13ஆம் திருத்த பரிந்துரை பற்றி சொல்லும் போது அதன் கடந்த காலம் பற்றியே கூற வேண்டும்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் சென்றவாரத் தொடர்ச்சியை இங்கு தருகின்றோம்.

30 ஆண்டுகளாக இது பற்றிய முன்னெடுப்புகளோ அல்லது முன்னேற்றமோ இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கையாகவும், இந்திய அரசின் கோரிக்கையாகவும் இருந்ததே தவிர இதற்கு இலங்கை அரசாங்கம் – சிங்கள அரசாங்கம் – எந்த விதத்திலும் செவிசாய்க்கவில்லை. அதனால் தான் அதன் எதிர்காலம், கடந்த காலத்தில் தான் தங்கியுள்ளது.

ஒரு அரசியல் சூழலுக்காக இந்திய அரசாங்கம் இதை பேசவேண்டும் என நினைத்தால்கூட, ராஜபக்ஸ குடும்ப வீச்சு பெருமளவில் இருப்பதால், 13ஆம் திருத்தம் பற்றி எந்தவித செயற்பாட்டிலும் ஈடுபடும் நோக்கம் இருக்காதென நினைக்கிறேன். தங்களுக்கு போதிய அதிகாரம் இல்லாத போதே 13ஆம் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வராத இலங்கை அரசாங்கம், தற்போது அதை கொண்டு வரும் என கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. அத்துடன் அரசியல் சாசனத்தின் மூலமோ, நிர்வாக கட்டமைப்பின் மூலமோ அதை எடுத்து வரவேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. ஆனால் புவிசார் அரசியல், பொருளாதாரம் பற்றி இலங்கை அரசாங்கம் சிறிது சிந்திக்குமேயானால், இதை இந்தியாவுடனான உரையாடல்களுக்காக பயன்படுத்தும் வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன.

அயல் நாட்டுடனான உறவுகளுக்காகவோ அல்லது இந்தியாவுடனான உறவுகளைப் பேணவோ 13ஆம் திருத்தம் மற்றும் 13 + ஐ பற்றி அவர்கள் தொடர்ந்து பேசலாம். ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு எந்தவித வாய்ப்பும் கிடையாது. ஏனெனில், சிங்கள மக்களும், பௌத்த குருமார்களும், பௌத்த மதவாதிகளும் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பெரும்பான்மையினரின் ஒப்புதல் வேண்டும் என கூறுவதிலிருந்து இதன் எதிர்காலத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

13ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமேயானால், அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதை ஏற்படுத்தாது 13ஆம் திருத்தத்தை ஏற்படுத்த முடியாது. இதற்காக தமிழர் பிரதேசங்களில் நிறைவேற்றப்படுகின்ற இராணுவக் கட்டுமானப் பணிகள், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த வேண்டும். தமிழ் மக்களின் நிலம், பொருளாதாரம், வாழ்வாதாரம் ஒரு இயல்பு நிலைக்குத் திரும்புமேயானால் தான் 13ஆவது திருத்தத்தைப் பற்றி பேசுவதையோ, நிறைவேற்றுவதையோ தமிழ் மக்கள் நினைத்துப் பார்க்கலாம். இதைப் பற்றி கனவு காண்பதற்குக்கூட இதில் ஒன்றும் கிடையாது.

இது ஒரு நீர்த்துப் போன திட்டம். நாம் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையை சந்தித்திருக்கின்றோம். நம்முடைய நிலப்பரப்பு எதிரியின் கையில் வீழ்ந்து கிடக்கிறது. நம்முடைய பொருளாதாரம் வீழ்த்தப்பட்டுள்ளது. சமூகச் சூழல் மிகப் பெரும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கடந்து அங்கு ஒரு அதிகாரப் பகிர்வு நடக்கும் என்று கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது. கிடைக்காததை கிடைக்கச் செய்வது பற்றித் தான் நாம் கனவு காண வேண்டும். என்னுடைய கனவு என்னவென்றால், இத்தகைய சூழலை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நிலைப்பாட்டை உருவாக்க வேண்டும். அங்கு வழி நடத்துவதற்கான சிறந்த தலைவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும். இதனூடாக 13ஆம் திருத்தத்தை ஏற்படுத்த ஒரு சாதாரண நிலைப்பாட்டை ஏற்படுத்தும்.

13ஆம் திருத்தச் சட்டம் ஒரு நீர்த்துப் போன விவகாரம். அதைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தால் நம் உண்மையான கனவுகள் மழுப்பப்படும் என்பதைத் தான் நான் சொல்ல விரும்புகின்றேன்.

13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம்1987இற்கு பின்னர் தமிழர்களின் நிலைப்பாட்டை இந்தியாவும் பயன்படுத்திக் கொண்டது. அதே போல் இலங்கையும் இதைப் பற்றி பேசுவோம், நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறி 30 ஆண்டுகளை நகர்த்தி விட்டது. இது ஒரு ராஜதந்திர உரையாடலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்கவில்லை. இதை நம்பி இருப்பது என்பது வீணாக காலத்தைக் கடத்துவது போலாகும் என்று தான் நான் நினைக்கிறேன். அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு சூழல் இல்லாத போது நாம் அந்த அதிகாரத்தைப் பற்றி எப்படி சிந்திப்பது என்பது தான் எனது கருத்து.

கேள்வி

ஈழத் தமிழர்களுக்கு 13ஆம் திருத்தம் எவ்வாறான உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

பதில்

1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக 13ஆவது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது என்று சொன்னாலும்கூட மக்களுக்கு இது எந்தவிதமான உரிமைகளையும் பெற்றுத் தரவில்லை என்றுதான் கூற முடியும்.

அதிகாரப் பகிர்வு என்பதில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பது ஒரு கருத்தாகும். இலங்கை உச்ச நீதிமன்றம் அது செல்லாது என்று கூறியதைத் தொடர்ந்து, நிர்வாகம், அரசியல், அதிகாரம் உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா சொல்லிக் கொண்டிருப்பது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தைக் காட்டுகின்றது. இலங்கை இந்திய அரசுகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தால் போதும் என்றளவில் இருப்பதால் தான் இந்த 13ஆம் திருத்தம் அமுல்ப்படுத்தப்பட பலவீனமாக உள்ளது.

இவ்வாறு இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பேசிக்கொண்டிருப்பது, தமிழகத்திலுள்ள தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்கள் பற்றி அக்கறை கொண்டுள்ளது. அதனால் தான் 13ஆம் திருத்தத்தைப் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசுகின்றது. அழுத்தம் கொடுக்கிறது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது.

இதேவேளை இலங்கை அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது அவர்கள் இருந்த சூழல், அதாவது அவர்கள் பன்னாட்டு சூழலில் சிக்கியிருந்த போது அவர்களை இவ்வாறு ஏற்றுக் கொள்ள வைத்துள்ளதே தவிர, இதனால் ஈழத் தமிழர்களுக்கோ, இந்தியாவிற்கோ எந்தவித பயனும் இல்லை.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து 22 ஆண்டுகளின் பின்னர் இலட்சக் கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டது இந்த ஒப்பந்தத்தின் பலவீனத்தைக் காட்டுகின்றது. இந்த இலங்கை இந்திய ஒப்பந்தமும், 13ஆவது திருத்தச் சட்டமும் இலங்கையில் இந்தியப் படையினர் காலூன்றவும், அதன் ஊடாக ஒரு யுத்தம் மூளவும், 2008, 2009 காலப்பகுதிகளில் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படவும் வித்திட்டது எனலாம். இலங்கை அரசு 1987 ஒப்பந்தம், 13ஆம் திருத்தத்தை வைத்து இந்தியாவை ஏமாற்றியதுடன், தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது. இதனாலேயே இலங்கையில் ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்டதற்கு இந்தியாவும் பின்னணியாக செயற்பட்டது.

தற்போது 13ஆவது திருத்தத்தை சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டாலொழிய இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முடியாது என இந்தியா சொல்கின்றது. இதை நிறைவேற்ற முடியாது என்பதை இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம், இந்தியாவுடனான இராணுவ கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவின் கோபத்திற்குள்ளான நிலையில் இலங்கை இருப்பதால், இந்தியா தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டாது, இலங்கையை எவ்வாறு தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுக்க முயல்கின்றது.

இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இராணுவக் கட்டமைப்பிற்காக அதீத செலவுகள் செய்ய வேண்டிய ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றது. கோவிட் 19 தாக்கத்தால் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பண சேமிப்புகளும் குறைந்து வருவதால், இலங்கை ஒரு பணவீக்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையை நிவர்த்தி செய்வதற்கு சீனாவின் உதவியை பெற முடியுமா என்றால், சீனா கொடுத்த கடனுக்கே வட்டியை பெற முடியாத நிலையில் உள்ளது. எனவே இந்தியாவுடன் ஒரு பொருளாதார முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் நிலையை இலங்கை கொண்டிருக்கின்றது. இவை தொடர்பாக இலங்கை இந்தியப் பிரதமர்கள் காணொளி ஊடாக பேசியிருக்கின்றனர்.

-பேராசிரியர் இரா.மணிவண்ணன்-