20வது திருத்த சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென அக்கட்சியின் பிரதி தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20வது திருத்த சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அது தொடர்பில் ஏறாவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
20வது திருத்த சட்டம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்று பேசப்படுகின்ற அதேவேளையில் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டதன் முக்கிய காரணம் முஸ்லிம்களின் அடையாளத்தினை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் கொடுப்பதற்கும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் பேச்சுவார்த்தை ஊடாக ஒரு இணக்கப்பாட்டு அரசியலைசெய்து அதனை எவ்வாறு இராஜதந்திர ரீதியில் வெல்வதற்கான காய்நகர்த்தல்களை செய்கின்ற விடயத்தினையே முஸ்லிம்களைப்பொறுத்தவரைக்கும் செய்யவேண்டும்.
தேசிய பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு இந்த நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றது. நாங்களும் தேசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவளிக்கும் அதேவேளையில் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாசைகளையும் அபிவிருத்தியையும் வென்றெடுக்கின்ற பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது.
இன்று அரசாங்கத்திற்குள் இருக்கின்ற ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் மூன்றில் இரண்டினை அடைவதற்கு அரசாங்கத்தில் உள்ள பல உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஒரு சிறுபான்மை கட்சியாக இருக்கின்ற நாங்கள் ஓட்டு மொத்த முஸ்லிம் எம்பிக்களும் பேசவேண்டிய நிலையிலும் இணக்கப்பாட்டுடனான முடிவினை எடுத்து சரியான நிலைப்பாட்டினை எடுப்போமானால் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கின்ற விடயமாகவும் இருக்கும்.
இதற்கு அப்பால் சென்று முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவர்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டில் நாங்கள் ஒரு முடிவினை எடுக்கமுடியுமாகவிருந்தால் அது ஒரு சிறப்பானதாக இருக்கும். இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எங்களால் கதைத்து எதனையும் சாதிக்கமுடியுமா என்ற நிலையுள்ள நிலையில் நாங்கள் ஒரு சிறந்த தீர்மானத்தினை எடுப்பது சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு பாதுகாப்பானதாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 20வது திருத்த சட்டம் தொடர்பில் நீதிமன்றம் சென்ற விவகாரம் எனக்கு தெரியாது. இருந்தபோதிலும் கட்சியென்ற அடிப்படையில் நாங்கள் எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லையென்பதை எங்களால் தெளிவாக கூறமுடியும். 20வது திருத்த சட்டம் எந்தளவுக்கு மாற்றமடைந்துவரப்போகின்றது என்பது எங்களுக்கு கேள்விக்குறியாகவுள்ளது. 20வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்ற பாரிய எதிர்ப்பு இருக்கின்றது. அந்த மாற்றங்களுக்கு உட்பட்டுத்தான் எங்களது தீர்மானங்கள் அமையும்.
20வது திருத்தம் இன்னும் முழுமைபெறவில்லையென்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்ததிற்கு ஆட்சிக்குள் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.அது மாற்றப்படலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. நாங்கள் பொறுத்திருந்து சரியான நேரத்தில சரியான தீர்மானத்தினை எடுக்கவேண்டும்.
இது தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பேசவேண்டிய தேவையிருக்கின்றது. நாங்கள் அரசியல் உரிமைகளை வெல்வதாக இருந்தாலும் சரி அபிவிருத்திகளைப் பெறுவதாக இருந்தாலும் சரி ஆட்சியில் இருக்கும் அரசுடன்பேசவேண்டிய தேவை சிறுபான்மை சமூகத்திற்கு உண்டு. அதற்காக சரணாகதி அரசியல் செய்யவேண்டும் என்று சொல்லவரவில்லை. அனைத்தையும் விட்டுக்கொடுத்து விட்டு அரசியல் உரிமைபற்றி பேசுகின்ற விடயம் அல்ல. அரசியல் உரிமைகளைப் பெறுவதனால் ஆட்சியில் உள்ளவர்களுடன் மட்டுமே பேசமுடியும்.” என்றார்.