’13’ திருத்தத்தின் அதிகாரங்கள் பறிப்பு; நீதிமன்றத்தை விக்கி அணி நாடும் என்கிறார் சுரேஷ்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன. இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுகின்றன. இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்களிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

“மாகாணத்துக்கான அதிகாரங்களை மத்திய அரசு பிடுங்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இது குறித்து தமிழ் மக்கள் தேசிய க் கூட்டணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்” என்றும் அவர் கூறினார்.

யாழில் அவரது இல்லத்தில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்று நோய் காலகட்டத்தில் எல்லா நாடுகளும் முடக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு வேலைகளைச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

அண்மையில் மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத் திட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாகாண சபைகள் எல்லாமே இல்லாமல் உள்ள சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் காலவரையின்றி பிற்போடப் பட்டிருக்கின்ற சூழலில் மாகாண அதிகாரங்களை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் இருக்கக் கூடிய பல முக்கியமான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.

இப்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய மாவட்ட வைத்தியசாலைகளில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றது. இந்த வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்த முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவு பெற்றுள்ளன.

இலங்கை அரசு ஐ.நாவுக்கு இந்தியாவுக்கு தாங்கள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம்; மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவோம் எனக் கூறிக்கொண்டு – இப்போது உள்ள அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை வழங்குவோம் எனக் கூறிக் கொண்டு இப்போது இருக்கக் கூடிய அதிகாரங்களையும் தொடர்ச்சியாகப் பறிக்கப்படுகின்ற நிலையையே எங்களால் பார்க்கக் கூடியதாவுள்ளது .

முக்கியமாக இந்த வைத்தியசாலைகளைப் பறிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே மத்திய அரசின் கீழ் உள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகள் அனைத்தையும் மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உண்மையாகவே மாகாணத்திலுள்ள முற்று முழுதான அதிகாரங்களைப் பறித்தெடுத்து தமிழ் மக்கள் என்ன காரணத்துக்காகப் போராடினார்களோ அதனைச் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது” என்றார்.