400 தலிபான்களை விடுதலை செய்யும் ஆப்கானிஸ்தான்

397 Views

ஆப்கானிஸ்தானில் 2001 தொடக்கம் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெப்ரவரி மாதம் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கான் பிராந்தியங்களில் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா சம்மதம் தெரிவித்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5ஆயிரம் தலிபான்களை விடுதலை செய்ய வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆப்கான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வருவோம் எனவும், தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறையில் உள்ள 4,600 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  இதேவேளை எஞ்சியுள்ள 400 தலிபான்களை விடுதலை செய்வதற்கு ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி  மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் வீடியோ அழைப்பின் மூலம் பேசிய அஷ்ரப், சிறையில் எஞ்சியுள்ள 400 பேரும் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களின் 150 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தவர்கள்.  இவர்களில் 44பேர் அமெரிக்காவின் ஆபத்தானவர்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இருந்தாலும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த 400 தலிபான்களையும் விடுதலை செய்ய ஆப்கானிஸ்தானின் முக்கிய தலைவர்கள் அனுமதியளித்தனர். ஆனால் விடுதலையில் காலதாமதம் ஏற்பட்டது.

கடந்த திங்கட்கிழமை 200 தலிபான்களை ஆப்கான் அரசு விடுதலை செய்திருந்தது. இதற்கு பதிலாக தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கான் பாதுகாப்புப் படை கமாண்டர்கள் 4பேரை விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. எஞ்சியுள்ள தலிபான்களும் வெகு விரைவில் விடுதலை செய்யப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply