Tamil News
Home செய்திகள் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சி: மன்னாரில் கைதான 14 பேர் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சி: மன்னாரில் கைதான 14 பேர் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்தபோது மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த  14 பேரும் மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் இன்று (04) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் திருகோணமலை – சாம்பல்தீவு, கோணேசபுரியை சேர்ந்த 03 குடும்பங்களின் 12 உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் ஏழு சிறுவர்களும் அடங்குவதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இவர்களை இந்தியாவிற்கு அழைத்துச்செல்லவிருந்த படகோட்டிகள் இருவரும் அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் வௌி இணைப்பு இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகோட்டிகள் இருவரும் மன்னார் தாழ்வுபாட்டைச் சேர்ந்தவர்களென்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட நால்வர் யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப் பகுதியில் இலங்கையிலிருந்து படகு மூலம் சென்ற 80 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

Exit mobile version