Home ஆய்வுகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை சிங்களவர்கள் பயன்படுத்துகின்றனர் – மட்டு.நகரான்

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை சிங்களவர்கள் பயன்படுத்துகின்றனர் – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பதற்ற நிலைமையொன்றை காணமுடிகின்றது.குறிப்பாக தமிழர்களை இலக்குவைத்து பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைமையினால் கிழக்கில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நான் கடந்த பல மாதங்களாக பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தேன். கிழக்கில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் கிழக்கு தமிழர்களுக்கு ஆபத்தான நிலைமையினை ஏற்படுத்தப்போகின்றது, தமிழர்கள் பிரிந்து நிற்பது தமிழர்களுக்கான பலவீனமானது என பல்வேறு தடவைகள் வலியுறுத்திவந்துள்ளேன். அந்த விடயங்கள் இன்று நடைபெறுகின்றன.கிழக்கில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்கான பாரியளவிலான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Thileepan e தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை சிங்களவர்கள் பயன்படுத்துகின்றனர் - மட்டு.நகரான்தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை பயன்படுத்தி இன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் பாரியளவிலான தாக்கத்தினை எதிர்காலத்தில் செலுத்தும் என்பதை மறுக்கமுடியாத உண்மையாக நிற்கப்போகின்றது.இன்றைய இந்த பந்தியில் கிழக்கில் இன்று காணப்படும் பல்வேறு விதமான செயற்பாடுகளை சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

தமிழர்கள் ஒன்றுபட்டால் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தமுடியும். தமிழர்கள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் பல்வேறு வகையான நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியும். ஒற்றுமையில்லாத செயற்பாடுகளே இன்று வடகிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் தலைதூக்குவதற்கான பிரதான காரணமாக அமைகின்றது.

இந்த நிலைமை இன்று கிழக்கில் காலூன்றும் நிலைமையினை தடுக்கவேண்டுமானால் முதலில் தமிழ் தேசிய சக்திகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

அண்மையில் பொத்துவில் தொடக்கம் யாழ் வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தூபி திருகோணமலைக்கு அண்மையாக வைத்து அடித்து நொருக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையானது வெறுமனே உணர்வுரீதியாக கிளர்ந்தெழுந்த சிங்களவர்கள் தாக்கினார்கள் என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாத கதையென்று அனைவருக்கும் தெரியும்.

இது மிகவும் திட்டமிட்ட தாக்குதலாகவே கருதப்படவேண்டியுள்ளது. இந்த பேரணியானது பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பமாகி திருகோணமலையினை நெருங்கும் வரையில் பல்வேறு இடங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள் ஊர்திக்கு விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை,ஓட்டமாவடி பகுதியிலும் இதற்கான எதிர்ப்புகள் காட்டப்பட்டுள்ளன.

இப்பகுதியில் நின்ற புலனாய்வாளர்களினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.அங்கு நின்று எதிர்ப்பினை வெளிப்படுத்தியவர்கள் இராணுவ புலனாய்வுப்பிரிவுக்காக கடமையாற்றுவோர் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் ஒருவர் ஜோச் பரராஜசிங்கம் கொலைவழக்கில் பிள்ளையானுடன் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர். இவ்வாறானவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு குழப்பத்தினை ஏற்படுத்துவதற்கு என்பது அனைவருக்கும் தெரியும்.கிழக்கில் தமிழர்களின் உரிமைசார்ந்த போராட்டங்களானாலும் தமது தியாகங்களானாலும் சரி அதனை அனுஸ்டிப்பதற்கான உரிமையினை மற்றும் நிலைமையே காணப்படுகின்றது.எனினும் நாங்கள் நிலைமையினை உணர்ந்து கிழக்கில் செயற்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கிழக்கினைப்பொறுத்த வரையில் ஒன்றுபட்டு மேற்கொள்ளும் போராட்டங்கள் மட்டுமே வெற்றிபெறும் சந்தர்ப்பங்கள் அதிகளவில் கிழக்கில் காணப்படுகின்றன.

குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அனைவரும் இணைந்து முன்னெடுத்த போராட்டம் என்ற காரணத்தினாலேயே மாபெரும் வெற்றியைப்பெற்றது. பல்வேறு தடைகள் கிழக்கில் அதற்கு ஏற்படுத்தப்பட்டபோதிலும் அத்தனை தடைகளும் உடைக்கப்பட்டு போராட்டம் வெற்றியடைந்தது. அந்த போராட்டத்தில் தமிழ் தேசிய பரப்பில் செயற்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்றன.

தமக்குள் முரண்பாடுகள் காணப்பட்டாலும் நோக்கம் பொதுவானது என்ற காரணத்தினால் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்ததன் காரணமாக தடைகள் இலகுவாக துடைத்தெறியப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. பெரும்பான்மையினத்தவர்களே குறுக்கிடுவதற்கு அச்சப்படுமளவுக்கு போராட்டம் வீரியம்கொண்டதாக மாறியது.

இதனை முன்னுதாரணமாக கொண்டு கிழக்கில் போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒன்றுதிரட்டு இவ்வாறான எழுச்சி நிகழ்வுகளை முன்னெடுக்கவேண்டும். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது இவ்வாறான நிகழ்வுகளை தனியாக செய்து தமது அரசியல் ஸ்திரத்தை மட்டும் நோக்காக கொண்டு செயற்படுவது பொருத்தமான செயற்பாடாக ஏற்றுக்கொள்ளமுடியாது.

தியாக தீபம் திலீபன் என்பவர் தியாகத்தின் முழுவடிவமாகவுள்ள நிலையில் அவரது தியாகத்தினை வெறுமனே நாங்கள் அரசியல் ரீதியாக மட்டும் நீக்காமல் ஒட்டுமொத்த வடகிழக்கு தமிழர்களின் தேசிய அபிலாசையாக மாற்றுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்ளவேண்டும்.

இதேபோன்று இன்று மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைக்கான போராட்டம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. ஒன்பதாவது நாளையும் தாண்டிய வகையில் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பல ஆண்டுகாலமாக பரம்பரையாக மேய்ச்சல் தரை காணியாக பயன்படுத்தப்பட்டுவந்த நிலத்தினை சிங்கள பேரினவாத சக்திகள் அபகரித்து முன்னெடுத்துவரும் காணி அபகரிப்பு அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்தும் தமது மேய்ச்சல் தரை காணிகளை மீட்டுத்தருமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

2500க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்ற நிலையில் இந்த சூழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பின் எல்லைப்பகுதியில் மிகவும் மோசமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மயிலத்தமடு,மாதவனை பகுதியில் காணி அபகரிப்புகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அப்பகுதியில் யாரும் தமிழர்கள் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் அப்பகுதிக்கு சென்ற மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் எந்த தமிழர்களும் செல்லமுடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி அப்பகுதியை சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர். தற்போது விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கான இடமில்லாத நிலையில் கால்நடை பண்ணையாளர்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துவருகின்றன. எனினும் இந்த போராட்டத்திற்கான மக்கள் மயப்படுத்தல் என்பது இல்லாத நிலையே இருந்துவருகின்றது.

கால்நடை பண்ணையாளர்கள் மட்டுமே தமது நியாயமான கோரிக்கைக்காக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலான போராட்டங்கள் நடைபெறவில்லையென்பது கவலையான விடயமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இன்று வடகிழக்கினைப்பொறுத்த வரையில் பாதிக்கப்பட்ட சமூகம் மட்டுமே போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.போராட்டங்கள் சமூக மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவே போராட்டங்கள் அதிகளவில் வெற்றியடையாத நிலைமை காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெறுமனே கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைகளாக மட்டுமே இந்த போராட்டத்தினை பார்க்கின்றது.

அத்துடன் தமது அரசியலை காட்டுவதற்கும் முற்படும் நிலைமையே காணப்படுகின்றது.ஆனால் மக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு ஆதரவாக போராடும் நிலைமையினை காணமுடியவில்லை.அவர்களின் இயலாமையே அதற்கு காரணமாக அமைகின்றன.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் தமிழ் தேசிய அரசியலின் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரியதாகவே மாறிவருகின்றது.சட்ட விரோத காணி அபகரிப்புகள் உட்பட பல்வேறு அத்துமீறிய செயற்பாடுகளை தடுப்பதற்கு அல்லது அதனை தடுத்து நிறுத்த மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை நடாத்துவதற்கு திராணியற்றவர்களாகவேயிருந்துவருகின்றனர்.

வெறும் வாக்கு அரசியல் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர தமிழ் தேசியத்தினை தளமூன்ற செய்வதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இதன்காரணமாகவே இந்த அரசியல் மீது தமிழ் மக்கள் அதிர்ப்தியடையும் நிலைமையும் காணப்படுகின்றது.

எனவே கிழக்கினைப்பொறுத்த வரையில் சமூக மயப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் செய்யப்படுதன் மூலமே எதிர்காலத்தில் கிழக்கின் இருப்பினை ஓரளவேணும் பாதுகாக்கமுடியும் என்பதுடன் தமிழ் தேசிய அரசியலையும் பாதுகாக்கமுடியும்.

Exit mobile version