Tamil News
Home உலகச் செய்திகள் இந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து:  WHO

இந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பு மருந்து:  WHO

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இவ்வருட இறுதியில் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், கூறுகையில்,“ நாம் இவ்வருட இறுதியில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து முன்னதாக உலக சுகாதார அமைப்பு வித்துள்ள எச்சரிக்கையில்,“நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவும்.  கொரோனா வைரஸ் தொற்று எப்போது ஏற்பட்டது என்பதை  சீனா தெளிவாகக் கூறவில்லை. தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிகமாகப் பரவியுள்ளது. உலக மக்கள்தொகையில் 10 பேரில் ஒருவருக்குக் கொரோனா பாதிப்பு உள்ளது. நாம் கடுமையான காலத்தை நோக்கிச் செல்ல இருக்கிறோம்.  கொரோனா விவகாரம் தொடர்பாக சீனாவை விசாரிக்க சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைமையகமான ஜெனீவாவில் நேற்று முன்தினம்  நடைபெற்ற போது, உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குநர் மைக்கேல் ரையான் பேசுகையில், “எங்களது கணிப்பின்படி உலக மக்கள் தொகையில்  10 சதவிகிதம் பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

உலக மக்கள் தொகை 760 கோடி. இதில் 76 கோடி பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  ஆனால், உலகம் முழுவதும் இதுவரை 3 கோடியே 55 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சுமார் 9  கொரோனா தடுப்பு மருந்து இறுதி கட்ட பரிசோதனையில் இருந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இதற்கான தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version