சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு

1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆவது ஆண்டுசிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு – சூ.யோ.பற்றிமாகரன்
  • 42 ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் தொடரும் ஈழத் தமிழின அழிப்பு
  • ஜனாதிபதி ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தொடருமாறு விதந்துரை
  • ஐரோப்பிய பாராளுமன்றத் தீர்மானத்துக்குச் சிறீலங்கா பதிலடி
  • தமிழர்களின் வீடுகளையே அவர்களின் சிறைச்சாலையாக மாற்றும் புதிய திட்டம்
  • சர்வாதிகாரம் நோக்கிய நகர்வின் முக்கிய கருவியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம்
42 ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால்
தொடரும் ஈழத் தமிழின அழிப்பு

சிறீலங்கா 1983 யூலை மாதத்தில் மேற்கொண்ட ஈழத் தமிழினப் படுகொலைகளும், உடமைகளையும், தொழில் செய் இடங்கள், வீடுகள், கோயில்கள் என்பனவற்றையும் அழித்து ஒழித்ததும், ஈழத் தமிழர் வரலாற்றில் யூலை மாதத்தை ‘கறுப்பு யூலை’ என உலகுக்கு அறிவிக்கும் வழமையைத் தோற்றுவித்தது.

இந்த ‘கறுப்பு யூலை’  ஈழத்தமிழின அழிப்பு, இன உணர்ச்சிக் கொந்தளிப்பால் விளைவிக்கப்பட்ட ஒன்று அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியினரின் திட்டமிட்ட அரசியல் செயற் திட்டமாக முன்வைக்கப்பட்டது என்ற அடிப்படையில் இந்த சிறு ஆய்வினை முன்னெடுப்பது 1983 யூலை இனஅழிப்பு உணர்ச்சியின் அடிப்படையில் நிகழ்ந்தது அல்ல; உணர்வு பூர்வமாகத் திட்டமிட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச் செயல் என்பதனை விளங்க உதவும்.

1983 கறுப்பு யூலை ஈழத் தமிழின அழிப்பு என்பதை வெறுமனே ஈழமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கான நினைவேந்தல் வணக்கமாகவோ, இழப்புக்கள், இன்னல்களின் பின்னணியில் கவலையுறும் நிகழ்வாகவோ முன்னெடுக்காது, அது எவ்வாறு திட்டமிட்ட இனப் படுகொலையாக நிகழ்த்தப்பட்டது என்பதை வெளிக்கொணரும் செயற் திட்டமாக முன்னெடுக்க வேண்டும். இதனைப் புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்கள் தகுந்த சான்றாதரங்கள் உடன் ஊடகங்கள் மூலம் உலகின் முன் நிறுவி, 1983 இன அழிப்புக்கான நீதியையும், புனர்வாழ்வு, புனரமைப்புக்கள் இன்றும் தேவையாக இருப்பவர்களுக்கு அவற்றையும் பெற்றிட உதவிடல் வேண்டும்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், பயங்கரவாத தடைச் சட்டமும்

1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆவது ஆண்டுநிறைவேற்று அதிகாரமுள்ள சிறீலங்காவின் முதல் அரச அதிபராக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பு மூலம் தன்னை மீயுயுர் இறைமையாளராக மாற்றிக் கொண்ட ஜே. ஆர். ஜயவர்த்தன, ஈழத் தமிழர்களைப் படைபலம் கொண்டு அடக்கி ஒடுக்கும் அரச பயங்கரவாத நோக்குடையவராக இருந்தார்.

அரச பயங்கரவாதத்தை நாட்டின் சட்டமாகவே மாற்றிட 1979ஆம் ஆண்டு யூலை 19ஆம் திகதி தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியில் உருவாக்கப்பட்டதை விடக் கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிறீலங்காவின் சட்டமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த அறுதிப் பெரும்பான்மை மூலம் சிறீலங்காப் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டார்.

இந்தச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை எல்லாம் மீறி, ஒருவரைக் காரணமின்றிக் கைது செய்யவும், கால வரையின்றி அடைத்து வைக்கவும் மட்டுமல்ல, படையினர்க்குக் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட உடலை விசாரணையின்றி எரிக்கவும் அனுமதியை அளித்தது.

இதன் காரணமாகச் சிறீலங்காப் படையினர் தாம் நினைத்த நேரமெல்லாம், தமிழ் மக்கள் மேல் இனஅழிப்புத் தாக்குதல்களை தொடுக்கும் பழக்கத்தை வழக்கமாக்கினர். படையினர் வெளிப்படையாகவே சிங்கள இனவெறி யாளர்களையும், பௌத்த மதவெறி யாளர்களையும் தமிழர் மேல் திட்டமிட்ட முறையில் தாக்குதல் நடாத்தவும், தமிழர்களின் சொத்துக்களைக் கொள்ளையிடவும், தமிழர் உயிருக்கு, உடலுக்கு, உளத்திற்குச் சேதங்களை எவ்வித அச்சமுமின்றிச் செய்யவும் ஊக்கம் பெற்றனர்.

1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆவது ஆண்டு1979ஆம் ஆண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறைவேற்றிய சிறீலங்கா அதிபர் ஜே. ஆர். ஜயவர்த்தன, தனது மருகரான இராணுவ பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவவிற்கு 1979 டிசம்பர் மாதத்துள் யாழ்ப்பாணத்தில் தமிழ் தீவிரவாத அரசியலில் ஈடுபடும் அனைவரையும் அழிக்கும்படி காலக்கெடு விதித்து, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். இதன் மூலம் தமிழ் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை இல்லாதொழிக்க ஜே. ஆர். முயற்சித்தார். ஆயினும் இந்தக் காலகெடுக் கடிதத்தைத் தமிழர்கள் இரகசியமாக நகலெடுத்துத் தூதுவரால யங்களுக்கு அனுப்பி, ஈழத் தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை விளக்கியதால், இந்தத் திட்டத்தை சிறீலங்கா படையினரால் திட்டமிட்டபடி நிறைவேற்றிட இயலாது போயிற்று. ஆயினும் ஜே. ஆர் ஜயவர்த்தன அரசு, ஈழத்தமிழின அழிப்பை முன்னெடுப்பதற்கான அனைத்து வழிகளையும் அமைத்துக் கொடுத்து, சிங்கள இனவெறியை – பௌத்த மதவெறியை உச்சப் படுத்தியது.

இவ்வாறு ஈழத்தமிழரை அழித்துச் சிதறடிக்க வேண்டும்; துரத்தியடிக்க வேண்டும்; பராமரிப் பற்றவர்களாக்க வேண்டும் என்னும் முக்கூட்டு இனஅழிப்புத் திட்டத்தை சிறீலங்கா அதிபர் ஜே. ஆர். ஜயவர்த்தனவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியே முன்னெடுத்தது. இதற்கு மேலும் உதாரணமாக 1981யாழ்ப்பாணத்தில் பகைமை நாட்டுக்குள் ஊடுருவி தாக்கும் பாணியில் சிறீலங்காப் படைகளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் தரையிறக்கித் தங்க வைத்து நடாத்திய தாக்குதல்கள் அமைகின்றன.

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிப்பு

1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆவது ஆண்டுGamini Dissanayake.jpgLalith Athulathmudali.jpg1981 இல் யாழ்ப்பாணப் பொது நூலகமும், யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வெ. யோகேஸ்வரன் அவர்களின் வீடும், யாழ்ப்பாணக் கடைத்தெருக் கடைகளும், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்ட சிங்களப் படைகளால் எரிக்கப்பட்ட பொழுது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இவற்றை நடத்த வழி காட்டினர்.

இவ்வாறாக 1979 முதல் 1983 வரை நான்கு வருடங்கள் பல்வேறு வழிகளில் ஈழத் தமிழர்களை தொட்டம் தொட்டமாக இனஅழிப்பு செய்து வந்த சிறீலங்கா அரசாங்கத்தின் படையினரின் ஆதரவுடன் நடத்தப் பெற்ற பெரிய அளவிலான இனஅழிப்பே 1983 யூலை ஈழத் தமிழர் இனஅழிப்பு.

சுருக்கமாகச் சொன்னால், சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவே யூலை 1983 ஈழத் தமிழினப் படுகொலைகள்.

ஆயினும் இதுவரை சிறீலங்கா இனஅழிப்பு செய்கிறது என எந்த நாடும் அதன் அரச நிலையில் எடுத்துரைக்கத் தவறி வருகின்றது. கடந்த 38 ஆண்டுகளாக சிறீலங்கா ஈழத் தமிழர்களுக்குச் செய்த யூலை 83 இனஅழிப்பை உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் தட்டிக் கேட்காது மௌனமாக இருக்கின்றமையே இன்று வரை 42 ஆண்டுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகத் தமிழர்கள் மேலான இனஅழிப்புக்குப் பயன்படுத்த மறைமுகமாக உதவி வருகிறது. இதுவே சிறீலங்கா மேலும் மேலும் இனஅழிப்புக் கலாச்சாரத்தையே தனது அரசின் பண்பாடாக முன்னெடுக்கத் துணிவு பெறக் காரணமாகிறது.

ஐரோப்பிய பாராளுமன்றத் தீர்மானத்துக்குச் சிறீலங்கா பதிலடி

சமகாலத்தில் கூட ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் சிறீலங்காவுக்கான வரிச் சலுகையைத் தொடர்வதற்கான நிபந்தனையாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டு மென்பதை நிறைவேற்றியது. இதற்குத் தான் உடன் பதில் செயல் செய்யுமாப் போல ஜனாதிபதி ஆணைக் குழுவொன்றை நியமித்துப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவையா இல்லையா என விதந்துரைக்குமாறு செய்தார் சிறீலங்கா அரச அதிபர் கோத்தபாயா ராசபக்சா. ஆனால் அந்த ஜனாதிபதி ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச்  சட்டம் தொடர வேண்டுமென விதந்துரைத்தது மட்டு மல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெறிப் படுத்தலுக்குத் தாங்கள் அமைகின்ற மாதிரி கைது செய்யப்படுபவர்க்கு மூன்று மாதத்துக்கு மேற்படாது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்கிற ஒரு நெகிழ்ச்சியையும் அறிவித்துள்ளது. இதன்வழி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நாங்கள் செய்ய நினைத்ததை எங்கள் நாட்டுச்  சட்டப்படி செய்கின்றோம் எனப் பதிலடியினைச் சிறீலங்கா அரச அதிபர் கொடுத்துள்ளாரே தவிர, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரத் தன்மையில் பெரிய மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

தமிழர்களின் வீடுகளையே அவர்களின் சிறைச்சாலையாக மாற்றும் புதிய திட்டம்

அதே நேரத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவரை வீட்டிலேயே சிறை வைத்தல் என்கிற இன்னொரு அடிப்படை மனித உரிமையினை மீறும் திட்டத்திற்கு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன்வழி சம்பந்தப் பட்டவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையே நடைப் பிணங்களாக மாற்றக் கூடிய அபாயம் இந்தப் புதிய திட்டத்தின் மூலம் ஏற்படப் போகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகையில் வீடே சிறையாக மாற்றப்படும் வாழ்வியல் அவல நிலையை அனுபவிப் பவர்களாக கைது செய்யப் படுபவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மாறுவர்.

இவையெல்லாம் எந்த இனங் காணக் கூடிய அச்சத்தை ஏற்படுத்திச் சிறீலங்கா அரசாங்கம் ஈழத் தமிழர்களின் அரசியல் பணிவைப் பெறுதலை நோக்காகவும், போக்காகவும் கொண்டுள்ளதோ அந்த வன்முறை முறைமையை மேலும் வலுப்படுத்தவே உதவும்.

அதே வேளை இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து விடுபடுவதற்கு அரசியல் புகலிடம் தேடிச் செல்லும் அடிப்படை உரிமையும் பாதிப்புக்கு உள்ளாகு பவர்களுக்கு மறுக்கப்பட்டு, உலகத்தின் முன் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்கும் போக்கும் இருட்டடிப்புச் செய்யப் படவும் இது உதவும்.

இவ்வாறு தான் சிறீலங்கா 1983ஆம் ஆண்டு ஈழத் தமிழினப் படுகொலைகள் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு வரை பல்வேறு தந்திரோ பாயங்களைக் கையாண்டு, அவற்றை சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கும் இறைமைக்குமான தேசியப் பாதுகாப்பு நடவடிக்கைகளாக உலகுக்குக் காண்பித்து வருகிறது.

ஆனால் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தாயக, தேசிய, தன்னாட்சி உடைய இறை மையாளர்களான ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளையும், தங்களது வாழ்வியல் உரிமைகளையும் பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் எவ்வகையில் இலங்கைத் தீவின் இறைமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்ற எதிர்க் கேள்வியை எழுப்பாது விடுவது ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுத மோதல் என உலகம் அடையாளப் படுத்தும் அவல நிலையைத் தோற்றுவிக்கிறது.

தமிழர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தல்

மேலும் சிறீலங்கா இனஅழிப்புத் திட்டங்களின் மற்றொரு இலக்கு ஈழத் தமிழரின் பொருளாதார வாழ்வைப் பலவீனப்படுத்தி அவர்களை அரசாங்கத்தில் தங்கி வாழ்பவர்களாக மாற்றுவது என்பதாகும்.

1970 – 80 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் கைத்தொழில் விஞ்ஞான விவகாரங்கள் அமைச்சராக இருந்த சிறில் மத்தியூ, ஈழத் தமிழர்களின் தொழில் வளத்தையும், பொருளாதாரப் பலத்தையும் சீர்குலைப்பதற்கான நோக்கில் கொழும்பில் இருந்த எந்தத் தமிழர்களின் வீடுகள் உடைக்கப்பட வேண்டும்; எந்த எந்த தொழிற்சாலைகள் எரிக்கப்பட வேண்டும் என்பதைப் பட்டியலிட்டு சிங்கள இனவெறி – பௌத்த மதவெறி ஆட்களுக்கு வழங்கினார் என்பது வரலாறு. அதிக இலாபம் தரும் உருக்கு வியாபாரம் – உற்பத்தி, எஸ்லோன் பைப் வியாபரம் – உற்பத்தி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி – வியாபாரம் என்பன போன்ற அதிக இலாபம் தரும் தொழில் முயற்சிகளையே சிங்கள இனவெறியாளர்கள் தேடி எரித்து ஈழத் தமிழர்களுக்கு அதிக இழப்புக்களை உருவாக்கினர் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இந்த தமிழர்களின் பொருளாதாரத்தைச் சிதைத்தல் என்ற திட்டத்தின் அடிப்படையில் 1983 யூலை இன அழிப்பால் ஏற்படுத்தப்பட்ட உட்கட்டுமான அழிப்பின் மதிப்பீடு 29 மில்லியன் அமெரிக்க டொலர்கள். ஆனால் 1983 தை முதல் ஆனி வரையான யூலை இனஅழிப்புக்கு முந்திய காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் உட்கட்டு மானங்களுக்குச் சிறீலங்காப் படைகள் ஏற்படுத்திய இழப்புக்களின் மதிப்பீடு 706 மில்லியன் அமெரிக்க டொலர்கள். 1983 யூலை ஈழத்தமிழின அழிப்புக்கு பின்னரான காலத்தில் 1983 யூலை  முதல் 1988 வரையான ஐந்து ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் தமிழர்களின் உட்கட்டு மானங்களுக்குச் சிறீலங்காப் படையினர் ஏற்படுத்திய இழப்பின் மதிப்பு 385 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்தப் புள்ளி விபரங்கள் யூலை 1983 ஈழத் தமிழின அழிப்பு என்பது சிறீலங்காவின் ஈழத் தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து, அவர்களைப் பலவீனப்படுத்தி தங்கி வாழும் மக்களாக்கி அவர்களின் இறைமையை அபகரித்தல் என்கிற செயற் திட்டத்தின் ஒரு அங்கமே என்பதைத் தெளிவாக்குகின்றன.

சர்வாதிகாரம் நோக்கிய நகர்வின் முக்கிய கருவியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம்

எனவே இந்த 38ஆவது ஆண்டில் என்கிலும் புலம்பதிந்து வாழும் ஈழத் தமிழர்கள் யூலை 83 ஈழத்தமிழின அழிப்பு என்பதன் சிறீலங்காவின் நோக்குகளையும், போக்கு களையும் முறையாக ஆவணப்படுத்திய தொகுதிகளை உருவாக்கி 2009 முள்ளி வாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புப் போன்றே இதுவும் சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்புச் செயல் என்பதை நிறுவிட முயல்வார்களாக!

இன்று வரை சிறீலங்கா தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அது தன்னை சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்துவதற்கான கருவியாகவே உள்ளது என்ற உண்மையை உலகுக்கு எடுத்துரைத்து, ஈழத் தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலக நாடுகளும் உலக அமைப்புக்களும் ஏற்பதன் மூலமாகவே ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதி வாழ்வு ஏற்படும் என்பதை புலம்பதிந்த தமிழர்கள் ஓரணியில் எடுத்துரைக்க வேண்டும். இதற்கான உறுதியை யூலை 83 ஈழத் தமிழின அழிப்பின் இந்த 38ஆவது ஆண்டில் ஈழத் தமிழர்கள் எடுப்பார்களாக!

ilakku-weekly-epaper-140-july-25-2021