13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல – சுரேந்திரன்

 

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல்

சுரேந்திரன்

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல: சிறுபான்மை இன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்பின் இரண்டாம் கட்டமாகவே இச்சந்திப்பு இடம் பெற்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவது என்பது உட்பட முக்கியமான தீர்மானங்கள் சில இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ், மலையக, முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றிணைந்து இவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பது இதுதான் முதன்முறை என்பதால், இது முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தச் சந்திப்பு குறித்து அதனை ஏற்பாடு செய்திருந்த ரெலோ அமைப்பின் பேச்சாளர் சுரேந்திரன் ‘உயிரோடை தமிழ்’ வானொலிக்கு வழங்கிய செவ்வி:

கேள்வி:
கொழும்புச் சந்திப்பில் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன?

பதில்:
கொழும்பு சந்திப்பிலே 13ஆவது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அரசியல் யாப்பிலிருந்து அதை விலக்குவதற்கோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதற்கோ அல்லது மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுகின்ற போது, தற்போது கோதாக இருக்கும் மாகாணசபைகளில் தேர்தல்கள் நடத்தப்பட முடியாது என்ற விடயங்களில் நாங்கள் கருத்தொருமித்ததைக் கண்டோம். அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல் தீர்வு அல்ல. எங்களுடைய அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வு என்பது சமஷ்டி முறையான ஆட்சியமைப்பு என்பதில் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லை. அதற்காக அர்ப்பணிப்புடன் அதற்கான எங்களின் போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டிருப்போம்.

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல்இது அரசியல் யாப்பிலே இருக்கக்கூடிய ஒரு சட்டமூலம் என்ற வகையிலே இதை அரசாங்கம் முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும். அதற்கான வலியுறுத்தலை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தோடு முன்னெடுத்து நடைமுறைப் படுத்துவதற்கான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதான ஒரு தீர்மானம் எட்டப்பட்டிருக்கின்றது. அது சம்பந்தமாக ஒரு வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் அதைத் திருத்துகின்ற வேலைகளில் ஈடுபட்டுக்  கொண்டிருக்கிறார்கள். மிக விரைவிலே அந்த விடயங்கள் திருத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் சந்தித்து அதில் கைச்சாத்திடு வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கேள்வி:
21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் சந்திப்புக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ரஷாத் பதியூதினின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன என்பன அழைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அது உண்மைதானா?

பதில்:
அது பற்றியதான தீர்மானங்கள் இன்னும் எட்டப்படவில்லை. பல்வேறு கட்சிகளிடத்திலிருந்தும் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. 4 மாதங்களாக இந்த ஒருமித்த முயற்சி முன்னெடுக்கப்பட்டு வந்திருப்பதை எல்லோரும் அறிவீர்கள். ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இந்த முயற்சியை முன்னெடுத்த போது எல்லோரும் ஒத்துவர வில்லை. பல விமர்சனங்கள் ஊடகங்களில் வந்திருந்தன. கட்டங்கட்டமாக ஒவ்வொரு கட்சியாக உள்வாங்கி, இறுதியாக சென்னையிலே நடந்த சந்திப்பிலே 7 கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. தமிழரசுக் கட்சி இறுதி நேரத்திலே பின்வாங்கி யிருந்தார்கள். கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானம் எடுத்திருந்தார்கள். பின்னர் பிற்போடுமாறு கோரிக்கை விடுத்தார்கள்.

தமிழ்த் தேசியப் பரப்பிலே செயற்படுகின்ற தமிழ் பேசும் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தலைவர்களைக் கொண்ட கட்சிகள் மாத்திரம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதான ஒரு நிலைப்பாட்டிலே தான் இந்தக் கூட்டங்கள் தொடர்ந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கட்சிகளை இணைப்பது தொடர்பான நிரந்தரமான எந்தவித முடிவுகளும் எட்டப்படவில்லை. அவர்கள் மத்தியிலே அது சம்பந்தமான கலந்துரையாடல்கள் நடத்தப்படுமாக இருந்தால், 21ஆம் திகதி அவர்களும் கலந்து கொள்ளலாம். அல்லது கலந்து கொள்ளாது விடலாம்.

அரசாங்கத்தின் சார்பிலே இருக்கும் கட்சிகளை அழைப்பதில் இருக்கக்கூடிய சிரமங்கள், சங்கடங்களை புரிந்து கொண்டுதான் நாங்கள் தேசியம் சார்ந்த எதிர்த் தரப்பில் இருக்கக்கூடிய கட்சிகளை ஒழுங்கமைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:
கஜேந்திரகுமார் பென்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் பங்குகொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அவர்கள் கலந்து கொள்ளாமைக்கு காரணம் என்ன?

பதில்:
அவர்களைக் கலந்து கொள்ளுமாறு எங்கள் ஏற்பாட்டில் இணைந்து கொண்ட கட்சித் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய தலைவர்கள் பாராளுமன்றத்திலும், வெளியிலும் சந்தித்து கோரியிருந்தனர். செல்வம் அடைக்கல நாதனும், சித்தார்த்தனும் கடிதம் மூலமான அழைப்பிதழை அவர்களுக்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் வழக்கம் போல இதில் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணங்களை அவர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்த வில்லை.

கேள்வி:
13 ஆவது திருத்தத்துக்குள் அரசியல் தீர்வை முடக்கிவிடும் ஒரு முயற்சியாக இது அமைந்திருக்கின்றது எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உங்கள் பதில் என்ன?

பதில்:
பலதடவைகள் இது பற்றி கூறியிருக்கிறோம். 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியல் சாசனத்திலே உள்ள ஒன்றாகும். ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எங்கள் அரசியல் தீர்வாக அமையாது என்பதை 1987இல் இந்த 13ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த போதுகூட தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய எல்லோரும் மிகத் தெளிவாக இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு நாங்கள் கூறிவந்துள்ளோம். 13ஆவது திருத்தச் சட்டம் எங்கள் அரசியல் தீர்வு அல்ல என்பதையே இன்றும் கூறுகின்றோம். சிலரின் சுயலாப அரசியலுக்காகவும், அரசியலைப் புரிந்து கொள்ளாதவர்களும் 13ஆவது திருத்தச் சட்டம் அரசியல் தீர்வு, இதை நடைமுறைப்படுத்தினால், அரசியல் தீர்வாகி விடும் என்ற கற்பனையையும், விதண்டா வாதத்தையும் விதைத்து வருகின்றார்கள்.

அவர்களுக்கு புரிந்துணர்வு இல்லை என்பதை நாங்கள் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப் படுத்துமாறு கோருவது தான் எங்கள் கோரிக்கை. அரசியல் தீர்வு என்பது, சமஷ்டி முறையிலான எங்கள் வடக்கு கிழக்கு தாயகங்கள் ஒன்றிணைந்த, எங்கள் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற ஒரு நிரந்தரத் தீர்வு தான் அரசியல் தீர்வு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.  13ஐ நடைமுறைப்படுத்துவது என்பது அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பாகாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியிருந்தோம்.

13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல்சரியான ஒரு தெளிவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்டது. நாங்கள் வைத்த பல கோரிக்கைகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. இந்த விடயங்களை தமிழர் தரப்போடும், இந்தியாவோடும் கலந்துரையாடாமல், 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசியல் யாப்பிற்குள்ளே உள்வாங்கியிருந்தார். உள்வாங்கப்பட்ட பல விடயங்கள் எங்களுக்குப் பகிரப்படவில்லை. பகிரப்பட்ட விடயங்களிலும் பல நடைமுறைப் படுத்தப்படவில்லை. நடைமுறைப் படுத்தப்பட்ட விடயங்களில் பல விடயங்கள் மீளப் பெறப்பட்டுள்ளன. இதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வலுவிழந்த மாகாண சபையை மாகாணசபைத் தேர்தல் அறிவித்தவுடன் பலர் முதலமைச்சர், அமைச்சர், வேட்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி:
தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் உங்களுடைய இந்த முயற்சிக்கு எதிரான கருத்தை முன்வைத்திருக்கின்றார். அது குறித்து…?

பதில்:
13ஆவது திருத்தச் சட்டம் ஒரு அரசியல்அவரின் கருத்தை அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தெரிவித்த கருத்தாகவே நாங்கள் கருதுகின்றோம். அதற்கு சில நாட்களின் முன் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றிய போது, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தினால், அரசியல் தீர்வை நடைமுறைப் படுத்த முடியாது போய்விடும் என்று தமிழ்க் கட்சிகள் கருதுகிறார்கள். அது தவறு என்று வாதிட்டடிருந்தார். 13ஐ நடைமுறைப்படுத்துவதும், 13இன் ஊடாக எங்களின் அரசியல் தீர்வை நோக்கி அதாவது அதிகாரப் பகிர்வை நோக்கி ஆக்கபூர்வமாக நகர முடியும் என்றும் பாராளுமன்றத்தில் அவரே வாதத்தை முன்வைத்திருந்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலே அதற்கு எதிரான மாறுபட்ட ஒரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது வேடிக்கையானதாக இருக்கிறது.

30.01 தீர்மானம் வந்த பொழுது, அரசியல் தீர்வு என்று அதில் சொல்லப்பட்டு, அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, புதிய அரசியல் யாப்பை இயற்றி, அரசியல் தீர்வை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும், மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்பட்டு, சுமுகமான ஒரு நிர்வாக முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் 30.01 தீர்மானத்திலே இந்த சரத்துகள் உள்வாங்கப்பட்டிருந்தன. நல்லாட்சிக் காலத்தில் இலங்கை அரசாங்கம் அதற்கு அனுசரணை வழங்கியிருந்தது. இந்த ஊடகப் பேச்சாளர் அந்த சரத்திற்காக வாதிட்டவர். அதேபோல அண்மையிலும் பாராளுமன்றத்தில் அந்தக் கருத்தை முன்வைத்திருந்தவர். ஐ.நாவிலும் இதற்கு சார்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தவர். தற்போது இப்படியான முரணான கருத்தை முன்வைத்திருப்பது நகைப்பிற்குரியதாகவே  நாங்கள் கருதுகிறோம்.

Tamil News