இந்திய மீனவர்கள் 19 பேர் விடுதலை

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று(18) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஊர்காவற்துறை நீதவான் ஜெ. கஜநிதிபாலன் முன்னிலையில் இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று(18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, கைது செய்யப்பட்ட 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதுடன் மீனவர்களின் படகொன்று அரசுடமையாக்கப்பட்டது.

இந்திய மீனவர்ளின் ஏனைய 2 படகுகள் தொடர்பான உரிமை கோரல் வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, ஊர்காவற்துறை நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களையும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமினூடாக நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 மீனவர்களே நேற்று (18) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி படகொன்றுடன் 4 மீனவர்களும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஒரு படகுடன் 03 மீனவர்களும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி ஒரு படகுடன் 12 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tamil News