2022 மாற்றங்களின் ஆண்டு! இந்தியாவுக்கன்று!

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்திலும் நீதிக்கான போராட்டத்திலும் தாக்கம் கொள்ளும்படியான் புறக் காரணிகளில் முதன்மையான ஒன்று: இந்திய வல்லரசின் அணுகுமுறை!

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான கால ஓட்டத்தில் 2022ஆம் ஆண்டிற்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.

சனவரி 22ஆம் நாள் கொழும்புவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்குச் சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, டெலோ, ஈபிஆர்எல்எப், தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தலைமையமைச்சர் மோதிக்கு ஒரு கடிதம் தந்தனர்.  இந்திய – இலங்கை உடன்படிக்கையின் படி கொண்டுவரப்பட்ட 13ஆம் திருத்தத்தை முழுமையாகச் செயலாக்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே மடலின் சாறம். கூடவே காணாமலாக்கப்பட்டோர் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் பறிப்புத் தடுப்பு, தொல்லியல் திணைக் களத்தின் தமிழின அடையாள அழிப்பு முயற்சிகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டினர். சமஷ்டி, கூட்டாட்சி, ஒரு நாடு, இரு தேசம் என்றெல்லாம் பேசக் கூடிய தமிழ்த் தலைவர்கள் இந்தியாவின் விருப்பத்தை தங்களுடைய கோரிக்கையாக எழுதிக் கொடுத்ததே அந்த மடல்.

சிங்கள மக்களின் 3இல் 2 பெரும்பான்மையுடன் முடிசூடிக் கொண்ட கோத்தபய ‘அறகலயா’ போராட்டங்களால் உயிருக்கு அஞ்சி ஊர் ஊராய் ஓட நேர்ந்தது. கோத்தபயவைக் கொண்டாடிய சிங்கள மக்களே கொழும்பு கடற்கரையில் ’கோட்டா கோகம’, ’மைனா கோகம’ என்று போராடினர்.

வெறும் ஒரேயொரு நாடாளுமன்ற இடத்தை வைத்துக் கொண்டிருந்த இரணில் சதுரங்க ஆட்டத்தில் ஒரு சிப்பாய் போன்றவர்தான். ஆனால், அமெரிக்க வல்லரசியத்தின் விருப்பத்திற்கு இணங்க அதிபராக முடிசூட்டப்பட்டார். இரணில் பல்லக்கில் பவனி வந்தாலும் அதைத் தூக்கிச் சுமப்பது என்னவோ இராசபக்சாக்களின் பொதுசன பெரமுனாதான். எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர்கள் பல்லக்கைக் கீழே போட்டுவிட்டு ஓடலாம் என்பதும் உண்மையே.

அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை, எனவே, எரிபொருள், மின்சாரம், உணவுப் பொருட்கள் இல்லை என்பதே போராட்டத்தைத் தூண்டியது. ஈஸ்டர் குண்டுவெடிப்பைப் பயன்படுத்தி இரணில் – சிறிசேனாவை விரட்டியடித்து ஆட்சிக்கு வந்தார்கள் இராசபக்சேக்கள். 2015இல் இந்திய – அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் கைக்குப் போன இலங்கை 2019 இறுதியில் சீன சார்பு ஆட்சியாளர்களின் கைக்குப் போனது. கோத்தபய ஓடிக் கொண்டிருக்கும் போதே இலங்கைத் தீவை நோக்கி எரிபொருட்கள் செல்லத் தொடங்கின. வழங்கல் வரவர இரணிலும் பதவியிறங்க வேண்டும் என்ற போராட்டத்திற்கான மக்கள் வருகை குறையத் தொடங்கி விட்டது.

உலகப் பெரியண்ணன் அமெரிக்கா. சிங்கள வெகுமக்களின் போராட்ட உணர்வை ஆட்டுவித்துக் கொண்டிருந்த போது உள்ளூர்ப் பெரியண்ணன் இந்தியா தமிழ்த் தலைமைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்ததாகவே தெரிகிறது. தமிழ் மக்களின் போராட்டக்காரார்கள் சிங்கள மக்களின் குடியாட்சியப் போராட்டத்திலிருந்து விலகி நிற்பதே தமது தேசிய விடுதலைக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டிருந்தனர். பதவி அரசியல்காரர்களோ வெல்லும் பக்கம் எதுவென்று தெரியாத நிலையில் வேடிக்கைப் பார்ப்போம் என்று எப்போதும் போல் தமது மதிநுட்பத்தைக் காட்டிக்கொண்டனர். சிங்களக் கடும்போக்காளர்களும் சிங்கள வெகுமக்களும் ஓரணியில் நின்றிருந்த நிலைமை மாறி ஊழல், குடும்ப அரசியல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தல் காரணமாக இராசபக்சேக்களிடமிருந்து முரண்பட்டனர் வெகுமக்கள். இனவாதம் இராசபக்சேக்களை மக்களின் கோபத்திலிருந்து காப்பாற்றவில்லை.

அமைதி காத்து வேடிக்கைப் பார்க்குமாறு இந்தியா அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், அதிபரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அண்ணன் இரணிலுக்கு வாக்களிக்க வேண்டாமெனவும் அழகம்பெருமவுக்கு வாக்களிக்குமாறும் அறிவுறுத்தியதாகத் தமிழ்த் தலைமைகளே சொன்னார்கள். அமெரிக்க – இந்திய மூலவுத்திவகைக் கூட்டணி இருப்பினும் தன் வீட்டு வாசலில் தானே ராஜாவாக இருக்க வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம்.

வந்தது செப்டம்பர். ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர். ஆணையர் மிசேல் பசேல் தன் பதவிக் காலம் முடிவதற்கு முன்பு கொடுத்துச் சென்ற அறிக்கை வந்தது. உள்நாட்டுப் புலனாய்வை நம்பிப் பயனில்லை, படைச் செலவை குறைக்க வேண்டும், பொறுப்புக்கூறல் வேண்டும், உறுப்பரசுகள் உலகளாவிய மேலுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பேசியது. பெரியண்ணன் அமெரிக்கா உப்புச் சப்பில்லாத தீர்மானம் ஒன்றை முன்னகர்த்தியது. 57ஆவது அமர்வு வரை அதாவது செப்டம்பர் 2025 வரை உள்நாட்டுப் புலனாய்வுக்கு அவகாசமாம்! ஆனால், சிறிலங்கா அரசுதான் அவகாசமே கேட்கவில்லை. தீர்மானத்தை ஏற்க முடியாது என்று சொன்னவனுக்கு எதற்கு அவகாசம்? பொறுப்புக்கூறலுக்கோ மீளிணக்கத்திற்கோ விடப்பட்ட அவகாசம் அல்ல, மாறாக இரணில் அதிபர் காலம் நவம்பர் 2024இல் முடிகிறது. அடுத்து யார் வரப் போகிறார் என்பதைப் பொறுத்து பொம்மலாட்டக் கயிற்றை ஆட்டிக் கொள்ளாம் என்பது அமெரிக்காவின் எண்ணம்.

சீனா சிறிதும் தயக்கம் இன்றித் தீர்மானத்தை எதிர்தது. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை எதிர்க்காமல், அதே நேரத்தில் சீனாவுடன் நேர்க்கோட்டில் நிற்காமல், சிங்கள அரசையும் எதிர்க்காமல் எடுக்கக் கூடிய நிலைப்பாடாக இந்திய அரசு வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொண்டது. 13 ஆவது திருத்தத்தைச் செயலாக்க வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை எப்போதும் போல் தப்பாமல் பேசியது தீர்மானம்.

இப்போது வரும் பிப்ரவரி 4க்குள் இனச்சிக்கலுக்கு தீர்வென்று இரணில் சொல்கிறார். அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சமஷ்டி என்று சொல்லிக் கொண்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒற்றையாட்சி இலங்கைக்குள் 13ஆம் திருத்தம் பற்றிப் பேசி வருகிறார்கள் தமிழ்த் தலைமைகள்.

இந்த ஆண்டு தொடங்கும் போது இந்தியாவுக்குக் கொடுத்த மடலிலிருந்து இஸ்லாமிய மற்றும் மலையகத் தலைமைகள் விலகிக் கொண்டனர். 13ஆம் திருத்தத்திற்கு மேல் ஓர் எழுத்துக் கூட போகக் கூடாது என்று அவர்கள் உறுதி காட்டுகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பை இஸ்லாமியத் தலைமைகள் விரும்பவில்லை. ஆண்டுத் தொடக்கத்தில் எடுத்த நிலைப்பாட்டையே இப்போதும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், தமிழ்த் தரப்பில் இருந்து வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்றுத் தாயகம் குறித்த கோரிக்கையில் ஓர்மையை உருவாக்குவது தொடர்பில் எவ்வித முயற்சியும் இல்லை. பேச்சுவார்த்தை மேசையிலும் தமக்கென தனியான திட்டமோ, உத்தியோ இன்றி இந்தியாவின் விருப்பத்தைப் பேசிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள்.

எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் என்பதுதான் இந்திய வல்லரசின் அணுகுமுறை! இவ்வாண்டு மட்டும் 4 பில்லியன் டாலர் அதாவது 30,000 கோடி ரூபாய் பெறுமதி உள்ள உதவியை இந்தியா சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளது. மார்ச் மாதம் பிம்ஸ்டெக் மாநாட்டிற்காக சிறிலங்கா சென்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூடை நிறைய வெற்றிக் கனிகளை அள்ளிவந்தார். இந்திய – சிறிலங்கா கூட்டு கடற் பாதுகாப்பு உடன்படிக்கை. இதற்கான மையம் கொழும்புவிலூம் அம்பந்தோட்டாவிலும் அமைக்கப்படும். இந்தியா சிறிலங்காவின் விமானப்படைக்கு டொர்னியர் கண்காணிப்பு விமானமும் கடற்படைக்குக் கப்பல் பழுது நீக்கத்துறையும் கொடுப்பதாக உடன்பாடு!

எப்படியோ உருப்படியில்லாத ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இனவழிப்புக் குற்றவாளிகள் தப்பிக் கொள்ளக் கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. “இனியும் இதைப் பேசிக் கொண்டிருப்பானேன், புதிய வேணவாக்களோடு புதிய தலைமுறை ஒன்று வந்து விட்டது” என்று அலி சாப்ரி ஐ.நா.வில் அறிவுரை பகரக் கண்டோம். எனவே, அவர்களைப் பொறுத்த வரை முள்ளிவாய்க்காலொரு பழைய கதை என்ற இடத்தில் வந்துவிட்டதைக் காட்டியுள்ளது 2022. இந்தியாவுக்கும் பழைய கதைதான்! தமிழ்த் தலைமைகளுக்கு? இந்தியாவின் முகம் பார்த்துப் பேசும் வாடிக்கை மாறுமா? தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா?

தமிழ்த் தலைமைகள் தமது மக்களின் வேணவாக்களை வெளிப்படுத்த வேண்டும்,  அதன் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும், போராட வேண்டும். மக்கள்திரள் எழுச்சியைத் துப்பாக்கி முனையில் குருதிச் சேற்றில் மூழ்கடிக்க முடியாது என்பதை அறகலயா காட்டியது. சிங்களக் குடியாட்சிய ஆற்றல்களுடன் கைகோக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் இனவழிப்பைப் பற்றி பேசாமல்  நீதியோ மீளிணக்கமோ பொறுப்புக்கூறலோ தீர்வோ சாத்தியமில்லை என்று கூடைகூடையாய் படிப்பினைகளை தந்து செல்லும் 2022.

பிப்ரவரி 24 முதல் இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கும் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புப் போரின் வெடிச் சத்தங்கள் இருமுனை உலகத்தை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அங்கேயும் இந்தியா இரட்டை வேடம்தான்!

தியாகு
பொதுச் செயலாளர், தமி ழ்த் தேசிய விடுதலை இயக்கம்