Home ஆய்வுகள் வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் – மட்டு.நகரான்

வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் – மட்டு.நகரான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது மேய்ச்சல் தரையினைக்கோரிய போராட்டம் 53நாட்களையும் தாண்டிய வகையில் நடைபெற்றுவருகின்றது.தமது நிலத்தினை கோரிய இந்தபோராட்டம் என்பது தமிழர்களின் மிக துயரமிகுந்த போராட்டமாக பார்க்கப்படுகின்றது.

தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கும் ஒரு சமூகத்தின் போராட்டமாக காணப்படுகின்ற நிலையில் கிழக்கில் மேலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பது தமிழர்களை மீண்டும் இந்த நாட்டில் ஒரு இன அழிப்புக்குள் கொண்டுசென்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு நிற்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் பௌத்த பிக்குகளின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக மிக மோசமாக நடைபெற்றுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் அடாவடித்தனம் மீண்டும் அரங்கேற்றப்படும் நிலைமை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் பண்ணையாளர்கள் நிலங்களை அபகரித்து அங்கு பயிர்ச்செய்துவரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தி தமது காணிகளை மீளப்பெற்றுத்தருமாறும் தமது தொழிலை சுதந்திரமாக செய்ய அனுமதிக்குமாறு கோரியும் பண்ணையாளர்களின் போராட்டம் முடிவின்றிய நிலையிலேயே தொடர்ந்துவருகின்றது.

பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் இன்று கொழும்பு அரசியலிலும் தமிழர் அரசியலிலும் மாற்றம்பெற்றுவரும் நிலையில் அவற்றினை திசைதிருப்பி தமது ஆக்கிரமிப்பு செய்யற்பாடுகளை செய்யவதற்காக இந்த செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருவதை காணமுடிகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு செயற்பாட்டினையும் அதற்கு எதிரான குரல்களையும் தென்னிலங்கையில் சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாக சித்தரிக்கு வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதை காணமுடிகின்றது.
போக்குகள் என்பது எதிர்காலத்தில் தமிழர்கள் மீதான வன்முறைகளை தூண்டுவதற்கான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

Batticaloa farmer protest 3 வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் - மட்டு.நகரான்கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவும் ஆட்சி அதிகாரங்களை பிடிப்பதற்காகவும் தமிழர்கள் பலிகடாவாக்கப்பட்டார்கள்.இன்றும் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன.

1983ஆம் ஆண்டு கலவரம்,1990ஆம் ஆண்டு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட படுகொலைகள் அனைத்தும் இந்த நோக்கங்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டது.இக்காலப்பகுதியில் பௌத்த மேலாதிக்கம் மற்றும் முஸ்லிம் பாசிசவாதம் ஆகியவற்றினை பயன்படுத்தியே தமிழர்கள் மீது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.தமிழர்கள் மீது தாக்குதல் முன்னெடுப்பதற்காக சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள்,முஸ்லிம் கடும்போக்காளர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு அன்றைய அரசுகள் தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவந்தார்கள்.அவ்வாறான குழுக்கள் என்பது தொடர்ச்சியாக மாறிமாறிவரும் ஆட்சியாளர்களின்தேவைகளை நிறைவேற்றியே வந்துள்ளது.

இவற்றின்மூலம் கிழக்கில் தமிழர்கள் படுகொலைகள் செய்வதற்கும் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு அவைவெற்றியும்பெற்றன.இந்த செயற்பாடுகள் என்பது கிழக்கில் அம்பறை மாவட்டம்,திருகோணமலை மாவட்டங்கள் சிறந்தமுறையில் செயற்படுத்தப்பட்டாலும் மட்;டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் இருந்த காரணத்தினால் ஓரளவே வெற்றிபெற்றது.எனினும் எல்லைப்பகுதிகளில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு அது ஏதுவான நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே இன்று கிழக்கில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இன்று கிழக்கில் அம்பிட்டியசுமனரத்ன தேரர் போன்றவர்கள் நேரடியாக களமிக்கப்பட்டுள்ளார்கள்.
திருகோணமலையில் திலீபனின் நினைவுத்தூபி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டது தொடக்கம் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் என்பது பெரும் அச்ச நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது.

மட்;டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைப்பகுதியாக மயிலத்தமடு,மாதவனை பகுதி காணப்படுகின்றது.அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக மூவினங்களையும் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வளர்த்துவருகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் அதிகளவான விவசாயம் செய்யும் மாவட்டம் என்ற காரணத்தினால் விவசாய செய்கை காலத்தில் மாடுகள் முழுவதுமாக மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லப்படுகின்றது.

இவ்வாறான நிலையிலேயே அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் 2010ஆம் ஆண்டு தொடக்கம் முன்னெடுக்கப்படுகின்றது.அங்கு அத்துமீறிய குடியேற்றத்திற்காக அமைக்கப்பட்ட புத்த விகாரைகள் கூட நீதிமன்ற உத்தரவிற்கமைய அகற்றப்பட்டு அப்பகுதி மேய்ச்சல் தரைக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் அப்பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 2021 கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அங்கிருந்து அத்துமீறிய குடியேற்றவாசிகள் வெளியேறும் நிலையேற்பட்டது.

எனினும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் பதவியேற்றதன் பின்னர் அத்துமீறிய குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.அவர் என்ன நோக்கத்திற்காக கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கத்தினை அடைவதற்கான செயற்பாடுகளை அவர் கச்சிதமாக முன்னெடுத்தார்.மட்டக்களப்பு நகரில் மற்றும் கல்குடா பகுதிகளில் சிங்கள பாடசாலைகளை ஆரம்பித்த அவர் கல்குடா மற்றும் ஏறாவூர் பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றும் மிக திட்டமிட்டு முன்னெடுத்தார்.

இதுபோன்று பல செயற்பாடுகளை கிழக்கிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுத்தார். இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டினை யாரும் ஒரு சிறிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளமுடியாது.

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பாரிய பிரச்சினையாகும்.அதன் காரணமாகவே இன்று மயிலத்தமடு,மாதவனை பிரச்சினையை சிங்களவர்களுக்கு ஏதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக இன்று தென்னிலங்கைக்கு கொண்டுசெல்லப்படுகின்றது.அதற்கான பணியை அம்பிட்டிய சுமனரத்ன தேரர்,சரத் வீரசேகர,அனுராதா ஜகம்பத் போன்றவர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

தற்போது மயிலத்தமடு,மாதவனை பிரச்சினையை திவிலபொத்தானையில் சிங்களவர்களை தமிழர்கள் விரட்டுவதாக தெரிவித்து தென்னிலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மயிலத்தமடு,மாதவனை எல்லை என்பதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக காணப்படுவதே திவிலபொத்தானை பகுதியாகும்.அங்கு புத்தர் சிலையினை நிறுவுவதற்கும் சிங்கள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தமிழர்கள் தடைவிதிப்பதாக தென்பகுதியில் தொடர்ச்சியான பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றிற்கு எதிரியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனையும் இணைத்து இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.இன்று கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை சிங்கள மொழியின் மூலம் தென்னிலங்கை மக்களுக்கு கொண்டுசெல்லப்படும் செயற்பாட்டை சாணக்கியன் முன்னெடுத்துவருவதன் காரணமாக அவரை தென்னிலங்கையில் சிங்கள எதிர்பாளராக காட்டி அவர் கூறும் விடயங்களை சிங்கள மக்களுக்கு எதிரானதாக காட்டும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்ற.

அதேபோன்று கிழக்கில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதாக காட்டி தெற்கில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குமான செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

எவ்வாறாயினும் பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ந்துபோகச்செய்வதற்காகவும் தமிழர்களின் நிலங்களை அபகரிப்பதற்காகவும் கிழக்கில் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராக செயற்படுவதாக நாடுமுழுவதும் காட்டி வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்காகவும் என பல்வேறு வழிமுறைகள் இன்று கிழக்கில் கையாளப்பட்டுவரும் நிலையில் தமது நில உரிமையினையும் தொழில் உரிமையினையும் வலியுறுத்தி 43வது நாளையும் தாண்டி போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றன.

பல்வேறு அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு என அனைத்து பகுதிகளிலும் குரல்கள் எழுப்பப்படவேண்டும்.அதன்மூலமே மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கான குரல்கள் சர்வதேசத்தில் எழும்பும் நிலைமை ஏற்படும்.

Exit mobile version