7 பேர் விடுதலையில் ஆளுநரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது – கமல்ஹாசன் கேள்வி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ தெரிவித்த பின்னும் ஆளுநர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று அழைக்கப்படும் பல்நோக்கு விசாரணைக் குழுவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிபிஐ விளக்கமளித்துள்ளது.

நேற்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தபோது “அம்மா அரசு” என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, ஆளுநரைச் சந்திக்கும் பொழுது அவரிடம் பேசி என்னுடைய மகனுக்கு விடுதலை வாங்கித் தரவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில்“சட்ட விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே, பேரறிவாளனின் முப்பதாண்டுச் சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது. சட்ட, நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன. ஆளுநர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.