6 கிராமசேவகர் பிரிவுகளை மகாவலி திட்டத்துக்குள் கொண்டுவர திட்டம் – கஜேந்திரன்

152 Views

தமிழ் கிராமங்களை அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கி முழுமையாக சிங்கள மயப்படுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்துவருவதாக குற்றம் சாட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி உத்தரவென பொய்கூறியே இவ்வாறான அபகரிப்புக்கள் இடம்பெறுவதாகவும் கூறினார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு ,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு ,கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் கையளிக்குமாறு அரச உயர மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாக வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலகத்துக்கு திங்கட்கிழமை அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள்.

இவ்வாறான செயற்பாடு ஒன்று நடைபெறப்போகின்றது என்பதனை அறிந்து வடக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ,இவ்வாறு செய்ய வேண்டாம். நாம் ஏற்கனவே இது தொடர்பில் அமைச்சருடன் பேசியுள்ளோம் .இது தொடர்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்ட பின்னர்தான் முடிவு எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சொல்லியும் கூட கொழும்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக அந்தக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்திஅதிகார சபைக்குள் இந்த 6 கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்டு செல்வது என்பது முழுமையாக தமிழர்களிடமிருந்து அந்த நிலங்களை அபகரித்து அந்த நிலங்களை முழுமையாக சிங்களமயப்படுத்தும் நோக்கமாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம். இந்த பிரச்சினை கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்டபோது இது தொடர்பாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்திப்பதற்கான நேரத்தை நாம் கோரியிருந்தோம். அதன் பிரகாரம் வடக்கு,கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் எம்.பி.க்களும் ஆளும்கட்சி தமிழ் எம்.பிக்களும் அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குள் இந்த 6 கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்டு செல்ல வேண்டாமென கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

அவ்வாறு கொண்டு சென்றால் அதனது காணி நிர்வாகம் மகாவலாபிவிருத்தி அதிகாரசபைக்கு செல்லும்.இதனால் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் . அங்குள்ள 5000க்கு மேற்பட்ட குடும்பங்கள் தங்களது நிர்வாக செயற்பாடுகளை கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்துடனும் முல்லைத்தீவு மாவட்ட கச்சேரியுடனும் சிறப்பாக முன்னெடுக்க கூடிய நிலையில் இந்த நிர்வாகம் மாற்றப்பட்டால் தமிழ் மக்களுக்கு நூற்றுக்கு நூறு வீதம் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

84 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அந்த மக்கள் இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இப்போது அவர்கள் முழுமையாக மீளக்குடியமர்ந்து தமது காணிகளை அபிவிருத்தி செய்ய முடியாத நிலைமை உள்ள சூழலில் இவ்வாறான நிலைமை முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக அப்பகுதிக்கு விஜயம் செய்த்த போது அந்தக்காணிகள் அனைத்தும் அந்த மக்களிடம் கையளிக்கப்படவேண்டுமென கூறியிருந்தார். அமைச்சர் சமல் ராஜபக்ஸவுடனான எமது சந்திப்பின்போது இவ்விடயம் தொடர்பில் ஒரு குழு அமைத்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும் கொரோனா காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் காரணமாகவோ அந்தக்குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில் எழுத்துமூலமான அறிவித்தல் கூட இல்லாது வாய்வழி உத்தரவு மூலம் கொழும்பிலிருந்து கொடுக்கப்பட்ட மோசமான அழுத்தங்கள் காரணமாக அந்த 6 கிராமசேவகர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படையுங்கள் என வடக்கு காணி ஆணையாளர் அலுவலகத்தினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கனவே அங்கு முல்லைத்தீவு, வெலிஓயாப்பகுதிகளில் தமிழ் மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்படு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் இந்நிலையில் தொடர்ந்தும் அபிவிருத்தி என்ற பெயரில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அந்தக் கிராமங்களை கைப்பற்றப்பார்க்கின்றது. இதுமுழுக்க முழுக்க சிங்களமயப்படுத்தும் நோக்கம்” என்றார்.

Leave a Reply