பிரான்ஸ் :ரீயூனியன் தீவில் இருந்து 38 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் 38 இலங்கையர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடல் வழியாக ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட இலங்கையர்களின் குழு கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இக்குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி புத்தளத்தில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் புறப்பட்டனர்.

பலநாள் மீன்பிடி இழுவை படகு டியாகோ கார்சியா தீவை நோக்கி சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர், அங்கு அவர்கள் டிசம்பர் 30 ஆம் திகதி பிரித்தானிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழுவுடன் பிரெஞ்சு பிரதேசத்திற்குச் சென்றனர், அங்கு அவர்கள் ஜனவரி 14 ஆம் திகதி ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

ரீயூனியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்களும் படகு குழாமில் இருந்த மூன்று பேரும், 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்களும் மற்றும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.

இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலுக்கு தலைமை தாங்கிய கல்பிட்டி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆட்கடத்தல்காரர்கள் ஒரு நபரிடமிருந்து 1 மில்லியன்.ரூபா அறவிட இருந்த நிலையில், பணத்தில் ஒரு தொகையாக 400,000 ரூபாவை வசூலித்ததாக தெரிய வந்துள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

மக்களின் உயிரைப் பணயம் வைத்து இவ்வாறான அபாயகரமான பயணங்களை மேற்கொள்ளும் கடத்தல்காரர்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்குமாறும் இலங்கை கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.