தடைகளை தாண்டுமா ’21’? | அகிலன்

தடைகளை தாண்டுமா '21'அகிலன்

தடைகளை தாண்டுமா ’21’?

அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தம் அமைச்சரவையில் கடந்த திங்கட்கிழமை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அதற்குத் தேவையான நகர்வுகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவை பிரதமருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றது. வெள்ளிக்கிழமை இதனை அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முன்வைத்து அவர்களுடைய ஆலோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார்.

அமைச்சரவையின் அங்கீகாரம் இதற்குக் கிடைத்திருந்தாலும், அது தாண்டிச்செல்ல வேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைத் தம்வசம் வைத்துள்ள பொதுஜன பெரமுன இதனை ஆதரிக்குமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

காரணம் 21 ஆவது திருத்தமானது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதை மட்டும் இலக்காக கொண்டதல்ல. இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவர் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக வருவதைத் தடைசெய்வதையும் நோக்கமாகக் கொண்டது. மொட்டு அணியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டவர். இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டால் எம்.பி. பதவியை பசில் இழப்பார்.

பசிலை எம்.பி.யாக்கி பாராளுமன்றத்துக்குக் கொண்டுவந்து அமைச்சராக்கு வதற்காகத்தான் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தன்னுடைய அமெரிக்க பிரஜாவுரிமையை இழப்பதற்கு பசில் தயாராகவில்லாத நிலையில்தான் – இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டுள்ள எவரும்  எம்.பி.யாகி பாராளுமன்றம் வரமுடியும் என்ற 20 ஆவது திருத்தத்தை ராஜபக்சக்கள் கொண்டுவந்தார்கள். திருத்தம் கொண்டுவரப்பட்ட சில தினங்களிலேயே பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பசில் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாக்கப்பட்டு நிதி அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

தமது கட்சியின் ஸ்தாபகர் எம்.பி. பதவியை இழப்பதை மொட்டு அணியினர் விரும்பப்போவதில்லை. அதனால் 21 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான வியூகங்கள் அமைக்கும் பணியில் மொட்டு அணியின் பலம்வாய்ந்த சிலர்  களமிறங்கியிருக்கின்றார்கள்.  இவர்களை வழிநடத்திக்கொண்டிருக்கின்றார் பசில் ராஜபக்ச.

மொட்டு அணியின் பொதுச்செயலாளர் சாகல ரட்நாயக்க கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவான தகவல் ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது ”ரணிலுக்கு வழங்கப்பட்ட பணி – பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதும் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதும்தான். தேவையில்லாத விடயங்களில் அவர் தலையிடத் தேவையில்லை. அரசியலமைப்பு விடயங்களை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என அவர் சொல்லியிருக்கின்றார்.

மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பிரதமராக ரணில் பதவியேற்றுக் கொண்டாலும், அவருக்கு சில வரையறைகள் உள்ளது என்பதை மொட்டு இதன் மூலம் நினைவூட்டியிருக்கின்றது. சொன்னதுடன் மட்டுமன்றி – பிரதி சபாநாயகர் தெரிவின்போது அதனை அவர்கள் செயலிலும் காட்டினார்கள்.

மே 9 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தின் போது பசில் ராஜபக்ச நாட்டில் இருக்கவில்லை. அமெரிக்கா சென்றுவிட்டார். அவர் அமெரிக்காவில் இருந்தாலும் பொதுஜன பெரமுனவைக் கட்டுப்படுத்துவதற்கான ‘றிமோர்ட்’ அவரிடம்தான் உள்ளது. கலவரத்தின் போது தப்பி ஓடி தலைமறைவாகத் திரிந்த மொட்டு அணியினர் கொஞ்சம் உற்சாகத்துடன் இருப்பதற்கு காரணம் பசில்தான் எனச் சொல்லப்படுகின்றது.  அத்துடன் அதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதில் ரணிலின் பிரதமர் பதவியேற்பும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது!

தடைகளை தாண்டுமா '21'பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றிருந்தாலும், பாராளுமன்றத்தில் உள்ள மொட்டு அணியினரை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பது பிரதிச் சபாநாயகர் தெரிவின்போது தெளிவாக உணர்த்தப்பட்டது. பால் சமத்துவத்தைப் பேணும் வகையில் பெண் ஒருவரை பிரதி சபாநாயகராக போட்டியின்றி தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனையை முதலில் முன்வைத்தவர் ரணில்தான். அதனையடுத்தே பெரும் நம்பிக்கையுடன் ரோஹினி கவிரட்ணவை சஜித் அணி பிரதி சபாநாயகர் போட்டிக்காக களமிறக்கியது. அவரைப் போட்டியின்றி தெரிவு செய்யலாம் என்ற நம்பிக்கை இறுதிக்கட்டம் வரை நிலவிய நிலையில் – இறுதி நேரத்தில் அஜித் ராஜபக்சவை மொட்டு களமிறக்கியது. ரோஹினி தோற்கடிக்கப்பட்டார்.

ரோஹினி தோற்கடிக்கப்பட்ட இந்த நகர்வுகளின் பின்னணியில் பசில் இருந்ததாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன. ரணிலின் வரையறைகளை உணர்த்துவதற்காக மொட்டு முன்னெடுத்த ஒரு இரகசிய நகர்வாகவே இது பார்க்கப்படுகின்றது. பதற்றம் அதிகமாகவிருந்த பின்னணியில் பெரும்பாலான மொட்டு அணியினர்  அன்றைய தினம் அதாவது பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்ற மே 17 ஆம் திகதி பாராளுமன்றம் வரமாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அவர்களுடைய வீடுகள் எரிக்கப்பட்டு வீதியில் நடமாட முடியாத நிலையில் அவர்கள் இருந்தார்கள். இருந்த போதிலும் மொட்டு அணி எம்.பி.கள் தம்மை உருமாற்றிக் கொண்டு – வழமையான கார்களை விட்டுவிட்டு சிறிய கார்களிலேயே அன்றைய தினம் பாராளுமன்றம் வந்தனர். பாராளுமன்றம் வந்துதான் அவர்கள் தமது வழமையான உடைகளை அணிந்து கொண்டார்கள். இவ்வளவு ‘றிஸ்க்’ எடுத்து அவர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு பசில்தான் காரணமாக இருந்துள்ளார். பசில் கொடுத்த அழுத்தத்தினாலேயே அவர்கள் பாராளுமன்றம் வந்தனர். பிரதி சபாநாயகர் தெரிவில் தமது பலத்தைக் காட்ட வேண்டும் என பசில் திட்டமிட்டிருந்தார்.

இதன்மூலம் ரணிலுக்கு தெளிவான ஒரு செய்தியை பசில் கொடுத்திருக்கின்றார். ‘நீங்கள் பிரதமராக இருக்கலாம். ஆனால் மொட்டு உங்களுடன் இல்லை’ என்பதுதான் அந்தச் செய்தி. ரணிலுக்கான வரையறைகள் இதன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. இது ரணில் எதிர்காலத்தில் கரடு முரடான பாதை ஒன்றில் செல்லப்போகின்றார் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

ரணில் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற முதலாவது பாராளுமன்றக் கூட்டத்திலேயே ரணில் முன்வைத்த யோசனையை மொட்டு தோற்கடித்திருக்கின்றது. இது நிச்சயமாக ரணிலுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது.

பிரதி சபாநாயகர் தெரிவில் பொதுஜன பெரமுன கட்சியினர் நடந்து கொண்ட விதத்துக்கு தனது கடுமையான அதிருப்தியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பின்னணியில்தான் 21 ஆவது திருத்தம் இப்போது ஆராயப்படுகின்றது. இது பசிலின் எதிர்காலத்தை இலக்கு வைத்ததாக இருப்பதால் பசிலின் பதில் நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தடைகளை தாண்டுமா '21'‘கோட்டா கோ கம’வில் போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் கோரிக்கைகளில் பிரதானமான ஒன்றுதான் இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது.

மே 9 கலவரங்களின் பின்னர் மொட்டு அணியினர் அனைவரும் கலங்கிப் போயிருந்தார்கள். வீடுகள் சொத்துக்கள் எரிக்கப்பட்டு வெளியில் தலை காட்டுவதற்கே அஞ்சும் நிலை இருந்தது. ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர் உருவான நிலைமைகள்தான் மகிந்த மற்றும் நாமல் போன்றவர்கள் கூட தமது மறைவிடத்திலிருந்து வெளி வந்து பாராளுமன்றம் வருவதற்கு காரணமானது.

இப்போது மொட்டு அணியினருக்குள்ள ஒரே பலம் கோட்டாபய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருப்பதுதான். அந்த அதிகாரங்களை வெட்டிக் குறைப்பதையும் கட்சியின் ஸ்தாபகரான பசிலை வீட்டுக்கு அனுப்புவதையும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதுவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்குப் பெரும்பான்மை இருக்கும் நிலையில்?

இந்த நிலையில் 21 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகின்றது. இது ரணிலின் எதிர்கால அரசியலுக்கான கனவையும் சிதைத்துவிடக்கூடியதாகவே இருக்கும்!

Tamil News