காம்பியாவில் 66 சிறுவர்கள் பலி- இந்திய மருந்துகள் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கூறப்படும் இந்திய மருந்துகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை என்பதில் உறுதியாக உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் முதல் சிறுநீரக கோளாறு காரணமாக 66 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மற்றும் சளிக்கான திரவ மருந்திற்கும் அந்த மரணத்திற்கும் தொடர்பு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்படும் 4 வகையான மருந்துகளால் காம்பியாவில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு  தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துப் பொருட்களையும் உடனடியாக காம்பியா சந்தையில் இருந்து அகற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய மருந்துகளின் அபாயம் குறித்து இலங்கைக்கு வெளிப்படுத்த முடியுமா என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்  கேள்வி எழுப்ப்பட்ட போது,“இது தொடர்பில் நாங்கள் உடனடியாக விசேட விசாரணைகளை மேற்கொண்டோம். இலங்கையில் அவ்வாறான மருந்து எதுவும் கொண்டுவரப்படவில்லை என்ற பதில் எமக்குக் கிடைத்தது. இனிமேல் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கையும் இல்லை“ என தெரிவித்துள்ளார்.