50 ஆண்டு காலம் தமிழ் பணியாற்றிய ரஷ்ய தமிழறிஞர் காலமானார் 

கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்த ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி,  காலமாகியுள்ளார்.

பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, கொரோனா தொற்றுக்காரணமாக மாஸ்கோவில் தனது 79ஆவது வயதில் காலமாகியுள்ள தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1941-ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் 1970-ல் கீழைநாட்டு மொழிகளுக்கான நிறுவனத்தில் பட்டம் பெற்றார். தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவர் துப்யான்ஸ்கி. தமிழைச் சரளமாகப் பேசக்கூடியவர்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக துப்யான்ஸ்கி ரஷ்யாவில் 10 பல்கலைக்கழகங்களின் இளங்கலை மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – ஆய்வாளர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி கொரோனா பெருந்தொற்றால் மறைவெய்தியது ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்ட இரங்கல் செய்தியில்,

“வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு எங்கள் புகழ் வணக்கம். இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு. செய்தால்தான் டுபியான்ஸ்கியின் உயிர் ஓய்வுறும். யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும் உறுபொருளும் உண்டு” என்று ட்வீட் செய்துள்ளார்.