2022ம் ஆண்டின் பருவமழையும் விவசாய மற்றும் அனர்த்த தயார்ப்படுத்தலும்- கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மாகாணத்தில் ஆண்டு தோறும் பருவ ரீதியாக இரண்டாவது இடை பருவம் மற்றும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று காலப்பகுதிகளில் கிடைக்கின்ற மழையை நம்பியே அதனுடைய அடுத்த ஆண்டின் முதலாவது இடைப்பருவம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காலங்களின் வாழ்வாதாரமும்  வாழ்க்கையும் தங்கியிருக்கின்றது. 

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மாரி என்று அழைக்கப்படுகின்ற இரண்டாவது இடைப்பருவம் தொடக்கம் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று காலம் வரையான காலப்பகுதிகளில் கிடைக்கின்ற மழை வீழ்ச்சியை நம்பியதாகவே வடக்கு மாகாணத்தினுடைய வாழ்வாதாரம் அமைவு பெற்றிருக்கின்றது. அந்த அடிப்படையில் 2022ஆம் ஆண்டினுடைய பருவ மழை வீழ்ச்சி பற்றிய எதிர்வுகூறலாகவும் பருவ மழைவீழ்ச்சியை நம்பிய ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் குறிப்பாக விவசாய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களையும் உள்ளடக்கியதாகவே இக்கட்டுரை அமைகின்றது.

இவ்வாண்டைப் பொறுத்தவரையில் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சி 1240 மில்லிமீற்றர் என்ற சராசரியை விட சற்று அதிகமாகவே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கு மாகாணம் தன்னுடைய ஆண்டுச் சராசரி மழைவீழ்ச்சியின் 60 வீதமான பங்கினை பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடக் கூடிய ஒரு விடையமாகும்.

இதனால் இவ்வாண்டு மாரிகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வடகீழ்பருவப் பெயர்ச்சிக் காற்று அல்லது இரண்டாவது இடை பருவகால மழையை தவிர்த்து இவ்வாண்டு வடக்கு மாகாணம் சராசரியாக 650 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது என்பது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் வடக்கு மாகாணம் பல்வேறு வகையான முறைகளில் மழையைப் பெறுகின்றது. முதலாவது இடைப்பருவ காலத்திலும் தென்மேற்குப் பருவக்காற்று காலத்திலும் உகைப்பு(மேற்காவுகை) செயன் முறையினாலும் இரண்டாவது இடைப்பருவகாலத்திலும் வடகீழ்ப்பருவக்காற்று காலத்திலும் முகப்பு அல்லது சூறாவளி செயன்முறையினாலும் மழை கிடைக்கின்றது.

இவ்வாண்டு மேற்கூறிய இரண்டு முறைகளின் மூலமாகவே வடக்கு மாகாணம் 650 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும.

இதனால் வடக்கு மாகாணத்தின் உடைய ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி இவ்வருடம் வழமையான சராசரியை விடவும் குறைந்தது 20 வீதமாவது உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2022ம் ஆண்டின் பருவரீதியிலான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு 2022ஆம் ஆண்டினுடைய இரண்டாவது இடைப்பருவ மழைவீழ்ச்சி இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 08 தேதியில் இருந்து 18ஆம் தேதி வரையான காலப்பகுதிக்குள் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு இரண்டாவது இடைப்பருவ மழையானது சராசரியை விடவும் 50 மில்லி மீற்றருக்கு கூடுதலாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. பொதுவாக இரண்டாவது இடைப்பருவம் ஆரம்பிக்கின்ற காலப்பகுதிகளில் வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாற்றத்தின் விளைவாக உருவாகின்ற தாழமுக்கம் காரணமாக வடக்கு மாகாணம் அதிக மழைவீழ்ச்சியை பெறுவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன. அதனை தொடர்ந்து இவ்வருட வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று காலத்துக்குரிய மழைவீழ்ச்சியானது நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் குறிப்பாக 16 தொடக்கம் 23ஆம் திகதிஅளவில் ஆரம்பிப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு வடகீழ்ப்பருவக்காற்று மழை வழமையான சராசரியைவிட 120 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட அளவில் அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு மாரிகாலம் மழைவீழ்ச்சியைப் பொறுத்தவரை எதிர்பார்க்கப்படுகின்ற சராசரியைவிட 18 வீதமான அளவு அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே இவ்வருட மழைவீழ்ச்சியை பொறுத்தவரையில் மழைவீழ்ச்சி அளவு இவ்வாறு இருக்க மழைவீழ்ச்சி பரம்பலை பொறுத்தவரையில் அண்மைகாலமாக வடக்கு மாகாணத்தில் அவதானிக்கக் கூடிய ஒரு முக்கியமான விடயமாக மழைநாட்களின் அளவு குறிப்பிடக்கூடியதாக காணப்படுகின்றது.

பொதுவாக வடக்கு மாகாணத்தில் மழைநாட்களின் எண்ணிக்கை காலநிலை மாற்றத்தின் காரணமாக குறைவடைந்து செல்கின்றது. இதனால் குறிப்பிட்டளவான நாட்களுக்குள்ளேயே சராசரியை விட சற்று கூடுதலான அளவில் மழை கிடைத்து வருகின்றது. எனவே குறைந்த நாட்களில் அதிக மழை கிடைக்கின்ற பொழுது ஒரு நாளுக்கான மழைவீழ்ச்சி சராசரி என்பது மிகவும் உயர்வாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக மழை நாட்களில் எண்ணிக்கை குறைவடைந்து சராசரியில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது ஒரு நாளுக்கான மழைச்செறிவு அதிகரித்து வருகின்றது. இதனால் வடக்கு மாகாணம் குறுகிய காலத்தில் கிடைக்கும் அதிகளவான கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகளை எதிர் கொள்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

எனவே வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இவ்வாண்டும் 3க்கு மேற்பட்ட தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் தோன்றுவதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு மழை வீழ்ச்சியை பொறுத்தவரையில் அதிக செறிவான மழை குறுகிய காலத்தில் கிடைப்பதன் காரணமாக அதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே இது தொடர்பாக நாங்கள் போதுமான அளவு தயார்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இருப்பது எமக்கு ஏற்படுகின்ற பெரிய பாதிப்புகளை குறைக்கும்.

நெற்செய்கைக்கான பருவம் விவசாயிகளை பொறுத்தவரை இவ்வாண்டு  ஒக்டோபர் மாதம் 10ம் தேதியில் இருந்து 30ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விதைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாக அமையும. குறிப்பாக நவம்பர் மாதத்தில் 20 ஆம் திகதியிலிருந்து பருவ மழை வீழ்ச்சி அதிகளவில் இருக்கும் என்பதனால் நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு முன்பு வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் விதைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வது சிறப்பானதாகும்.

மழைநீரை நம்பி அல்லது குளங்களில் தற்போது இருக்கின்ற நீரை நம்பி ஆரம்ப பண்படுத்தல் மற்றும் விதைப்பு செயல்பாடுகளை மேற்கொள்வது விவசாயிகளுக்கு இவ்வாண்டின் பிற்பகுதியில் குறிப்பாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் கிடைக்கின்ற கனமழை காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளை இயலுமான அளவில் குறைப்பதாக அமையும்.

குறிப்பாக விவசாயிகள் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்குள் தங்களுடைய ஆரம்ப பண்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து ஒக்டோபர் மாதம் 10ம் திகதிக்கும்  30ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதிககுள் தங்களுடைய விதைப்பு செயற்பாடுகளை பூர்த்தி செய்வது உசிதமானது ஆகும்.

பயிர்செய்கைக்கான நிலங்களை பயன்படுத்தல் நாட்டினுடைய பொருளாதார நிலைமை இதே நிலைமையில் நீடித்தால் எங்களுடைய நாடு மிகப்பெரிய தானிய பற்றாக்குறையை எதிர் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.

எனவே இவ்வாண்டு மானாவாரியாக மழையை  நம்பியோ அல்லது நீர்ப்பாசன வசதிகளை நம்பியோ பயிர்ச்செய்கைக்கு வாய்ப்புள்ள வயல் நிலங்கள் முழுவதையும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவதன் ஊடாக எங்களுடைய பிரதேசம் நெல் உற்பத்தியில் தன்னிறைவை காண்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும்; கடுமையான போரினாலும் பாதிப்புக்களை எதிர்கொண்ட எமது வடக்கு மாகாண மக்கள் தொடர்ச்சியாக வறுமையினால் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே இது தொடர்பில் அக்கறை செலுத்துவது அவசியமானதாக இருக்கின்றது.

வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பயிரிடக்கூடிய பல நிலங்கள் புலம்பெயர் மக்களின் உரிமையாக காணப்படுகின்றன. எனவே புலம்பெயர்ந்த தேசத்தில் இருக்கின்ற எமது மக்கள் புலத்தில் காணப்படுகின்ற தங்களுடைய பயிர்ச்செய்கைக்கு உட்பட கூடிய நிலங்களை தங்களுடைய உறவினர்கள் மூலமாகவோ அல்லது தங்களுக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாகவோ விவசாய நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது உணவு உற்பத்தியை அதிகரிக்கும.

புலம்பெயர்ந்த மக்கள் புலத்தில் உள்ள தங்களுடைய உறவுகளுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள. ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் அவர்களிடம் வேண்டுவது யாதெனில் நீங்கள் இம்முறை உங்கள் உறவுகளுக்கு செய்கின்ற உதவி விவசாய உற்பத்தியை நோக்கியதாக குறிப்பாக நெற்செய்கையை நோக்கியதாக அமைவது சிறப்பானதாகும்.  மானாவாரியாக மழையை நம்பியோ அல்லது நீர்ப்பாசன வசதிகளை நம்பியோ விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு நிதி உதவி அளித்தல் என்பது அவர்களுடைய நீண்டகால வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற ஒரு நிலைத்து நிற்கக்கூடிய நடவடிக்கைகளாக அமையும்.

ஆடம்பர செயற்பாடுகளுக்காக வழங்குகின்ற நிதியை விட இந்த விவசாய நடவடிக்கைகளுக்கு உதவுகின்ற நிதி இனத்தினுடைய விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே சமயம் அவர்கள் வறுமையினால் பாதிக்கப்படுவதை கணிசமான அளவு குறைக்கும்.

பொதுவாக மக்கள் அனைவருமே தங்களுடைய வீட்டுத்தோட்ட செயற்பாடுகளிலும் தங்களுடைய தோட்ட நிலங்களை முழுமையாக ஈடுபடுத்துவது சிறப்பானதாக அமையும். நீர்ப்பாசனத்துக்கு கிணறுகளில் அல்லது நீர் நிலைகளில் நீர் இல்லாது விட்டாலும் கூட ஒரு சரியான இடைவெளியில் மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால் மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டுத்தோட்ட செயல்பாடுகளை முழுமையாக முன்னெடுப்பது எங்களுடைய பிரதேசத்தின் உணவுத் தேவையின் கணிசமான அளவு பூர்த்தி செய்யப்படும்.

வெள்ள அனர்த்தத்துக்கான முன்னாயத்தபடுத்தல் இவ்வாண்டும் இரண்டாவது இடைப்பருவம் மற்றும் வடகீழ் பருவக்காற்று காலப்பகுதியில் வங்காள விரிகுடாவில் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து வரையான தாழமுக்க நிலைமைகள் தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.

வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பில் ஏற்படுகின்ற வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக உருவாகின்ற தாழமுக்க நிலை அல்லது புயல் இம்முறையும் மூன்று முதல் ஐந்து வரையான அளவில் எங்களுடைய வடக்கு மாகாணத்தை பாதிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தாழமுக்க வகைப்பாடுகள்

இல வகை  காற்றின் வேகம்-கீ.மீ அலை உயரம்(மீ)
1 தாழமுக்கம் 31-49 1.25-2.5
2 உயர் தாழமுக்கம் 50-61 4-6
3  புயல் 62-87 6-9
4 பெரும் புயல் 88-117 9-14
5 சூறாவளி 118-167 சில சமயம் 221 வரை 14
6 கடுமையான சூறாவளி 222 இனை விட அதிகம் 14

இவ்வாண்டும் மிக அதிகமான மழைவீழ்ச்சி குறுகிய காலப்பகுதியில் கிடைப்பதன் காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக நாம் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானதாக அமையும்.

  1. எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற இயற்கையான மற்றும் செயற்கையான வடிகாலமைப்புக்களை துப்புரவு செய்து இலகுவாக நீர் வழிந்தோட கூடிய வகையில் அவற்றின் தடைகளை அகற்றுதல்.
  2. செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு முன்பாக எங்களுடைய பிரதேசத்தில் நமது மக்களால் மேற்கொள்ளக் கூடிய வகையில் குளங்களை தூர்வாரி அல்லது நீர் நிலைகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் அடையல்களை அகற்றி குளங்களில் தங்களுடைய உச்ச கொள்ளளவை எட்டும் வகையில் அவற்றை உருவாக்குதல்.
  3. எங்களுடைய பிரதேசத்தில் இயற்கையான வடிகாலமைப்பை அல்லது செயற்கையான வடிகாலமைப்பை பாதிக்கின்ற சில செயல்களை கண்டறிந்து அவற்றை நிறுத்துதல்.
  4. எங்களுடைய பிரதேசத்தில் செறிவான மழை கிடைப்பதன் காரணமாக ஏற்கனவே ஈரலிப்பாக இருக்கும் நிலத்தில் சிறிய காற்று வீசினாலும் தாவரங்கள் முறிந்து விழுவதற்கு அல்லது தங்களுடைய வேர்ப்பிடிப்பை இழந்து  பாறி விழுவதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே நாங்கள் செப்டம்பர் மாதம் 30-ஆம் தகிதிக்கு முன்பதாக எங்களுடைய பிரதேசங்களில் காணப்படுகின்ற மிகப்பெரிய விதானம் கொண்ட மரங்களின் கிளைகளில் அளவை குறைப்பதனால்; அல்லது கிளைகளை வெட்டி விடுவதன் மூலம் சிறிய காற்றின் காரணமாகவும் அந்த மரங்கள் பாறி விழுவதையோ அல்லது முறிந்து விழுவதை தடுக்க முடியும.;

    எனவே இத்தகைய நிலைமைகளின் காரணமாக வடக்கு மாகாணத்தில் இவ்வாண்டு பருவமழையை பொறுத்தவரையில் மிகக் கூடுதலான அளவு அதாவது சராசரியை விட சற்று கூடுதலான அளவு கிடைக்க இருப்பதன் காரணமாக இந்த மழையை அல்லது இந்த பருவத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எங்களுடைய வறுமையை அல்லது உங்களுடைய தானிய நெருக்கடியை இயலுமான அளவில் குறைக்க உதவுகின்ற அதேசமயம் நாட்டினுடைய பொருளாதார நிலைமை காரணமாக ஏற்படக்கூடிய வறுமையை இயலுமான அளவு குறைத்து எங்களுடைய பிரதேசத்தின் உணவுத் தன்னிறைவை ஏற்படுத்துவதற்கு உதவும.