Home செய்திகள் இலங்கையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள் – யுனிசெப் அமைப்பு தகவல்

இலங்கையில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் 7 மில்லியன் மக்கள் – யுனிசெப் அமைப்பு தகவல்

197 Views

பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு சுமார் 7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருந்ததாகச் சுட்டிக்காட்டியிருக்கும் யுனிசெப் அமைப்பு, கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்புசார் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக இவ்வாண்டில் பெருமளவான நிதி தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கின்றது. 

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து யுனிசெப் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 11 பக்க அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுமார் 7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத்தேவைகள் மற்றும் முன்னுரிமை செயற்திட்டம் மதிப்பிட்டுள்ளது.மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப்பாதுகாப்பின்மை, மின்வெட்டு ஆகியவற்றால் சிறுவர்களுக்கான அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், போசணை மற்றும் கல்வி என்பன மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு 750,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 1.3 மில்லியன் மக்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகள் யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்டன. யுனிசெப் அமைப்பின் தலையீட்டின் ஊடாக நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 800,000 இற்கும் அதிகமான மக்கள் தூய குடிநீர் வசதியைப் பெற்றிருப்பதுடன் பின்தங்கிய மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் வசிக்கும் 285,403 சிறுவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று பாடசாலை மற்றும் சமூக மட்டத்தில் வழங்கப்பட்ட உளவியல் ஆலோசனை சேவையின் ஊடாக 205,000 பேரும், கடந்த ஆண்டு கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த தாய்மாருக்கு 3 மாதகாலத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் 3010 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாண்டில் அந்நிதியுதவி மேலும் 110,000 தாய்மாரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 2.8 மில்லியன் பேருக்கு அவசியமான உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கென 25 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கமுன்வருமாறு கடந்த ஆண்டு யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் யுனிசெப் அமைப்பிற்கு 34 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றது. ஆனால் போசணை மற்றும் சமூகப்பாதுகாப்பு ஆகிய துறைகளில் கோரப்பட்டதை விடவும் அதிகளவிலான நிதி கிடைக்கப்பெற்ற போதிலும் கல்வி, சிறுவர் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குக் கிடைக்கப்பெற்ற நிதி போதுமானதல்ல. எனவே இத்துறைகளுக்கு இவ்வருடம் மேலதிக நிதியளிப்பு அவசியமாகின்றது.

மேலும் குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவிலே நாட்டின் மொத்த சனத்தொகையில் 28 சதவீதமானோர், அதாவது 6.2 மில்லியன் பேர் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மைக்கும் 66,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று மிகவும் உயர்வான பணவீக்கத்தின் விளைவாக பெரும்பாலான குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் வெகுவாகச் சரிவடைந்திருப்பதுடன், அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் உள்ளடங்கலாகப் பெரும்பாலான மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக சுகாதாரக்கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version