4 வகையான டெல்டா திரிபுகள் இலங்கையில்: பேராசிரியர் நீலிகா மாளவிகே

delta 0 4 வகையான டெல்டா திரிபுகள் இலங்கையில்: பேராசிரியர் நீலிகா மாளவிகேநாட்டில் நான்கு வகையான டெல்டா திரிபுகள் பரவுகின்றன. இதில் ஒன்று, A222V. இது பல நாடுகளில் பரவி வருகின்றது. மற்றொன்று, A1078S இலங்கை மற்றும் மலேசியாவில் பரவுகின்றது. மற்றைய இரு A701S, R24C திரிபுகளும் இலங்கையில் மட்டுமே பரவுகின்றது. இந்த திரிபுகளின் பரவலை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறையின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

“அதிக மருத்துவர்கள், மருத்துவமனைகள், சுகாதார வசதிகள் நிறைந்த மேல் மாகாணத்திலேயே நிலைமை மோசமாக இருக்கின்றது. இந்த நிலையில், வளங்கள் குறைந்த ஏனைய மாகாணங்களில் டெல்டா திரிபுகள் வேகமாக பரவினால் கற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்படும்.

“பலரின் கோரிக்கையாலேயே நாட்டை அரசாங்கம் முடக்கியது. எனினும், நாடு முழுவதும் பெறப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசை முறை சோதனை துயரத்தை அளிக்கிறது. காரணம், கொழும்பு, வவுனியா, கம்பஹா, களுத்துறை இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியாவில் டெல்டா திரிபு தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். இதேசமயம், கிழக்கு, வடமத்திய ஊவா மாகாணங்களில் மாதிரிகள் கிடைக்கவில்லை.

“டெல்டா மற்ற எல்லா மாகாணங்களிலும் இருப்பதால், அது நாடு முழுவதும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, மாகாணங்களுக்கு இடையேயான கட்டுப்பாடுகளால் இப்போது எந்த நன்மையையும் பெற வாய்ப்பில்லை. இருப்பினும், டெல்டா இப்போது எல்லா இடங்களிலும் காணப்படுவதால், கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், முடிந்த வரை மற்ற மாகாணங்களில் பரவுவதைக் குறைப்பது மிகவும் முக்கியம்.

டெல்டா பரவல், கொழும்பு மற்றும் கம்பஹாவுடன் ஒப்பிடும்போது மற்ற மாகாணங்களில் 4 முதல் 5 வாரங்கள் வரை காலதாமதம் இருக்கலாம். ஏனெனில், இந்த பகுதிகளுக்கு பின்னரே பரவியது. எனவே, மற்ற மாகாணங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இல்லை என்றால், மேல் மாகாணத்தின் நிலைமை மற்ற மாகாணங்களில் 4 முதல் 5 வாரங்களில் நடக்கலாம்.

நாட்டில் நான்கு வகையான டெல்டா திரிபுகள் பரவுகின்றன. இவற்றில் இரண்டு இலங்கையில் மட்டுமே பரவுகின்றன. இந்த திரிபுகள் தடுப்பூசி செயல்திறனில் எந்த விளைவையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த திரிபுகள் குறித்த மேலதிக ஆய்வு மற்றும் வேகமாக பரவுவதோடு தொடர்புடையதா என்பதை அறிய நாங்கள் தற்போது பல சர்வதேச ஆய்வகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம். இந்தக் கேள்வி களுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க நேரம் எடுக்கும் – என்றார்.

  ilakku-weekly-epaper-144-august-22-2021