சீனாவில் கொரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிர்வாகப் பிரிவின் தலைவர் ஜியாவோ யாஹூ, கடந்த டிசம்பர் 8-ம் திகதி முதல் இம்மாதம் 12-ம் திகதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 938 என தெரிவித்துள்ளார்.

இது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே என்பதால் கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட கூடுதலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 5,503 பேர், உடல் ரீதியிலான பாதிப்பு வேறு ஏதும் இல்லாதவர்கள் என்றும், கொரோனா வைரசால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக மட்டுமே உயிரிழந்தவர்கள் என்றும் ஜியாவோ யாஹூ தெரிவித்துள்ளார். வேறு உடல் உபாதைகளோடு கொரோனா வைரஸ் பாதிப்பும் சேர்ந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 435 என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை சீனா குறைத்துக் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

சீனா உண்மையான விவரங்களை பகிர வேண்டும் என்றும் அது உலக சுகாதாரத்திற்கு மிகவும் முக்கியம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.