Tamil News
Home செய்திகள் 7தமிழர்களின் விடுதலையை அரசாணை மூலம் நிறைவேற்ற ஆலோசனைபி.உதயகுமார்

7தமிழர்களின் விடுதலையை அரசாணை மூலம் நிறைவேற்ற ஆலோசனைபி.உதயகுமார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான தீர்மானமும் ஆளுநர் ஒப்புதலுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும். விரைவில் அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதேவேளை இது குறித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் “பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7பேரும் விடுதலை பெற வேண்டுமென்று மற்றவர்களைப் போலவே நாங்களும் ஆவலாகக் காத்திருக்கிறோம். இட ஒதுக்கீட்டில் முடிவு எடுத்தது போல, எழுவர் விடுதலை குறித்தும் முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்” எனக் கூறினார்.

இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் ஒப்புதல் தாமதம் ஆனதால், உடனடியாக நிறைவேற்ற அரசாணை வெளியிட்டது போல எழுவர் விடுதலையிலும் அரசாணை பிறப்பிக்க திட்டம் உள்ளதா என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

Exit mobile version