் வேட்புமனு கடந்த ஜுன் மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 55 நாடுகளால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு முன்னர்  இந்தியா 1950- 1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1991-1992 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 8 ஆண்டுகளின் பின்னர் தற்போது மீண்டும் நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கின. ஐ.நா. தூதுவர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் முகக் கவசம் அணிந்து மண்டபத்திற்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டு உடனடியாகவே வெளியேறினர். கொரோனா தொற்று காரணமாக சமூக விலகலை கடைப்பிடிப்பதால் 193 ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு முக்கியமான தேர்தல்களுக்கான பொதுச் சபை மண்டபத்தில் வாக்களிக்க வெவ்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

ஐ.நா. தூதருக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி பாதுகாப்பு சபையில் இந்தியாவின் பங்கானது அதன் நெறிமுறைகளை உலகிற்கு கொண்டுவர உதவும் என்று கூறினார்.