Home ஆய்வுகள் நீதி செத்த நாடு – துரைராஜா ஜெயராஜா

நீதி செத்த நாடு – துரைராஜா ஜெயராஜா

”…இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் என்பது அறியக்கூடியதாக உள்ளது. அவரது புகைப்படம் மற்றும் வர்ணக்கொடிகளைக் கொண்ட வாகனம் பேரணியாகச் செல்வதால் பொதுமக்களின் நல்லிணக்கத்திற்கு எவ்வாறு இடையூறு ஏற்படுகின்றது என்பதனை பொலிஸார் மன்றில் விளக்கமளிக்கத் தவறியுள்ளனர்.

மரணமடைந்த இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவரை நினைவுகூறுவதென்பது ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமையாகும். அதனைத் தடுப்பது ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.  உண்மையில் இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒரு தியாக தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரை நினைவுகூறுவதை தடை செய்வதாலேயே பொதுமக்களின் மத்தியில் அமைதியின்மை ஏற்படும் என மன்று கருதுகின்றது..”

gnanasara thero நீதி செத்த நாடு - துரைராஜா ஜெயராஜாமேற்குறித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை வழங்கியவரே முல்லைத்தீவ மாவட்ட நீதிமன்ற நீதவான் சரவணராஜா அவர்கள். நியாயத்தின் பக்கம் நின்று இத்தீர்ப்பை வழங்கிய மூன்றாம் நாள் அவர் மிகவும் நேசித்த நீதிபதி பதவியை விட்டு நீங்க வேண்டியிருந்தது.

அதற்கான காரணத்தைப் பின்வறுமாறு நீதவான் ஊடாகங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றார்.

”குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுது்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னை கண்காணித்துவந்தனர். சட்டமா அதிபர் (சஞ்சய் இராசரத்தினம்), என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023) ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீடு நீதிமன்றில் (Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குள் கோப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.”

இவை மட்டுமா காரணங்கள்

நீதவான் அவர்களின் பதவி துறப்பிற்கு அவர் குறிப்பிட்டவைகள் உடனடிக்காரணங்களாக இருக்கின்ற போதிலும், அவரை வலிந்து அகற்ற வேண்டிய தேவை பௌத்த மேலாதிக்கவாத சிறிலங்கா அரசுக்கு இருந்தது. அதில் முதன்மையானது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயம். கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயம் வெளிப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அந்த விடயத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களின் பங்களிப்பு இருந்தது. தள்ளிப்போட வாய்ப்பிருந்த அகழ்வுப் பணிகளை துரிதப்படுத்தியமை, அதற்கான குழுவை நியமித்தமை, அகழ்வுப் பணிகளை நேரடியாக சென்று அவதானித்துக்கொண்டிருந்தமை என பல நடவடிக்கைகளைத் தன் பதவிக்கு அப்பால் சென்று செய்திருந்தார்.

எனவே அகழ்வு இடம்பெற்ற 09 நாட்களிலும், நீதிபதியின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு எந்த ஒளிவுமறைவுகளையும் அரசினால் செய்ய முடியவில்லை. உடனுக்குடன் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டு நிலையில் அரசு இருந்தது. அகழ்வின் தற்காலிக முடிவில்கூட அகழ்வின் அறிக்கையை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றுக்கே சமர்ப்பிக்கவேண்டியிருக்கிறது.

இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த அல்லது கையளிக்கப்பட்டவர்களே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெட்டத்தெளிவாக உணர்த்தும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி குறித்த உண்மை ஒரு நீதிமன்றின் ஊடாக வெளிவருவது சிறீலங்கா அரசிற்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். சிறீலங்கா அரசபடைகள் மேற்கொண்ட இனப்படுகொலை அம்பலப்படும். எனவே தான் அதில் ஒரு முடிவெடுக்கும் முன்பே நீதவான் அவர்கள் அப்பதவியிலிருந்து உயிரச்சுறுத்தல் கொடுக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளார்.

அவர் தனக்கு அழுத்தம் பிரயோகித்த நபர்களின் முக்கியமானவராக குறிப்பிடும் தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் இராசரத்தினம், சிறீலங்காவின் நீதித்துறையில் முதன்மைப் பதவியில் இருப்பவர். இம்முறை இடம்பெற்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின்று இறுதிநாள் நிகழ்வை நிறுத்த தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தியவர். கொழும்பிலிருந்து தனி உலங்குவானூர்தியில் சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளை அனுப்பி “அலுவல்“ பார்த்தவர்.

அந்தளவுக்கு ”சிறீலங்காவின் நீதித்துறை கட்டமைப்பின்” மீது விசுவாசம் கொண்ட சட்டமா அதிபர் முல்லைத்தீவு நீதவானை அழைத்து குருந்தூர்மலை தீர்ப்பு விடயத்தில் அழுத்தம் பிரயோகித்தார் என்பதெல்லாம் முழுமையாக ஏற்கக்கூடிய விடயங்கள்தான். ஒரு நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும். அப்போதுதான் அரச அழுத்தங்களுக்கு அடிபணியாது நீதித்துறை மட்டுமாவது இயங்கமுடியும். மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால் சிறீலங்காவின் நிலைமையோ சுயாதீனமாக இங்கும் நீதிபதிகளை நீதித்துறையின் தலைமையே  அச்சுறுத்த்தி அரசுக்கு வேண்டியதைச் செய்விக்கும் நிலையில் நீதி செத்துக்கிடக்கிறது.

அதேபோல பௌத்த பிக்குகளும், அவர்களின் கைப்பொம்மைகளாக செயற்படும் சரத்வீரசேகர போன்ற சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாயும் இலங்கையின் நீதித்துறை மாற்றப்பட்டுள்ளது. அவர்களை மீறி எந்த நீதியையும் வழங்க முடியாத நிலைக்கு நீதிமன்றங்கள் வந்துவிட்டன. அவர்களுக்கு அடிபணியாது சரியாகக் கடமையாற்றும் நீதிபதிகளை இடம்மாற்றுவது, பதவி இறக்குவது, அழுத்தங்களைப் பிரயோகித்து பதவி துறக்கவைப்பது எனப் பல்வேறு சதித் திட்டங்களை மேற்கொள்ளும் நிலைக்கு இந்நாட்டு நீதித்துறை மாற்றப்பட்டிருக்கிறது.

மிக அண்மை வருடங்களாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வெளியே வருபவர்களை நீதிமன்ற வாசலில் வைத்தே சுட்டுக்கொள்ளும்  அச்சுறுத்தல் பாரம்பரியம் ஒன்று உருவாகி வருகின்றது. இதனால் அநீதிகளுக்கு எதிராக சாட்சி சொல்பவர்களை கொன்றொழிக்கும் நன்கு பயிற்றப்பட்ட துப்பாக்கிதாரிகள் நாடு முழுவதும் இயங்கிவருகின்றனர்.

இராணுவமயமாக்கலை சாதரணமாக்குவதை திரைமறைவில் நின்று ஊக்குவிக்கும் செயற்பாடுகளின் உச்சம்தான் இந்நிலை. இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் மட்டும் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் பார்த்திருக்க, சிசிரிவி கெமராக்கள் கவனித்துக்கொண்டிருக்க ஏ.கே.47 ஆயுதங்களோடு மோட்டார் சைக்கிளில் வரும் துப்பாக்கிதாரிகள் அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றுவிட்டு சுதந்திரமாக தப்பிச்செல்லும் காட்சிகள் நாளாந்தம் வெளியாகிக்ககொண்டிருக்கின்றன.

இதனையெல்லாம் அவதானித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான், எடுத்த முடிவும், நாட்டைவிட்டு அவர் வெளியேறியமையும் மிகவும் சரியானது. உண்மையைப் பேசிவிட்டு இந்நாட்டில் உயிர்வாழ முடியாது என்பதற்கு மிகச் சரியான உதாரணமாக அவரது வெளியேற்றம் அமைந்திருக்கின்றது. சிறிலங்காவின் நீதித்துறைக்கு அவமானத்தை மாத்திரமல்லாது, இந்நாட்டு நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எவ்வாறான அழுத்தங்களுக்கெல்லாம் அடிபணிந்து நீதிக் கடமைசெய்ய வேண்டியுள்ளது என்பதையும் உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

Exit mobile version