Home செய்திகள் கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் இவ்வாண்டு 42 மரணங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் இவ்வாண்டு 42 மரணங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்து

கிளிநொச்சி மாவட்டத்தில் விபத்துக்களால் 42 மரணங்கள் இவ்வாண்டு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், வேக கட்டுப்பாட்டை கடுமையாக்க மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது தொடர்பில் இன்று ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் விபத்துக்களால் 42 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது. வீதியில் பயணித்து கொண்டிருப்பவர்கள் சடுதியாக திரும்புதல் மற்றும், வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமையால் இவ்வாறு விபத்துக்கள் அதிகரித்து வருவதாகவும், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்போது வீதியை கடக்க முற்படுவது தொடர்பில் கடுமையாக அவதானம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை  காவல்துறையினர் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி நகரில் விபத்துக்கள் இடம்பெறுவது குறைவாக காணப்படுவதாகவும், நகரிற்கு அப்பாலுள்ள கரடிபோக்கு தொடக்கம் பளை வரையான பகுதியிலும், 155ம் கட்டை தொடக்கம் இரணைமடு சந்தி வரையிலும் விபத்துக்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் இதன்போது தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் 70 கிலோ மீட்டர் வேகத்துக்குட்பட்டதாகவே வீதிகள் காணப்படுவதாகவும், அதனை மீறி பயணிப்பதாலேயே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இதன்போது தெரிவித்தனர்.

பேருந்து சாரதிகள் அதிக வேகத்தில் பயணித்தவாறு வெற்றிலையை பயன்படுத்துதல் மற்றும் தொலைபேசி உரையாடல்கள் அதிகம் காணப்படுவதாகவும், பயணிகள் பாதுகாப்பு தொடர்பில் கவனத்தில் கொள்வதில்லை எனவும் கருத்து முன்வைக்கப்பட்டது.

இதற்கு ஒரே தீர்வாக வீதி போக்குவரத்தில் வேக கட்டுப்பாட்டை விதிப்பதே பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version