53 நாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து உள்ளிட்ட தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் – நீதி அமைச்சர்

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18)  நடைபெற்ற  வெளிநாட்டு தீர்ப்புக்களை பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும் வலுவுறுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

வெளிநாட்டுத் தீர்ப்புக்களை பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளுதல், பதிவு செய்தல்  மற்றும் வலுவுறுத்தல் தொடர்பான சட்டம் இதுவரை காலமும் இருக்கவில்லை.இவ்வாறான நிலையில்  2024 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க வெளிநாட்டு  தீர்ப்புக்களை பரஸ்பரம் அங்கீகரித்தல், பதிவு செய்தல் மற்றும்  வலுவுறுத்தல் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்டம் முறையாக செயற்படுத்துவதற்குரிய கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆக்கப்படவில்லை.

எந்தெந்த நாடுகளில்,  வழங்கப்படும் தீர்ப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு  புதிய கட்டளைகள் மற்றும் ஒழுங்குவிதிகள்   தற்போது  ஆக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கடன் வழங்குநர் மற்றும் கடன்  பெறுநருக்கு இடையிலான பிணக்குகளை  தீர்ப்பதற்கான ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தொடர்பான தீர்ப்பினை இந்த நாட்டில்  அமுல்படுத்துவதற்கும்  வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளின் அடிப்படையில் இதன் செல்லுபடித்தன்மை ஏற்றுக்கொள்ளப்படும்.

வெளிநாடுகளில்  வழங்கப்படும் குற்றவியல்  தொடர்பான தீர்ப்புகள் மற்றும்  தண்டனைகள் இந்த சட்டத்துக்கு செல்லுபடியாகாது,  வெளிநாடுகளில் வழங்கப்படும்  விவாகரத்து  தொடர்பான தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் தொடர்பான முரண்பாடுகளுக்கான தீர்ப்புகள் மாத்திரமே  இந்த சட்டத்துக்கு ஏற்புடையதாக அமையும். இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஏற்றக்கொள்ளப்பட்ட நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய வகையில் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்படவில்லை.

எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மற்றும் தத்துவங்களுக்கு அமைவாக நான் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டேன். அதற்கமைவாக  இந்த சட்டத்துக்குரிய ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டளைகளை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பல  பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.53 நாடுகளை உள்ளடக்கியதாக  வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இந்த சட்டத்துக்கு அமைய நாடுகளுக்கு இடையிலான தூதரகங்களின் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படும் என்றார்.