22 தமிழ் இளைஞர் ரி.ஐ.டி.யால் கைது; உறுதிப்படுத்தினார் பொலிஸ் பேச்சாளர்

புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரகாலத்துக்குள் சத்தம் சந்தடியில்லாமல் ரி.ஐ.டி யால் 22 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அந்தக் கைதுகளைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்தார்.

கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்படவில்லை எனவும், வெவ்வேறு குற்றவியல் குழுக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இதேவேளை, இவ்விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார். அவரிடமும் இந்தக் கைது நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், அண்மையில் வடக்கு மாகாணத்தில் சில இராணுவ முகாம்களுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகச் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தமக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.