Home காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்

12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய்
12 வருடமாக இராணுவத்திடம் விசாரணைக்காக கையளித்த மகனை தேடியலையும் தாய் நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ்

இலங்கையில் தமிழினத்திற்கு எதிரான போர்  ஆரம்பித்த காலம் முதல் தமிழ் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்படுவதும், கடத்திச் செல்லப்படுவதுமாக இருக்கின்றனர்.

இலங்கை அரச படைகள், ஏன் தமது உறவினர்களைக் கைது செய்தார்கள், ஏன் கடத்திச் சென்றார்கள் என்ற காரணம் அறியாமல் இன்று வரையிலும் பலர் தமது உறவுகளைத் தேடியலைந்து  கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் தம் உறவுகைளைத் தேடியே இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களுக்கான நீதி இதுவரை எட்டப்படவில்லை.

தொடரும் போராட்டம்

இலங்கை அரச படைகளினால் காணாமல்  ஆக்கப்பட்ட தமது உறவுகள் கிடைத்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன், தமிழர் தாயகம் முழுவதும் தொடர்ச்சியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

அதில் ஒரு பகுதியினர் வவுனியா நகரில் சிறிய கொட்டகை அமைத்து,  இரவு பகல் பாராது  தம் உறவுகளை மீட்டுவிட வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து போராடி வருகின்றார்கள்.

இராணுவத்திடம் விசாரணைக்காக பிள்ளையைக் கையளித்து விட்டு, பல வருடங்களாகியும் தன் பிள்ளை எங்கே எனத் தெரியாது, பிள்ளையைத் தேடியலையும் செல்வராசா பவளநாயகி என்ற அன்னையும்  போராடிக் கொண்டிருக்கின்றார்.

“எனது பெயர் செல்வராசா பவளநாயகி. ஓமந்தை விளக்குவைத்த குளத்தில் வசித்து வருகின்றேன். எனக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில்  மூத்த மகன் செல்வராசா அச்சுதன்.  2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் போர் காரணமாக இடம் பெயர்ந்து வருகையில்,   விசாரித்து விட்டு விடுவோம் என இராணுவத்தினர் என் மகனைத் தம்மிடம் கையளிக்கும் படி கூறினார்கள். அவர்களுக்கு அஞ்சி மகனை  ஒப்படைத்தோம். ஆனால் என்ரை பிள்ளையை அவர்கள் எம்மிடம் மீண்டும் ஒப்படைக்க வில்லை. என் பிள்ளை  இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை.

2009 ஆம் ஆண்டு   யுத்த நேரம். கனகராயன் குளத்தில் இருந்து  இடம் பெயர்ந்து வட்டுவாகலுக்குச் சென்றோம்.  பின் அங்கே இருந்து  எல்லா மக்களையும்  இராணுவப் பகுதி நோக்கி பேருந்து மூலம் இராணுவத்தினர் கொண்டு  சென்றனர்.

எல்லா மக்களையும் பதிவு செய்த னர். அப்போது என்னுடைய மகனையும் பதிவு செய்தார்கள். அந்த நேரம் என்ரை மகனுக்கு  14 வயது தான். 1995ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தான் அவர் பிறந்தார். ஆனால்  அவர் தோற்றம் கூடியவர் . அப்போது  இராணுவத்தினர் பதிவு செய்த எல்லாரையும் விசாரிக்க வேண்டும். உங்கடை மகனையும்  விசாரிச்சிட்டு விடுவம் என்று சொல்லி மகனை மறித்து வைத்துக் கொண்டு, எங்களை செட்டிகுளம் ஆனந்தகுமாரசுவாமி முகாமிற்கு   அனுப்பி வைத்தனர். ஆனாலும் என்ரை பிள்ளைய அவர்கள் விடுவிக்க வில்லை.

அதன் பிறகு வவுனியாவிற்கு வந்து ICRC நிறுவனத்திலும், மனித உரிமை ஆணைய கத்திலும் என்ரை மகனை இராணுவத்தினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்த னாங்கள். ஆனால் இதுவரை இராணுவத்தினர் மகனை விடுவிக்க வில்லை என  முறைப்பாடு ஒன்றை  பதிவு செய்தோம்.  ஆனால் அவர்கள் எந்தத் தகவலும் சொல்ல வில்லை.

ஓவ்வொரு நாளும் மகன் வருவான்.. வருவான்…என்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால்  என்ரை பிள்ளை வரவேயில்லை.

தொடரும் துன்பம்

பின்னர் சொந்த இடங்களுக்கு மக்களை  மீளக் குடியமர்த்தும் போது முகாமில் இருந்து  எங்களை ஏற்றிக் கொண்டு வந்து சொந்த ஊருக்கும் விடாமல் இடையில் இறக்கி விட்டார்கள்.  ஓமந்தை பன்றிக்கெய்த குளத்தில் ஒரு வருடம் இருந்தோம். அதுவரை பிள்ளையின் எந்தத் தகவலும் எமக்குக் கிடைக்கவில்லை. 2019.08.20 ஆம் திகதி என்னுடைய கணவரும் நோய் காரணமாக திடீரென இறந்து விட்டார்.

அதன் பின்னர்  எங்கடை சொந்த இடமான ஓமந்தை, விளக்குவைத்த குளம் வந்து,  எங்கடை காணியில் வீடு அமைத்து இருந்தோம். என்ரை கணவர் தான் கூலி வேலைக்குப் போய்   குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார். ஆனால் திடீரென்று கணவர் இறந்ததனால் சரியான கஸ்டம். இப்போது கணவரும் இல்லை. என்ரை மூத்த மகனும் இல்லாமல் நானும் எனது பிள்ளைகளும்  தினமும் கஸ்டப்படுகிறம்.

என்ரை பிள்ளை வருவான் என்ற நம்பிக்கையில் தான் வவுனியா காணாமல் போனோர்  போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட பந்தலில் இருந்து நானும்   போராடுறன். என்ரை வீட்டை பார்க்காமல் இரவு பகலாக கண்முழிச்சு போராட்டக் களத்திலை என்ரை பிள்ளைக்காக தொடர்ந்தும்  போராடி  வாறன்.

என்ரை பிள்ளையை இராணுவத்தினரிடம் கையளிக்கும் போது அவனுக்கு 14 வயது.  இன்றைக்கு 12 வருடங்கள் போயிட்டுது. என்ரை பிள்ளை எதுவுமே அறியாத அப்பாவிப் பிள்ளை. என்ரை பிள்ளை இருக்கிறானா? இல்லையா? என  இப்போது ஒரு பதிலுமே கிடைக்கவில்லை.

எனது குடும்பத்தை பார்ப்பதா? அல்லது என் மகனைத் தேடுவதா என எனக்குத் தெரியவில்லை.  என்ரை பிள்ளை எங்கே இருந்து எவ்வளவு கஸ்டப்படுறானோ தெரிய வில்லை. என்ரை மகன் எனக்கு வேணும். எப்பிடியாவது என்ரை பிள்ளையை மீட்டுவிட வேண்டும்.  யாருமே எமது காணாமல்  ஆக்கப்பட்ட பிள்ளைகளை மீட்க  உதவி செய்யவில்லை. ஆகவே வெளி நாடுகள் தான் எமக்கான நீதியைப் பெற்றுதர வேண்டும்.” என்று அந்தத் தாய் ஏக்கத்துடன் தனது துயரைப் பகிர்ந்து கொண்டார்.

இவ்வாறு போரின் போது எவ்வளவு தமிழ் அப்பாவி மக்கள் கடத்தப் பட்டுள்ளார்கள். விசாரணைக்காக உறவுகளால் இராணுவத்தினரிடம் கையளிக்கப் பட்டுள்ளார்கள். காணாமலாக்கப் பட்டிருக்கின்றார்கள்.  இவர்களின் நிலை என்ன?  எங்கே இருக்கிறார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? அல்லது இறந்து விட்டார்களா?  அரசாங்கமே!    காணாமல் ஆக்கப் பட்டவர்களின் இருப்பை அல்லது அவர்களின் இறப்பை உறுதிப்படுத்தி தீர்வினைப் பெற்றுக் கொடு.

தமது உறவுகளை   இழந்து  தவிக்கும் இந்த அன்னையைப் போல்  இன்று எத்தனையோ பெண்கள் தம் உறவுகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதியை தாமதமின்றிப் பெற்றுக் கொடுங்கள். இதுவரை அவர்கள் உறவுகளை தொலைத்து விட்டு அனுபவித்த துன்பங்களும், வேதனைகளும் போதும். அவர்கள் இறுதிக் காலத்திலாவது நிம்மதியாக இருக்கட்டும்.

தாய் பெயர் : செல்வராசா பவளநாயகி
மகன் பெயர்: செல்வராசா அச்சுதன் (கைது  : 2009.05.19)
இடம் – ஓமந்தை விளக்குவைத்தகுளம்
தந்தை இறப்பு : 2019.08.20

 

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

Exit mobile version