13 ஆவது திருத்தம் போதுமானதாக இருக்கவில்லை: பிரித்தானிய எம்.பி.க்கு சம்பந்தன் விளக்கம்

இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மல்க்கம் ப்ருஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சம்பந்தன் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அரச அனுசரணையுடன் சட்டவிரோத குடியேற்றங்கள் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இடம்பெறும் வரையில் தமிழ் மக்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கவில்லை என தெரிவித்த சம்பந்தன், எவ்வாறெனினும் அரசியலமைப்பின் 13வது திருத்தசட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னர் தனி நாட்டு கொள்கையை தமிழ் மக்கள் கைவிட்டனர் எனவும் தெரிவித்தார்.

13வது திருத்தச்சட்டம் ஒரு முன்னேற்றகரமான ஒரு படியாக இருந்தாலும் ஆக்கபூர்வமான அதிகாரபரவலாக்கத்திற்கு அது போதுமானதாக இருக்கவில்லை, இதனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் 13வைத்து திருத்த சட்டத்தையும் தாண்டிய ஒரு அதிகாரபரவலாக்கத்திற்கு அடிகோலும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. பல வரைபுகள் முன்வைக்கப்பட்டாலும் இன்று வரை ஒரு தீர்வினை நாம் கண்டுகொள்ளவில்லை எனவும் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.