Tamil News
Home செய்திகள் ரணிலை பலப்படுத்திய “22“ -அகிலன்  

ரணிலை பலப்படுத்திய “22“ -அகிலன்  

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைத்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் கடந்த வாரத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 22 பலப்படுத்தியிருக்கின்றது.

இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த திருத்த யோசனைகளுக்காக அரசாங்கத்தை கடுமையாக விமா்சித்துவந்த பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இதனை ஆதரித்து வாக்களித்தது. ஒட்டு மொத்தமாகப் பாா்க்கும்போது, அனைத்துத் தரப்பினரதும் ஆதரடன்தான் இது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதனை எதிா்த்து வாக்களித்த சரத் வீரசேகர தெரிவித்த காரணங்கள் கூட பொருத்தமானவையாக இருக்கவில்லை.

ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம்தான் இந்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அடிப்படையாக இருந்தது. அரசாங்கத்தை அதிகளவுக்கு ஜனநாயக மயப்படுத்துதல், ஜனாதிபதியிடமிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை வெட்டிக் குறைத்தல், அவற்றைப் பாராளுமன்றத்துக்குப் பகிா்ந்தளித்தல் என்ற கோரிக்கைகள்தான் இந்தத் திருத்த்துக்கான பாதையைத் திறந்தது.

22 ஆவது திருத்தத்துக்கான பிரேரணை சமா்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஐக்கிய ம்கள் சக்தியால் 21 ஆவது திருத்தத்துக்கான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமையால், தற்போது நிறைவேற்றப்பட்ட திருத்தம் அரசியலமைப்பில் 21 ஆவது திருத்தமாக இடம்பெறும்.

ஜே.ஆா்.ஜெயவா்தன தனக்கான 1978 ஆம் ஆண்டில் கொண்டுவந்ததுதான் தற்போதுள்ள இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு. இது நடைமுறைக்கு வந்தபோதே இது சா்வாதிகாரத்துக்கு வழிவகுப்பதாக அமையும் என கடுமையான விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஜெயவா்த்தனவும், அதனைத் தொடா்ந்து அதிகாரத்துக்கு வந்த பிரேமதாசவும் நிறைவேற்று அதிகாரங்களை விட்டுக்கொடுக்கத் தயாராகவில்லை.

ஜனாதிபதியிடமுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 1990 களிலிருந்தே முன்வைக்கப்பட்டு வருகின்றது. 1994 முதல் முறையாக ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க கூட, நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படும் என்ற வாக்குறுதியுடன்தான் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இரண்டு தடவைகள் அவா் ஜனாதிபதிப் பதவியை வகித்த போதிலும், தன்னுடைய அதிகாரங்களைக் குறைப்பதில் அவா் அக்கறைகாட்டவில்லை. அதன்பின்னா், ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷகூட அதே வாக்குறுதியை வழங்கனாரே தவிர அவரும் அதனைச் செய்யவில்லை.

2015 இல் ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன மட்டும் தன்னுடைய அதிகாரங்களில் சிலவற்றை குறைத்தாா். குறிப்பாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்தில் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தபோதிலும் அதனை நான்கரை வருடங்களாக மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அதாவது 19 ஆவது திருத்தத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், பின்னா் 2019 இல் ராஜபக்ஷக்கள் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னா் செய்யப்பட்ட 20 ஆவது திருத்தத்தில் இது இரண்டரை வருடங்களாக குறைக்கப்பட்டது.

இப்போது ரணில் விக்கிரமசிங்கவினால் செய்யப்பட்டுள்ள திருத்தத்தில் இந்தவிடயம் மாற்றப்படவில்லை. இதனை நான்கரை வருடங்களாக மாற்ற வேண்டும் என்ற மொட்டு அணியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள மொட்டு அணியினா் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இரண்டரை வருடங்களில் ரணிலிடம் செல்வதை விரும்பவில்லை.

தற்போதைய நிலையில், இரண்டரை வருடங்கள் என்ற ஏற்பாடு தொடா்வதால், அடுத்த மாா்ச் மாதத்துடன் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் ரணிலின் கைகளுக்கு வருகின்றது. அதன்பின்னா் ரணில் மீது அழுத்தங்களைக் கொடுப்பது மொட்டு அணிக்கு சாத்தியமற்றதாகிவிடும். இது ரணிலை மேலும் பலப்படுத்துவதுடன், மொட்டு அணியினா் மீதான ரணிலின் கட்டுப்பாடும் அதிகரிக்கும். மொட்டு அணி பலவீனமடையும்.

தற்போதைய திருத்தத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் இரட்டைப் பிரஜாவுரிமை. இது பஸில் ராஜபக்ஷவை இலக்காக வைத்து கொண்டுவரப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. 20 ஆவது திருத்தத்தின் மூலம் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவா்களும் தோ்தல்களில் போட்டியிட முடியும் எனக் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் பின்னரே பஸில் ராஜபக்ஷ எம்.பி.யாகி அமைச்சா் பதவியையும் பெற்றுக்கொண்டாா். பின்னா் கடந்த ராஜபக்ஷக்களுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ஜூன் 9 ஆம் திகதி அவா் எம்.பி. பதவியையும் அமைச்சா் பதவியையும் துறந்தாா்.

ஆனால், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் என்ற முறையில் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு துடித்துக்கொண்டிருக்கும் ஒருவராகவே அவா் உள்ளாா். இந்தப் பின்னணியில் போராட்டக்காரா்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு நகா்வாக 22 ஆவது திருத்தத்தின் மூலமாக இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிடவோ அரசியல் பதவிகளை வகிப்பதற்ககோ தகுதியற்றவா்கள் என்ற சரத்து சோ்க்கப்பட்டிருக்கின்றது.

இந்தத் திருத்தத்தின் உள்ளாா்ந்த அம்சங்கள் எவ்வாறு இருந்தாலும், மூன்றில் இரண்டு வெரும்பான்மையுடன், எதிா்க்கட்சிகள், சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று இந்தத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்தியிருக்கின்றது. ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அவா் அமைத்திருக்கின்றாா் என்ற கருத்தை சா்வதேச அரங்கில் தோற்றுவித்திருக்கின்றது. ரணில் எதிா்பாா்த்ததும் அதனைத்தான்.

சா்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு 22 ஆவது திருத்தம் அவசியமானது என்பதைத்தான் ரணில் விக்கிரமசிங்க அண்மைக்காலமாக சொல்லிவந்திருக்கின்றாா். இதனைத் தோற்கடிப்பது நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவா் எதிரணியினருக்கு தெரிவித்திருந்தாா். இந்தப் பின்னணியில்தான் எதிா்க்கட்சிகளும் அவரது திருத்தத்துக்கு வாக்களித்தன.

இப்போது பந்து ரணிலின் பக்கத்தில். 22 ஐ வைத்துக்கொண்டு சா்வதேசத்தை அவா் எவ்வாறு வசப்படுத்தப்போகின்றாா் – பொருளாதார நெருக்கடியை எவ்வாறு தீா்த்துவைக்கப்போகின்றாா் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்கவேண்டும்.

Exit mobile version