Tamil News
Home ஆய்வுகள் 14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..! பா.அரியநேத்திரன்

14, ஆண்டுகள் கடந்த மே.18 நாள் நினைவு ..! பா.அரியநேத்திரன்

2023,மே,18, வியாழக்கிழமையுடன் முள்ளிவாய்காலில் போர் மௌனித்து 14, வருட நினைவு நாள். தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக இதனை ஈழத்தமிழ்மக்களும், புலம் பெயர் தமிழர்களும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர் இன்று 14, வருடங்கள் போர் மௌனித்து நாம் கண்ட மாற்றம்.

“ஒற்றைக்கதிரையில் ஒருதலைவனை பார்த்தநாம் இன்று பத்துக்கதிரையில் படத்தை மட்டும் பார்கிறோம் உண்மையில்  இதில் யார் தலைவர் என்று எவருக்கும் தெரியாது”.

இதுதான் 14, வருட மாற்றம் வேறில்லை
இன்று நாதியற்ற தமிழர்களாகவே வடக்கு கிழக்கில் தமிழர்கள் நிலை உள்ளது. சர்வதேசம் மூலமாகவோ அல்லது இலங்கை மூலமாகவோ இனப்படுகொலைக்கான நீதியோ, அல்லது இனப்பிரச்சனைக்கான தீர்வோ வழங்கப்பவில்லை என்ற ஏக்கத்துடனேயே 14,வது மே,18, நினைவு வணக்கம் வடக்கு கிழக்கிலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

இம்முறை வழமைக்கு மாறாக வடக்கு கிழக்கில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும், அஞ்சலி வணக்க நிகழ்வுகளும் மே.18, வாகன ஊர்த்திகளும் வடக்கு கிழக்கில் பல மாவட்டங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வாகவும் மே,11, தொடக்கம் மே18, வரை தொடர்ந்தது.

இலங்கையின் தலைநகர் கொழும்பு வொறலையலும் சிங்கள மக்களும் முள்ளிவாய்க்கால் 14,ம் ஆண்டு நினைவு வணக்கத்தை அனுஷ்டித்தமை ஆட்சியாளர்களுக்கும் இனப்படுகொலையாளர்களுக்கும் வயிற்றீல் புளிகரைத்துள்ளது.

ஆனால் முள்ளிவாய்காலில் போர் 2009, மே,18,ல் மௌனிக்கப்பட்டபின்னரும் தொடர்ச்சியாக படையினருடைய கெடுபிடிகள் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருந்தமையால் முதலாவது நினைவு வணக்கம் 2010, மே, 18, ல் வடக்கு கிழக்கில் செய்ய முடியாத சூழ்நிலை அப்போது இருந்தது.

ஆனால் மட்டக்களப்பில் மட்டும் அப்போது இருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொ.செல்வராசா, சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் துணிந்து கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தில் 2010, மே,18,ல் விசேட பூசை வழிபாடும் பிரார்தனைகளையும் மேற்கொண்டு மறுநாள் 2010, மே,19,ல் மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பெரிய அளவில் முள்ளிவாய்காலில் உயிர்நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஓராண்டு திதி பூசை வழிபாடும், அமிர்தகழி
தீர்தக்குளத்தில் பிண்டங்களை கரைத்து ஆராதனை வழிபாடுகளுடன் அன்னதானமும் வழங்கி ஓராண்டு முள்ளிவாய்க்கால் நினைவு மிகவும் பக்திபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய் தினம் பல பொதுமக்கள் வருகை தர இருந்த வேளையில் படையினரின் அச்சுறுத்தல்களால் மாமாங்கத்துக்கு வருகை தந்த பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்ட வரலாறுகளும் அன்று இருந்தது துணிந்து வருகைதந்த தமிழ்தேசிய பற்றாளர்களுடன் ஓராண்டு நினைவு வணக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்யப்பட்டது.
எனினும் இரண்டாவது ஆண்டு நினைவு வணக்கம் 2011, மே,18, ல் வடக்கு கிழக்கில் பல இடங்களில் செய்யப்பட்டன. முதலாம் ஆண்டு நினைவு மட்டக்களப்பில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்பதே உண்மை.2011 தொடக்கம் 2014, வரையும் முள்ளிவாய்காலுக்குப்போய் நினைவேந்தல் மேற்கொள்ள படையினர் அனுமதிக்கவில்லை.

ஆனால் முள்ளிவாய்க்காலில் 2015, மே,18, ல் முதன்முதலாக முள்ளிவாய்கால் நிலத்தில் சென்று 6, வது ஆண்டு நினைவு வணக்கம் செலுத்த பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது அப்பொழுது  வடக்கு மாகாணசபை தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் இருந்தமையால் வடமாகாண முதலைமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நினைவு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது அன்று 2015, தொடக்கம் தொடர்ச்சியாக 2023, வரை முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவு வணக்கம் செய்யப்பட்டுவருகின்றமை எல்லோரும் அறிந்த ஒன்றே 2009, தொடக்கம் 2014, வரை முள்ளிவாய்க்கால் சூழ உள்ள இடங்களில் படையினர் முகாம் இட்டு இருந்தமையால் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

2010, தொடக்கம் 2014, வரையும் முள்ளிவாய்க்கால் நிலத்தில் செல்லாமலேயே பொது இடங்களிலும், வழிபாட்டுத்தலங்களிலும் வீடுகளிலும் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் செய்யதிருந்தனர்.

2016, மே,18, தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள் தலைமையேற்று செய்யவேண்டாம் அது ஒரு பொது கட்டமைப்பு ரீதியாக செய்ய வேண்டும் என்ற கருத்துக்களும் முரண்பாடுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளதை காணமுடிகிறது. முரண்பாடுகள் இன்றி ஒற்றுமையாக நினைவு வணக்கம் முள்ளிவாய்காலில் இதுவரை இடம்பெறவில்லை ஏதோ ஒரு சாரார் குறை குற்றம் சொல்வதையே கடந்த கால நினைவுகளில் நாம் பார்த்தோம்.

தற்போது எதிர்வரும் வியாழக்கிழமை 2023, மே,18, ல் 14,வது தமிழின இனப்படுகொலை நினைவு வணக்கம் தொடர்பாவும் பொது கட்டமைப்பு தலைமையில் நினைவு வணக்கம் செய்ய வேண்டும் என ஒரு சாரார் கூறும் நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தாமே தலைமை தாங்கி நினைவு வணக்கம் அத்தனைகளையும் செய்யவுள்ளதாக ஊடகங்களில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த 2022,செப்டம்பர்,26, ல் நல்லூரில் தியாகி திலிபனுடைய 35,ம் ஆண்டு நினைவு வணக்கத்திலும் பொதுகட்டமைப்பு மேற்கொண்ட நினைவு வணக்கத்திலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் சிலரால் குழப்பம் ஏற்பட்ட செய்திகளும் அதன் காட்சிகளும் ஊடகங்களில் காணமுடிந்தது.
இதே போன்றுதான் கடந்த 2023, ஏப்ரல்,19, ல் மட்டக்களப்பு நாவலடியில் அன்னைபூபதியின் கல்லறையில் 35, வது நினைவிலும் அங்கு நினைவு வணக்கத்தை ஏற்பாடு செய்த பொதுகட்டமைப்பு உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியால் ஊர்வலமாக கொண்டு சென்ற அன்னைபூபதியின் நினைவு ஊர்தியை அங்கு செல்லவிடாமல் தடுத்த சம்மவத்தையும் காணமுடிந்தது. இது கண்டிக்கத்தக்க சம்பவம் என்பதால் அதனை தடுத்ததாக கூறப்பட்ட பொதுகட்டமைப்பு பிரதிநிதி ஒருவருடன் ஏன் இதை தடுத்தீர்கள் யாரும் அன்னை பூபதி நினைவில் சென்று வணக்கம் செலுத்துவதில் என்ன தவறு உள்ளது என கேட்டேன்.

அதற்கு அந்த பொது கட்டமைப்பு குழு உறுப்பினர் கூறினார் தாம் ஏற்கனவே சம்மந்தப்பட்ட கட்சி மட்டுமல்ல ஏனைய தமிழ் தேசிய கட்சி பிரமுகர்களுக்கு தாம் இந்த வருடம்(2023) முதல் அன்னை பூபதி நினைவு தினத்தை நடத்த ஒரு பொதுக்கட்டமைப்பு அரசியல் கட்சிகளை தவிர்த்து ஆரம்பித்துள்ளதால் அவர்களின் நிகழ்ச்சி நிரல்படி ஏப்ரல் 19, ல் நிகழ்வுகள் இடம்பெறும் அதில் கலந்து கொள்ளலாம் என எழுத்துமூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்தபோதும் ஏனய ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசுகட்சி பிரமுகர்கள் அதனை ஏற்றுக்கொண்டதகவும் ஆனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணி வேண்டுமென இதனை குழப்புவதற்கு வந்ததால் தாம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக அங்கு செல்ல வேண்டாம் என கூறியதாக சொன்னார். இதில் சரி பிழைகளுக்கு அப்பால் ஒருமித்த கருத்தொற்றுமை இதில் இருக்கவில்லை என்பதே உண்மை.

தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மணவர்களால் எதிர்வரும் 2023. மே,18, ல் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் தொடர்பாக வழங்கிய ஊடக சந்திப்பை அவதானிக்கும் போது இந்த தடவையும் குழப்ப நிலைமை உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

அவர்களின் கருத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை எனவும் நினைவேந்தல்களை குழப்பும் தரப்புகளுக்கு காட்டமாக பதிலளித்துள்ளனர். அதனூடு ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளனர் நினைவேந்தல்களை தாம் கைப்பற்ற வேண்டும் என நினைப்போர் இலங்கை நாடாளுமன்றத்தில் வடக்கு, கிழக்கில் இருந்து  22 ஆசனங்களை பெற்று வாருங்கள். எந்தவொரு தமிழ்க்கட்சிகள் கைப்பற்றுகிறதோ அந்த கட்சி முழுமையாகக் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்தை செய்யலாம் என்பதே அவர்களின் கருத்து அவ்வாறு ஒரு தமிழ்தேசியகட்சி 22, ஆசனவ்களை கடந்த 2004, தேர்தலில் கைப்பற்றியது போன்று தற்போது கைப்பற்றும்  நிலை இல்லை என்பது தெரிந்த  விடயம்.  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 2023, மே,08, ல் இடம்பெற்ற ஊடக்சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறும் குறித்த தரப்பு எந்த கட்சி என்பதை வெளிப்படையாக கூறாவிட்டாலும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஏற்கனவே கூறியதற்கே இந்த கருத்தை கூறியுள்ளனர் என்பது முன்பள்ளி்மாணவர்கள் தொடக்கம் சகல்பொதுமக்களுக்கும் புரியும்.

உண்மையில் பொதுவாக ஒற்றுமையாக நினைவு வணக்கங்களை செய்வது சிறப்புத்தான் மாற்றுக்கருத்துகள் இல்லை அந்த ஒற்றுமை கூட இந்த 14, வருடங்கள் தமிழ்தரப்பில் ஏற்படவில்லை என்பதே தமிழர்களின் அவல நிலை.

ஆனால் தற்போதுள்ள பொதுக்கட்டமைப்பில் பொதுவானவர்களை மட்டும் உள்வாங்காமல் கடந்த இக்கட்டான காலங்களில் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து நினைவேந்தல்களை செய்த தமிழ்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளையும் பொது அமைப்பில் உள்வாங்கி இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்வதால் எந்த பிரச்சனையும் எழாது வேறு வேறு குழப்ப நிலைகள் எழாமலும் சகலரும் ஒற்றுமையாக செய்யக்கூடிய சூழல் ஏற்படும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.இதனை நான் கடந்த 2018 லும் கூறியிருந்தேன்.எவரும் கணக்கெடுக்கவில்லை.

விடுதலைப்போராட்டம்,அகிம்சையில் தொடங்கி ஆயுதப்போராக பரிணமித்து 2009,மே,18, ல் ஆயுதப்போர் மௌனித்தவை எல்லாம் அரசியல் சார்ந்த போராட்டங்களே அன்றி ஆன்மீகம் சார்ந்தவையோஅல்லது அபிவிருத்தி் சார்ந்தவைகளோ இல்லை தமிழ்தேசிய விடுதலை என்பது தமிழ்தேசிய அரசியல் இல்லாமல் அதனை வென்றெடுக்க முடியாது.  அதனால்தான் கடந்த 2009,ல் விடுதலைப்புலிகள் மௌனித்த பின்னர் 2016,ம் ஆண்டு வரையும் நினைவேந்தல்களை  அது முள்ளிவாய்க்கால் நினைவாக இருக்கலாம், தியாகிதிலீபன், அன்னைபூபதி நினைவாக இருக்கலாம், ஏன் மாவீரர் தினங்களாக இருக்கலாம், படுகொலை நினைவுகளாக இருக்கலாம் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இலங்கைதமிழரசுகட்சி, தமிழ்தேசிய மக்கள்முன்னணி தொடர்ந்து செய்து வந்துள்ளமையே வரலாறு. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பால் பல கெடுபிடிகள் உயிர் அச்சுறுத்தல்கள் இருந்த வேளையில் எல்லாம் அவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவு வணக்கங்களை செய்தனர் என்பதற்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இடை இடையே சில நிகழவுகளை நடத்தி இருந்தனர்.

வேறு பொதுவான அமைப்புகளின் தேவை 2016,ல் தான் உணரப்பட்டது அல்லது அதற்கான முன்வரக்கூடிய எவரும் வரவில்லை அச்ச நிலைமை 2016,க்கு பின்னர் இருக்கவில்லை என்பதால் பொதுவாக செய்வது நல்லது என்பது பலருடைய கோரிக்கையாகவும் இருக்கலாம் உண்மையில் இது நல்லவிடயம் இருந்தாலும் அந்த கட்டமைப்பை உருவாக்க நினைத்தவர்கள் தமிழ்தேசிய அரசியல்வாதிகளை ஒதுக்கி இதனை செய்வது ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதே நாம் 2016 தொடக்கம் 2023, வரையும் நாம் சகல நினைவு வணக்க நிகழ்விலும் கண்ட உண்மை.

கடந்த மே,8,ம் திகதி யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஊடகசந்திப்பிலும் அவர்களின் கூறிய விடயத்தை சிந்தித்தால்  தமிழ்தேசிய அரசியலை ஒதுக்கி நினைவு வணக்கம் செய்யவது அவர்களின் கருத்தல்ல ஒரு கட்சி எந்த நிகழ்வுக்கும் உரிமை கோரக்கூடாது என்பதை உணர்ந்தே வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய அரசியலில் 22, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய முடிந்தால் அதனை தெரிவு செய்துவிட்டு அவர்களே நினைவு வணக்கத்தை செய்யுங்கள். என கூறியிருப்பது உண்மையிலேயே தமிழ்தேசிய அரசியலின் தேவை உணரப்பட்டுள்ளது அதை ஊடக சந்திப்பின் மூலம் தெளிவாக  வெளிக்காட்டியுள்ளனர் இதனை ஆழமாக சிந்திப்பவர்கள் உணரமுடியும்.

தமிழ்தேசிய கட்சிகள் தேர்தலில் பிரிந்து நின்று வடக்கு கிழக்குமாகாணத்தில் போட்டியிட்டாலும் பொதுவிடயங்கள், பேச்சுவார்தைகள்,அரசியல் தீர்வு விடயங்கள், காணி அபகரிப்பை தடுக்கும் விடயங்கள், இதுபோன்ற நினைவு வணக்க நிகழ்வு விடயங்களில் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான ஒரு ஒற்றுமை சகல தமிழ்தேசிய கட்சிகளுக்கும் விட்டுக்கொடுப்புடன் முரண்பாடுகளை தவிர்த்து உள்ளத்தால் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய மனநிலை மாற்றம் கட்டாயம் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வரவேண்டும்.

இதைத்தான் தமிழ் தேசிய கட்சிகள் முன் நிபந்தனையுடன் வடக்கு,கிழக்கு இணைந்த கூட்டமைப்பாகவே அரசுடனான பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் தொல்லியல் திணைக்கள அடாவடிகளும் கோவில்கள் அழிப்பும், அத்துமீறிய பௌத்த விகாரைகள் அமைப்பும், பௌத்தமயமாக்கலும் அசுர வேகத்தில் அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரசின் பேச்சுக்கான அழைப்பை நாம் மிக கவனமாக கையாள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் அழைத்த பேச்சுவார்தையிலும் அவர் வடக்கு கிழக்கை பிரித்து பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க அழைப்பை வழங்கினார் அப்போது கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிடின் தாம் சந்திப்புக்கு செல்ல மாட்டோம் என ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிகூறியது. இலங்கை தமிழரசுகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாக கடந்த 9, ம் திகதி ரணிலை சந்தித்து திட்டவட்டமாக வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பின்கள் அனைவரையும் அழைத்து பேசவேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று பின்னர் நடைபெற்ற பேச்சுக்களில் அனைவரும் சந்தித்தனர்.ஜனாதிபதி ரணிலின் பிரித்தாளும் தந்திரம் இதனால் முறியடிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் தற்போது 14, ஆண்டுகள் கடக்கின்றன தமிழ்தேசிய அரசியலிலும் ஒரு கட்சி பல கட்சிகளாக சிதறி உள்ளது மட்டுமே இந்த 14, வருடத்தில் நாம் கண்ட உண்மை ஒற்றுமையாக செயல்பட முடியாதல் பல கட்சிகளில் பல தலைவர்களை முள்ளிவாய்க்காலில் போர் மௌனிக்கப்பட்ட பின்னர் உருவாக்கியுள்ளது. இதை தவிர சர்வதேச அரங்கிலும் சரி, இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி இணைந்த வடக்கு கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வோ அல்லது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கான திட்டங்களோ இதுவரை இல்லை என்ற நிலையில்தான் எதிர்வரும் 2023, மே,18,ல் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வணக்கம் வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் நாடுகளிலும் இடம்பெறுகிறது.

Exit mobile version