Tamil News
Home செய்திகள் 300 கோடி ரூபாய்கள் பேரத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை புறம்தள்ளியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

300 கோடி ரூபாய்கள் பேரத்திற்கு தமிழ் மக்களின் உரிமைகளை புறம்தள்ளியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தற்போதைய அரசாங்கத்தின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 300 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னா நேற்று முன்தினம் (5) மானிப்பாயில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அபிவிருத்தி என்ற காரணத்தை முன்வைத்தே ரணில் விக்கிரமசிங்கா அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது. முன்னைய எந்த அரசும் இவ்வளவு பெருமளவான நிதியை தனி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கவில்லை.

எதிர்வரும் 16 ஆம் நாளுக்கு பின்னர் நாம் வடபகுதியை விரைவாக அபவிருத்தி செய்வோம். ஏனெனில் ரணிலும், சஜித்தும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கவில்லை அதனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியவில்லை.

ஆனால் அவர்கள் அரசுக்கு மறைமுக ஆதரவை வழங்குகிறார்கள் எனவே தான் நாம் இவ்வளவு பெருமளவு நிதியை அவர்களுக்கு வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அபிவிருத்தி என்ற காரணத்தை முன்வைத்து வழங்கப்படும் இந்த நிதியை பெற்று தமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சிகள் அனைத்தும் சிங்கள வேட்பாளரும், இன அழிப்பில் ஈடுபட்ட இரு பெரும் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சஜித்தை ஆதரிப்பதான காரணம் என யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரணில் அரசின் இந்த நிதித் தேவைகளை நிறைவு செய்வதற்கே அமெரிக்காவும், அனைத்துலக நாணய நிதியமும், அவசர அவசரமாக தேர்தல் காலத்தில் தமது நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறுத்திவைத்திருந்த நிதியை அமெரிக்கா தற்போது அவசரமாக வழங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இலக்கு இணையம் வெளியிட்ட செய்தி ஆய்வை நீங்கள் கீழ் வரும் இணைப்பில் காணலாம்

அமெரிக்காவின் ஒப்பந்தம் மகிந்தா கையில் – கோத்தா மீதான வழக்கு அமெரிக்காவிடம்
Exit mobile version