Tamil News
Home செய்திகள் யாழில் ஒருவருடத்தில் 175 பேர் தற்கொலை செய்துள்ளனர் – அதிர்ச்சித் தகவல்

யாழில் ஒருவருடத்தில் 175 பேர் தற்கொலை செய்துள்ளனர் – அதிர்ச்சித் தகவல்

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18  வயதிற்கு உட்பட்ட  11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்ட  காவல்துறையினரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் இதேவேளை, 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

காங்கேசன்துறை  காவல்துறை பிராந்தியத்தில் 116 பேரும் , யாழ்ப்பாண காவல்துறை பிராந்தியத்தில் 59 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான கால பகுதியில் 54 பேர் உயிர் மாய்த்துள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்.

காங்கேசன்துறை  காவல்துறை பிராந்தியத்தில் 39 பேரும் , யாழ்ப்பாண  காவல்துறை பிராந்தியத்தில் 15 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.

அதேவேளை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 பேர் உயிர் மாய்க்க முற்பட்ட நிலையில் , உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது உயிரை மாய்க்க முற்படுவது தண்டனைக்கு உரிய குற்றம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version