இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவைச் சேர்ந்த  ஒரு குடும்பத்தை சேர்ந்த  5  பேர் பைபர் படகில்  இராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை பகுதியை  சென்றடைந்தனர்.

இதையடுத்து   காவல்துறையினர் அவர்களை  மீட்டு தனுஷ்கோடி காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி இருந்து இதுவரை 75 பேர்  தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர், மேலும் இன்று  தஞ்சடைந்துள்ள 5 பேரை சேர்த்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சடைந்துள்ளனர்.

இந்நிலையில், இது வரையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக  தமிழகத்தில்  வாழ்வதற்காக வந்துள்ளவர்களை இது வரையில் அகதிகளாக பதிவு செய்யப்படவில்லை என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா,  தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்குரிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டு மண்டப அகதிகள் முகாமில்  தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு முகாம்களில் தங்கியுள்ள  இவ்வாறு தஞ்சம் கோரியவர்களை அகதிகளாக பதியவில்லை என்றால் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடிய சூழ்நிலை ஏற்படும் என தெரிய வருகிறது.

இந்நிலையில், கடந்த 15ம் திகதி தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம்  இவ்வாறு தஞ்சம் கோரி தமிழகம் வந்துள்ளவர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது “எங்களை இதுவரை அகதிகளாக பதியவில்லை“ என மேரி கிளாரா என்பவர் முதல்வரிடம் தெரிவித்த போது, “தற்போது வரை மத்திய அரசிடமிருந்து தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பாக மத்திய அரசுடன், மாநில அரசு தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் நீங்கள் அனைவரும் அகதிகளாகப் பதியப்படுவீர்கள்“ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News