227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை-குளோபல் விட்னஸ் அமைப்பு தகவல்

227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை

கடந்த 2020ம் ஆண்டு உலகெங்கும் 227 சூழலியல் செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குளோபல் விட்னஸ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு தனது அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

உலகில் அதிகபட்சமாக கொலம்பியாவில் 65பேரும் மெக்சிகோவில் 30பேரும் பிலிப்பைன்சில் 29 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் விட்னஸ் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு,2004ம் ஆண்டிலிருந்து சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கையை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில், சுரங்கப்பணிகள், அணைக்கட்டுமானப் பணிகள்,  வேட்டைத்தடுப்பு,சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாக களத்தில் போராடியவர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றன.

மேலும் கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ம் அண்டில் 212 கொல்லப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டு 227பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பூர்வ குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021