Tamil News
Home செய்திகள் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் :மக்கள் போராட்டம்

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் :மக்கள் போராட்டம்

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்களை கடக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு உரிமையையும் எந்த அரசாங்கமும் கொடுக்கவில்லை எனவும், இதன் விளைவாக நிலம் உரிமை, மொழி உரிமை, கலாசார உரிமை அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, அதற்கு எதிராக இன்று  ஹட்டன் நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்களின் மாண்பினை பாதுகாக்கும் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா. சக்திவேலின் தலைமையில் இந்த போராட்டம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இடம்பெற்றது.

எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு, எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து எதிர்வரும் 2023ஆம் வருடத்தோடு 200 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அபிவிருத்தியிலும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாய் பங்காற்றியவர்களின் வாழ்நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

சரியான மலையக அரசியல் தலைவர்கள் இன்மையால் தொடர்ந்து வரும் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் பொது மக்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Exit mobile version