11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்

முள்ளிவாய்கால் இனப்படுகொலை பேரவலம் நடந்தேறி 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இவ்வாண்டுகளில் தான் எதுவுமே மாறிவிடவில்லை. மே 18இல் ஏதோ ஒரு விளக்கை ஏற்றிவிட்டால் எமது கடமை முடிந்தாகிவிட்டது என்றாகிவிட்டது. தேசியம் என்ற போர்வையில் சம்பிரதாய சடங்குகளுக்கு அழைப்பு விடுபவர்களுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.

சாதாரண மக்களின் இவ்வாறான செயற்பாட்டு முன்னெடுப்பை தமது வருடாத்த பெரும் செயல்வடிவமாகக் காட்டிக் கொள்வதில் தான் எத்துனை மகிழ்ச்சி இவர்களுக்குப் போங்கள்.. எதுவுமே மாறிவிடவில்லை என்பதைக் கடந்து பெருமளவில் ஈழத்தமிழினம் கடந்த 11 ஆண்டுகளில் சறுக்கியிருக்கிறது. பலமுனைகளில் சிதைந்து கிடக்கின்றது என்பது தான் பெருவலி தரும் உண்மை.

2009இல் இனவழிப்பை செய்த சிங்கள தலைமைத்துவம் மேலும் ஒரு சவால்நிலை மீண்டும் ஈழத்தமிழர்களிடம் இருந்து தமக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை தனது தீவிர செயற்பாட்டு முன்னெடுப்பாகக் கொண்டு 2009இல் இருந்தே அதற்கான புறநிலைகளை தமிழர் சமூகத்தில் இருந்து இல்லாதொழித்துவிடும் செயல்வடிவங்களைத் தீவிரப்படுத்தியது.

ஈழத்தமிழர் சமூகம் என்றும் தங்கு நிலையில் இருக்கும் சூழ்நிலையை அனைத்து விடயங்களிலும் விரிவாக்கினர். சுயநிறைவு நிலையை எதிலும் ஒரு சமூகமாக எய்திவிடாமல் பார்த்துக் கொண்டனர். புனர்வாழ்வு புனருத்தாரணம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான வெளிநாட்டு உதவிகள் தவிர்க்கப்பட்டன அல்லது மட்டுப்படுத்தப்பட்டன. கடனுதவி என்ற போர்வையில் தமிழ் மக்கள் நிரந்தர மீளமுடியாத கடனாளிகள் ஆக்கப்பட்டனர்.

ஒரு சமூகத்தின் அத்திவாரங்களில் ஒன்றான கல்வி திட்டமிட்ட முறையில் சிதைவிற்குள் தள்ளிவிடப்பட்டது. போதையும் போதைவஞ்தும் அத்தியாவசிய வணிகமாகிப் போகின. ஒரு கல்விச்சரிவில் சிதைவில் தமிழர் சமூகம் இரண்டு தலைமுறை காலம் பின்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது என்பது கூட அதற்கு இன்னும் புரியவில்லை.

Mullivaikkaal 2019 set2 02 11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்கல்வியைத் தொலைத்த ஒரு சமூகம் வேலைவாய்ப்பின்மையில் மோசமான பின்னடைவைச் சந்திக்கும். அது சமூக விரோதக் கும்பல்களின் அதிகரிப்பிற்கும் சமூக சீரழிவிற்கும் வழிகோலும். ஒரு சமூகத்தை அதற்குள் இருந்தே சிதைத்துவிடும் படலம் சிறப்பாக அரங்கேறும். அச்சம் நிறைந்த வாழ்க்கை அச்சமூகத்திற்குள் இருந்தே அதற்கு ஏற்படுத்தப்படும்.

தங்குநிலை சமூகம் வறுமைக் கோட்டிற்குக்கு கீழ் இருந்தே அன்றாட வாழ்விற்கே ஒவ்வொருநாளும் அல்லாடும். அதைக் கடந்து அதனால் எதையும் சிந்திக்கும் நிலையோ அல்லது செயற்படும் நிலையோ எழாது. கடந்த 11 ஆண்டுகளில் தென் ஆசியாவிலேயெ வறுமையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நாடாக சிறீலங்கா தன்னை முன்னகர்த்த வடக்கு கிழக்கு மட்டும் பாரிய இடைவெளியில் பின்தங்கியே இருக்க வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்தும் சிங்கள மற்றும் முஸ்லீம் சமூகங்களிற்கு அடிபணிந்து போகும் நிலையைத் தமிழர் சமூகத்தில் தோற்றுவிக்கும்.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான காலத்தில் மக்களின் நலன்சார்ந்த 28 துறைகளை நிறுவி அது சார்ந்த துறைசார் வல்லுனர்களை தாயகத்திலும் புலத்திலும் ஒருங்கமைத்துப் பயணித்த ஒரு இனம் இன்று ஒருதுறையில் கூட தன்னை நிலைநிறுத்திப் பயணிக்க முடியாமல் தல்லாடுகிறது. எதிரியானவனிடம் இருந்து இவ்வாறான சிதைப்பு முன்னெடுப்பைத் தவிர வேறு எதை எம்மால் எதிர்பார்க்க முடியும். அவனின் திட்டத்தைப் புரிந்து அதிலிருந்து தம் மக்களை சரியான திட்டமிடலுடன் காத்து வழிகாட்டும் தலைமைத்துவம் எங்கே?

இவ்வாறான தொலைநோக்குடன் கூடிய அதேவேளை பல்துறைசார் ஆளுமை கொண்ட அதேவேளை சொல்லுக்கு முதல் செயற்பாட்டை வெளிப்படுத்தும் தலைமைத்துவம் இன்று எம்மிடம் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி உண்டா? மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களை ஒருகிணைத்து அவர்கள் துறைசார் புலமைகளை மக்கள் அரணாக மாற்றி நல்ல கருத்துக்கள் அனைத்தையும் செவிமடுத்து அவற்றிக்கு வடிவம் கொடுக்கும் ஒரு தலைமையை இனிமேல் காண்பது அரிது என்ற புரிதலாவது எம்மிடம் உண்டா? அவ்வாறு இருந்தால் தீர்வாக ஒரு கூட்டுத்தலைமை ஒன்றின் தோற்றுவாய் குறித்து என்ன செய்தோம்?

190121 FOD protest Mullaitivu NG 7 11 ஆண்டுகளாக வெறும் பானையில் அகப்பை கிண்டுகிறோம்..- நேரு குணரட்னம்நாம் ஏமாளிகள் என்பதை நாமே ஏற்றுக் கொண்டால் தான் யாரும் எம்மை உள்ளிருந்தோ அல்லது வெளியிருந்தோ ஏமாற்ற முடியும்! இல்லை எமக்கொன்றொரு சுயபுத்தி உண்டென்றால் இந்த நாட்களில் ஆழமாக சிந்தியுங்கள். தமிழர் அரசியலை வாழ்வை யார் யாரிடமோ விற்றுவிட்டு நாம் தான் உங்கள் தலைமை என எம்முன்னே படம் காட்டுபவர்களை அவர்களின் ஆற்றலின்மையை முதலில் தாயகத்திலும் புலத்திலும் அடையாளம் காண்போம்.

அவர்களைக் கடந்து இனிமேலாவது நகர்வோம். ஆற்றல் அற்றவர்களால் தமிழர் தலைமைத்துவம் எங்கும் நிறைந்து கிடக்கிறது. இவர்களால் தமிழர் கையில் இன்று இல்லாது போயுள்ள தமிழர் அரசியலை வாழ்வியலை மீட்டெடுத்து திறமையானவர்களிடம் இளையவர்களிடம் கையளித்து அவர்களை ஊக்கப்படுத்தி அணுசரனை வழங்கி காத்திரமாக முன்னகர்வோம் என இந்நாட்களில் உறுதியெடுத்துக் கொள்வோமா? அல்லது ஆற்றல் அற்றவர்களின் அந்நிய சக்திகளுக்கு விலைபோனவர்களின் வெறும் குடத்தை நம்பிக்கை என்னும் எமது அகப்பை கொண்டு தொடர்ந்தும் கிண்டி எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப்போகின்றோமா?

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் அறிவியலும் அதனால் எழுந்த புதிய உலகப் பார்வையும் மனிதனை ஒரு புதிய யுகத்திற்கு இன்று இட்டுச்செல்கிறன. இந்த அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூகப் பண்பாட்டுப் புறநிலைகளுக்கு ஏற்பச் சிந்தனை உலகமும் மாற்றங்களைச் சந்திக்கிறது. நாமும் காலமாற்றத்திற்கேற்ப மாற்றங்களை வெளிப்படுத்தி நீண்ட கடினமான நெருக்கடிகள் நிறைந்த எமது வரலாற்றுப் பயணத்தைத் தொடர்வோம்.

எமது மக்களின் உறுதிப்பாட்டை உளவுரனை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சிங்கள அரசு இன்றைய கோவிட் நெருகடியிலும் எம் மக்கள் மீது நெருக்குவாரங்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழினத்தின் உரிமைகளுக்கும் இறைமைக்கும் பாதுகாப்பிற்குமான புனித பயணத்தைத் தொடர்வோம்!